செய்திகள்

என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானம்: சட்டசபையில் மு.க.ஸ்டாலின்- அமைச்சர் காரசார விவாதம், தி.மு.க. வெளிநடப்பு

என்.பி.ஆர். கணக்கெடுப்பை நடத்தமாட்டோம் என்பதை வலியுறுத்தி சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற மு.க.ஸ்டாலின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், சட்டசபையில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு செய்தது.

தினத்தந்தி

சென்னை,

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

மு.க.ஸ்டாலின்:-2019-ம் ஆண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் பின்னணியில் எடுக்கப்படக்கூடிய என்.பி.ஆர்-ல் சிறுபான்மையினர் உள்பட அனைத்து தரப்பு மக்களும் அச்சத்தில் இருக்கிறார்கள். என்.பி.ஆர்.-2020 படிவத்தில் இருக்கும் சில கேள்விகளைத் தவிர்க்குமாறு மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் எழுதியிருப்பதாக ஏற்கனவே இந்த அவையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு என்ன பதில் வந்திருக்கிறது? என்பதை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

பீகார் சட்டசபையில் என்.பி.ஆர். 2010-ன்படிவத்தின் அடிப்படையில்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் என்.ஆர்.சி. கிடையாது என்றும், தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார். ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி 2020 என்.பி.ஆர். படிவப்படி கணக்கெடுப்பை நடத்த முடியாது என்று அமைச்சரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார். அதைத் தொடர்ந்து தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ், தனக்கே பிறப்புச் சான்றிதழ் இல்லை என்றும் சட்டசபையில் என்.பி.ஆர்., என்ஆர்.சி.க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவித்திருக்கிறார்.

ஏப்ரல் 1-ந்தேதி முதல் என்.பி.ஆர். பணிகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்.ஆர்.சி.க்கு வழி கோலும், என்.பி.ஆர். கணக்கெடுப்பை நடத்தமாட்டோம் என அறிவித்து அமைச்சரவையில், சட்டசபையில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும், இது சம்பந்தமாக வண்ணாரப்பேட்டை, மண்ணடியில் தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. போராடிக் கொண்டிருக்கும் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற ஒரு வாக்குறுதியை இந்த அமைச்சரவையில் இருக்கும் மூத்த அமைச்சர்களோ, அல்லது முதல்-அமைச்சரோ அறிவிக்க வேண்டும்.

(இதே கருத்தை முகமது அபுபக்கர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி) ஆகியோரும் வலியுறுத்தினர்.)

அமைச்சர் உதயகுமார்:-தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி, எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் கணக்கெடுக்கப்படுவார்கள். இதில் 3 புதிய கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. எனவே இதுகுறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி இருக்கிறார். அதற்கு இன்னமும் அதற்கு பதில் வரவில்லை.

தமிழ்நாட்டில் என்.பி.ஆர். குறித்து அறிவிக்கப்படவில்லை. கணக்கெடுப்பு மட்டும் தான் நடத்தப்பட இருக்கிறது. வண்ணாரப் பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியர்கள் முதல்-அமைச்சரை சந்தித்து பேசியிருக்கிறார்கள். சிறுபான்மை மக்களுக்கு எந்த பிரச்சினையும் வராமல் அ.தி.மு.க. அரசு காக்கும் என்று இஸ்லாமியர்களிடம் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் விளக்கம் அளித்து உறுதி கூறியுள்ளனர்.

பொதுவாக மத்திய அரசு கணக்கெடுப்பு நடத்த சொல்லும்போது, அதனை நடத்தி கொடுப்பது தான் மாநில அரசின் பணி. நீங்களும் கணக்கெடுத்து தான் அனுப்பினீர்கள். 2003-ம் ஆண்டு மத்திய கூட்டணி ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தது. அப்போது என்.பி.ஆர். உருவாக்கப்பட்டது. 2010-ல் மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தது. அதனை அமல்படுத்தினார்கள். கணக்கெடுப்பு நடந்தது. ஆனால் இந்த சட்டம் இப்போது தான் கொண்டு வரப்பட்டது போல நினைக்கிறார்கள். 2010-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட விதிகள்படி தான் அன்று கணக்கெடுப்பு நடந்தது. அந்த விதிகளின் படி கணக்கெடுப்பு நடக்க இருக்கிறது. எனவே சிறுபான்மையின மக்கள் அச்சப்பட தேவையில்லை.

