சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களும் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்தநிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் புதிய முயற்சியாக கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் உடல்நிலை பற்றி தெரிந்து கொள்வதற்கும், அவர்களை எளிதாக தொடர்பு கொண்டு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கும் வாக்கி டாக்கி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை டீன் டாக்டர் தேரனிராஜன் கூறியதாவது:-
தற்போதையை சூழலில் டாக்டர்களும், நோயாளிகளும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதில் எளிதாக இருக்கும் என்பதற்காக வாக்கி-டாக்கி முறையை ஏற்பாடு செய்துள்ளோம். கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு தளத்துக்கும் ஒரு வாக்கி டாக்கி என மொத்தம் 20 டாக்கி வழங்கப்பட்டுள்ளது. மோசமான உடல்நிலையுடன் மருத்துவமனையில் அனுமதியாகும் நோயாளிகள் குறித்து தகவல்களை டாக்டர்களுக்கு உடனடியாக தெரிவிப்பதற்காக இந்த வாக்கி டாக்கி கொரோனா வார்டுகளில் இருக்கும் செவிலியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா வார்டுக்குள் டாக்டர்கள், செவிலியர்கள் யாரும் தங்களது செல்போன்களை கொண்டு வருவதில்லை. அதனால் வாக்கி டாக்கியுடன் சேர்த்து 20 ஆண்ட்ராய்டு செல்போன்களும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள வாக்கி டாக்கி முறை பலன் அளிக்கும் பட்சத்தில் கூடுதலாக வாக்கி டாக்கி மற்றும் செல்போன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
மருத்துவமனையில் அதிகமான உயிரிழப்புகள் அதிகாலையில் ஏற்படுவதால், இரவு பணியில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு பணியர்மத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.