புதுடெல்லி,
பெண்ணையாற்றின் குறுக்கே யார்கோல் கிராமத்தில் தடுப்பணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்தது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இங்கு எவ்வித கட்டுமான பணிகளையும் கர்நாடகம் மேற்கொள்ளக்கூடாது என்றும், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு ஒரு தீர்ப்பாயத்தை அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் யு.யு.லலித், வினித் சரண் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும், கர்நாடகாவின் பதில் மனு தொடர்பாக மனு தாக்கல் செய்ய தமிழக அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த மனு மீதான விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இந்த விவகாரத்தில் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசை, தமிழக அரசு நாடியிருப்பதால் அணை கட்ட இடைக்கால தடை விதிக்கக் கூடாது என்று கர்நாடகா தரப்பில் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.