மு.க.ஸ்டாலின்:-மத்திய அரசு வெளியிட்டிருக்கும் 2020 என்.பி.ஆர். படிவத்தில் இருக்கும் கெடுபிடிகள் அப்போது கிடையாது. குறிப்பாக ஆவணங்கள் எதையும் காட்டச் சொல்லி கணக்கெடுப்பாளர் கேட்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படவில்லை. குடும்பத் தலைவரின் தாய், தந்தை ஆகியோரின் பிறந்த தேதி கேட்கப்படவில்லை. குடும்பத் தலைவரின் தாய், தந்தை இறந்திருந்தால் கூட அவர்களின் பெயரையும், பிறந்த தேதியையும் கேட்டுப் பெறுங்கள் என்றும் கூறவில்லை. பிறந்த தேதிக்கு ஆவணங்கள் கேட்கப்படவில்லை. வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, பான்கார்டு, பாஸ்போர்ட் எதையும் ஆவணமாக கேட்கவில்லை. இன்னும் ஆணித்தரமாக சொல்ல வேண்டும் என்று சொன்னால், என்.பி.ஆர். 2010 படிவத்தில் மிகத் தெளிவாக பிறந்த தேதி குறித்து எந்த ஆவணத்தையும் பார்க்கத் தேவையில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 2010-ல் எடுக்கப்பட்ட என்.பி.ஆர்., வழக்கமான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மட்டுமே. அதை நாங்கள் எதிர்க்கவில்லை. அதை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

ஆனால் 2020 என்.பி.ஆர். கணக்கெடுப்பு, என்.ஆர்.சி. தயாரிப்பதற்காகவே எடுக்கப்படுகிறது என்பது, படிவங்கள் மூலம் வெளிப்படையாகவே தெரிகிறது. தி.மு.க. மத்திய அரசில் பங்கேற்றபோது என்.பி.ஆர். எடுக்கப்பட்டது என்கிறீர்கள். அந்த என்.பி.ஆர். குடியிருப்புகளை மட்டும் கணக்கெடுக்க நடத்தப்பட்டிருக்கிறது. இதுதான் உண்மை. மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் சட்டம் அப்போது இல்லை. இல்லவே இல்லை.

அமைச்சர் உதயகுமார்:-2010-ல் என்.பி.ஆர். கணக்கெடுப்பு நடந்ததை எதிர்க்கட்சி தலைவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். 2010-ம் ஆண்டு எடுக்கப்பட்டது போல இப்போது எடுத்தால் ஆட்சேபனை இல்லை என்று கூறியிருக்கிறார். ஆவணங்கள் கேட்கப்படுவதாக அவர் கூறினார். அது தவறான தகவல். ஆவணங்கள் கேட்கப்படவில்லை. மத்திய அரசு எல்லா மதத்தை சேர்ந்தவர்களின் விவரத்தை சேகரிக்கிறது. என்.பி.ஆரில் கூடுதலாக சில கேள்விகளை மத்திய அரசு கேட்டிருக்கிறது. தாய் தந்தையர் பிறந்த இடம், தேதி, ஆதார் எண், கைபேசி எண், ஓட்டுனர் லைசென்ஸ் விவரங்கள் கேட்டிருக்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.

மு.க.ஸ்டாலின்:-இந்த விவாதம் பல நேரங்களில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. நான் கேட்டதற்கு அமைச்சர் விளக்கம் தந்திருக்கிறார். நான் சொல்வது தவறா? உண்மையா? அமைச்சர் சொல்வது உண்மையா? தவறா? என்ற விவாதத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. என்.பி.ஆரை நிறைவேற்ற மாட்டோம் என்று மற்ற மாநிலங்களில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். அதுபோன்ற ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றுவதில் என்ன தவறு?

