செய்திகள்

தகுதியான பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்க கோரி பொதுமக்கள் சாலைமறியல் ; பட்டியலை ரத்து செய்து அரூர் உதவி கலெக்டர் நடவடிக்கை

தகுதியான பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்க கோரி கொங்கவேம்பு கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பட்டியலை ரத்து செய்து அரூர் உதவி கலெக்டர் பிரதாப் நடவடிக்கை மேற்கொண்டார்.

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றியம், கொங்கவேம்பு கிராம ஊராட்சிக்கு உட்பட்ட எஸ்.பட்டி, கொங்கவேம்பு, பழைய கொங்கம், கூத்தாடிப்பட்டி, வாதாப்பட்டி, கருத்தம்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் கொங்கவேம்பு ஊராட்சியில் 333 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில், 130 பேருக்கு ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில், தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் அரசு ஊழியர்கள், ஏற்கனவே ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பயன் பெற்றவர்கள், 5 ஏக்கருக்கும் அதிகமான நிலம் வைத்துள்ளவர்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்ய பணம் வசூலித்ததாகவும், தகுதியான பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அரூர்- ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலையில் கொங்கவேம்பு கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரூர் தாசில்தார் செல்வகுமார், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் வில்வம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், கோவிந்தராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் பட்டியலை ரத்து செய்து, புதிதாக பயனாளிகள் பெயர் பட்டியலை தயாரிக்க வேண்டும். பணம் வசூல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதுகுறித்து அரூர் உதவி கலெக்டர் பிரதாப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கொங்கவேம்பு ஊராட்சியில் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டிருந்த பயனாளிகள் பட்டியலை ரத்து செய்து உதவி கலெக்டர் பிரதாப் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அரூர்-ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை