செய்திகள்

உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் சாலை மறியல்; 77 பேர் கைது

உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சங்ககிரி, மேச்சேரி, வாழப்பாடியில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 77 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

சங்ககிரி,

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மின் திட்டத்தை சாலை ஓரமாக கேபிள் மூலம் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தியும், ஏற்கனவே உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டதற்கு விவசாயிகளுக்கு உரிய நிவாரண தொகை வழங்க கோரியும் சேலம் மாவட்டம் சங்ககிரியில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது.

இதற்கு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சங்ககிரி தாலுகா செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தென்னை விவசாய மாநில செயலாளர் ஜோதிமுருகன் முன்னிலை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் சேகர், மாதர்சங்க தலைவி ஜெயலட்சுமி, விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் செந்தில்குமார் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கவேல் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 28 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இதே போல மேச்சேரி பஸ் நிலையத்தில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணை தலைவர் தங்கவேல், ஒன்றிய பொறுப்பாளர்கள் ரத்தினவேல், மாது உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டு, விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 21 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

வாழப்பாடியில் விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது. இதில் சங்க பிரதிநிதிகள் அன்பழகன், கந்தசாமி, ராமமூர்த்தி, குழந்தைவேல், பழனிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 28 பேரை போலீஸ் துணை சூப்பிரண்டு சூர்யமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

சங்ககிரி, மேச்சேரி, வாழப்பாடியில் மொத்தம் 77 பேர் கைது செய்யப்பட்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்