பொன்னேரி,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே வேண்பாக்கம் பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வீரா (வயது 28), சுதாகர் (24). நண்பர்களான இவர்கள் இருவரும் ஆலாடு கிராமத்தின் வழியாக நேற்றிரவு சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள மைதானத்தில் கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தவர்களுக்கும், இவர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதால் அந்த கும்பல் வீரா, சுதாகர் ஆகிய 2 பேரையும் கீழே தள்ளி விட்டு அவர்கள் தலையில் கல்லை போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில், பலத்த காயமடைந்த நண்பர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த பொன்னேரி போலீசார் கொலையான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், உதவி போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். ஆலாடு கிராமத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.