செய்திகள்

கவுண்டம்பாளையம்–நல்லாம்பாளையம் சாலையில் பள்ளங்களை மூடக்கோரி நாற்று நடும் போராட்டம்

கவுண்டம்பாளையம்–நல்லாம்பாளையம் சாலையில் உள்ள பள்ளங்களை மூடக்கோரி நாற்று நடும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். மேலும், அரை நிர்வாணமாக சாலைமறியல் செய்த கொ.ம.தே.க.வினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

துடியலூர்,

கோவை மாநகராட்சி பகுதியில் அத்திக்கடவு கூட்டு குடிநீர் திட்டத்திற்கான குழாய் பதிக்கும் பணிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இதில் கவுண்டம்பாளையத்தில் இருந்து நல்லாம்பாளையம் செல்லும் சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய் பதிக்கும் பணிகள் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது.

இந்த வழியாக மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து மணியகாரம்பாளையம், கணபதி, சின்னவேடம்பட்டி வழியாக சத்தி சாலையை அடையலாம். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன.

இந்த நிலையில் குடிநீர் திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாமல் உள்ளதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாலை முழுவதும் சீராக காணப்படுவதால் அங்கு இருக்கும் பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் அதில் விழுந்து படுகாயம் அடைகின்றனர்.

அந்தப்பகுதியில் விபத்து ஏற்பட்டால் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அளவிற்கு சாலை மிகவும் மோசமாக உள்ளது. மேலும் அந்தப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்.

எனவே குழிகளாக காட்சியளிக்கும் இந்த சாலையில் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆவேசமடைந்த அவர்கள் அரை நிர்வாணமாக ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மேற்கு மண்டல மாவட்ட செயலாளர் பிரேம், இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் சீனிவாசன், வேலுச்சாமி, ராம், காந்திய மக்கள் கட்சி பொறுப்பாளர் துரைராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள், அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதைதொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்தப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.