செய்திகள்

ராகுல்காந்திக்கு பாகிஸ்தானில்தான் ஆதரவு அதிகம் - மதுரையில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பேச்சு

“ராகுல்காந்திக்கு பாகிஸ்தானில்தான் ஆதரவு அதிகம்” என்று மதுரையில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பரபரப்பாக பேசினார்.

தினத்தந்தி

மதுரை,

குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து மதுரை செல்லூரில் நேற்று மதியம் பா.ஜனதா சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாநில துணை தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் சசிராமன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பேசியதாவது:-

மத்திய பாரதீய ஜனதா அரசு பொதுமக்களுக்கு பயன் உள்ள பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவும் ஒன்று. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

நமது ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு ஆதரவாக தி.மு.க. பேசி வருகிறது. மேலும் அவர்கள் தவறான தகவல்களை பரப்பி மக்களை திசை திருப்புகிறார்கள். மத்தியில் காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த போது இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க கூடாது என்று அரசாணை வெளியிட்ட போது, தி.மு.க. ஏன் எதிர்க்கவில்லை. அப்போது இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் கூட இரட்டை குடியுரிமை வழங்க முயற்சிக்கவில்லை.

பாகிஸ்தானில் உள்ள இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என வாஜ்பாய் ஆட்சியில் ஆதரவளித்த தி.மு.க. தற்போது எதிர்ப்பது ஏன்?

காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டம் என்பது இந்துக்களுக்கு மட்டும் ஆதரவானது என தவறான தகவல்களை பரப்புகின்றன.

தி.மு.க.விற்கு இந்துக்கள் மீது அன்பு இல்லையா? மேலும் பாகிஸ்தானில் இருந்து வரக்கூடிய இந்து, தலித், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் ஆகியோர் இந்தியா வருவதை விரும்பவில்லையா?.

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் இந்திய நலனுக்கு எதிராக பேசுவதால் பாகிஸ்தானில் அவருக்கு ஆதரவு அதிகம். அதனால்தான் காங்கிரசும், தி.மு.க.வும் பாகிஸ்தானை ஆதரிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

காங்கிரஸ் கட்சியினர் பல்கலைக்கழக மாணவர்களை தேசத்திற்கு எதிராக தூண்டுகிறார்கள். தேசத்தை துண்டாட நினைக்கும் காங்கிரசுக்கு ஆதரவாக தி.மு.க. செயல்படுவது ஏன்? இந்திய நலனுக்கு எதிராக தி.மு.க. பேசுவது இது முதல் முறை அல்ல.

இந்தியாவில் மோடி ஆட்சி வரலாற்று பிழைகளை சரி செய்யும் ஆட்சியாக செயல்பட்டு வருகிறது. குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு வலுத்து வருகிறது. பாகிஸ்தான் சிறுபான்மை இனத்தவர்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தி சொல்லி சென்றதை மோடி நிறைவேற்றி வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசும் போது, இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்ததாக கூறிக் கொள்ளும் காங்கிரஸ் கட்சி, மதத்தின் அடிப்படையில் நாட்டை பிரித்தது. இந்தியாவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இஸ்லாமிய நாடுகள் என அறிவித்து கொண்டனர். ஆனால் பிரித்து கொடுத்த இந்தியா ஜனநாயக நாடு.

இந்தியா பிரிக்கப்பட்ட பின்னர் எத்தனை இஸ்லாமியர்கள் குடியரசு தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதி, மத்திய மந்திரிகள் என பெரிய பதவியில் இருந்துள்ளனர். இஸ்லாமியர்கள் இந்தியாவில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என நாட்டை விட்டு யாரும் செல்லவில்லை. ஆனால் பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் இது போன்ற பதவி வகித்தார்களா? பாகிஸ்தானில் இருந்த 20 சதவீதம் இந்துக்கள் நிலை என்ன ஆனது? மதமாற்றம் செய்யப்பட்டார்களா?.

கன்னியாகுமரியில் சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டதற்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவிக்கவில்ல.

ஆனால் பாரதீய ஜனதா கட்சி, காவல்துறைக்கு ஒரு பிரச்சினை என்றால் முன்நின்று போராடும். மாணவர்கள், பொதுமக்கள் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளை நம்பி போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில துணை தலைவர்கள் நயினார் நாகேந்திரன், குப்புராமு, மாநில செயலாளர் சீனிவாசன், மதுரை புறநகர் மாவட்ட தலைவர் சசீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்