அமைச்சர் உதயகுமார்:-நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றி இருக்கிறார்கள். மாநில அரசு அதற்கு கட்டுப்பட்டது. நாடாளுமன்றத்தில் நிறைவேறிய சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டால் அது சட்டத்தை கட்டுப்படுத்தாது. எனவே, தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு எதிராக பொய்யான தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்ற நாங்கள் விரும்பவில்லை.

மு.க.ஸ்டாலின்:-நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றிவிட்டால் அதுகுறித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்ற விளக்கத்தை அமைச்சர் எடுத்து சொல்லி இருக்கிறார். நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் நீங்கள் அரசு சார்பில் கடிதமே எழுதியிருக்கிறீர்கள். எனவே சட்டம் இயற்றிவிட்டால் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்ற விளக்கத்தை எப்படி ஏற்றுக்கொள்வது? ஆகவே இதுகுறித்து உடனடியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அமைச்சர் உதயகுமார்:-விளக்கம் கேட்பதில் என்ன தவறு?. சுப்ரீம் கோர்ட்டில் இதுசம்பந்தமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் நாம் எப்படி தீர்மானம் கொண்டு வரமுடியும்?.

(இந்த நேரத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் சத்தமாக எதிர்ப்பு குரல் எழுப்பி கொண்டு இருந்தனர்.)

சபாநாயகர்:-எதிர்க்கட்சித்தலைவர் பேசும்போது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமைதியாக இருக்கிறார்கள். எனவே அமைச்சர்கள் பேசும்போது நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-ஒரு சட்டத்தைப் பற்றி சில சந்தேகங்களை எதிர்க்கட்சித் தலைவர் சொல்லியிருக்கிறார். அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர், நான் உள்பட அமைச்சர்கள் இந்தச் சட்டசபையில் விளக்கம் தெரிவித்திருக்கிறோம். அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட ஓர் இயக்கம். எங்களுடைய இயக்கம் அனைத்து சமுதாய மக்களையும் ஒரே சமநிலையில் பாவிக்கக்கூடிய வகையில் தான், கடந்த 40, 45 ஆண்டுகளாக அந்தப் பண்பாட்டைத்தான் நாங்கள் நடைமுறையில் கடைப்பிடித்து வருகிறோம்.

ஆக எந்தவொரு சமுதாயமும், இஸ்லாமிய சமுதாயம் உள்பட, கிறித்தவ சமுதாயம் உள்பட, சிறுபான்மையினப் பெருமக்கள் சார்ந்திருக்கின்ற எந்தச் சமுதாயத்திற்கும், எந்தவொரு தீங்கு ஏற்பட்டாலும், அதனைத் தடுத்து நிறுத்துகின்ற ஆட்சியாகத்தான், இயக்கமாகத்தான், அ.தி.மு.க. இருக்கும் என்பதை நாங்கள் ஏற்கெனவே சட்டமன்றத்தில் தெளிவாகத் தெரிவித்திருக்கின்றோம். எந்தப் பாதிப்பும் எந்தப் பகுதியிலும் இல்லை. வருவதற்கு முன்பாகவே, நாமே பேசிக்கொண்டிருந்தால், அது சரியாக இருக்காது. ஆகவே, யாரும் எந்தவொரு அச்சமும்படத் தேவையில்லை. சிறுபான்மையின மக்களுக்கு எந்தவொரு பாதிப்பு வந்தாலும், அதைத் தடுத்து நிறுத்துகிற சக்தியாகத்தான் இந்த அரசு செயல் படும்.

மு.க.ஸ்டாலின்:-இந்த அவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து நான் வலியுறுத்திக் கொண்டிருக்கிறேன். ஆனால் அரசு இதுகுறித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முன்வராத காரணத்தினால் அதைக் கண்டித்து தி.மு.க. சார்பில் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.

இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர். இதேபோன்று காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் தி.மு.க. உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை