புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முகக்கவசம் அணிவதுடன், கிருமிநாசினிகளை பயன்படுத்தி கைகளையும், உடல் பாகங்களையும் சுத்தம் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
இதனால் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி மருத்துவ பொருட்களுக்கு மார்க்கெட்டில் பெருமளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவைகளை பதுக்கி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம்(என்.பி.பி.ஏ) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முகக்கவசம் மற்றும் இதற்கு பயன்படும் மருந்து பொருட்களை அதிகபட்ச சில்லரை விலைக்குமேல் விற்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள் (சுகாதாரம்) மற்றும் மாநில மருந்துக்கட்டுப்பாட்டாளர்களுக்கு தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அதில் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பதை தடுக்கும் விதத்தில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.