புனே,
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தி மாவட்டத்தில் பிரமாண்டமான ராமர் கோயில் கட்டும் பணியை ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டுள்ளது. இந்த கோயிலில் தரை தளம், முதல் தளம், இரண்டாவது மாடி கொண்ட மூன்று தளங்கள் இருக்கும். ராமர் கோயில் 10 ஏக்கரில் கட்டப்படும், மீதமுள்ள 57 ஏக்கர் ராமர் கோயில் வளாகமாக உருவாக்கப்படும்.
இதுபற்றி அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த தேவகிரி கூறும்பொழுது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்கு, வரும் ஆகஸ்ட் 5ந்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். ஆகஸ்டு 3ந்தேதி சடங்குகளுடன் தொடங்கி ஆகஸ்டு 5ந்தேதி பூமி பூஜையுடன் இந்நிகழ்ச்சி நிறைவடையும். கொரோனா தொற்று காரணமாக, சமூக இடைவெளியை உறுதிசெய்ய இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்ட 150 பேர் உள்பட 200 பேர் மட்டுமே பங்கேற்றிடுவார்கள்.
இந்த கோவிலின் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்கு முன் பிரதமர் மோடி, கோவிலில் உள்ள கடவுள் ராமர் மற்றும் கடவுள் அனுமன் ஆகியோரை வணங்குவார் என கூறியுள்ளார். இதேபோன்று ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள அனைத்து முதல் மந்திரிகளுக்கும் அழைப்பு விடப்படும் என சுவாமி தேவகிரி தெரிவித்துள்ளார்.