புதுடெல்லி,
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 19-வது கூட்டம் தமிழகத்தில் நடந்த நிலையில், 20-வது கூட்டம் குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் காவிரி நீர் பங்கீட்டில் தொடர்புடைய தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழக அரசு சார்பில் திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர் பட்டாபிராமன், உதவி செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. கூட்டத்தில் 4 மாநில பிரதிநிதிகளும் காவிரி நீர் தொடர்பான தங்களது தரப்பு புள்ளி விவரங்களை தலைவரிடம் சமர்ப்பித்தனர். பின்னர் அந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் விவாதங்கள் நடைபெற்றன.
கூட்டம் முடிந்ததும் தலைவர் நவீன்குமார் இதுபற்றி நிருபர்களிடம் கூறுகையில், 4 மாநிலங்களிலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள வானிலை நிலவரம் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காவிரி அணைகளின் நீர்வரத்து குறித்தும் விவாதித்தோம். மழையின் அளவு தொடர்ந்து திருப்திகரமாகவே உள்ளது. இந்த ஆண்டில் நேற்றைய தேதியில் பிலிகுண்டுலுக்கு வந்த நீரின் அளவும் திருப்தி தருவதாக உள்ளது. கடந்த ஆண்டின் நீரியல் விவரங்கள் தொகுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் வழங்கப்பட்டு உள்ளது. இதுபற்றி அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார்.