செய்திகள்

திருப்போரூர் அருகே கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட மரகத லிங்கம் மீட்பு

திருப்போரூர் அருகே கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட மரகத லிங்கம் மீட்பு, 2 பேர் கைது

திருப்போரூர்

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் சாலையில் இள்ளலூர் கிராமத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த சுயம்பீஸ்வரர் கோவிலில் இருந்த பழமையான சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள மரகத லிங்க சிலை கடந்த ஜூன் மாதம் 24-ந் தேதி மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

இது தொடர்பாக திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், கல்பாக்கம் இன்ஸ்பெக்ட்டர் ஜான் விக்டர், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து மரகத லிங்கத்தை தேடிவந்தனர்.

போலீஸ் விசாரணையில், இந்த கொள்ளை சம்பவத்தில் மன்னார்குடியைச் சேர்ந்த எஜமான் என்பவரின் மகன் அருள் (வயது 31), பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் ரமேஷ் (26) ஆகியோர் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மன்னார்குடி விரைந்த தனிப்படை போலீசார், நேற்று மாறுவேடத்தில் சென்று அருளை சந்தித்து, திருடப்பட்ட சிலையை விலைக்கு வாங்குவது போல் நைசாக பேசி அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மரகத லிங்கத்தை மீட்டனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் ரமேஷை கைது செய்தனர். இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதுபற்றிய விவரம் வருமாறு:-

அருள் சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் தங்கி இருந்து சுமார் 6 ஆண்டுகளாக ஓட்டலில் சர்வராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அவருக் கும் பல்வேறு வழிப்பறி வழக்கு களில் சம்பந்தப்பட்ட ரமேசுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இவர்கள் இருவரும் பிரதோஷம் அன்று இள்ளலூர் சுயம்பீஸ்வரர் கோவிலுக்கு செல்வது வழக்கம். அப்போது அப்பகுதியில் உள்ள பக்தர்கள் கோவிலை பற்றி பேசும்போது, அங்கு விலைமதிக்கமுடியாத மரகத லிங்கம் இருப்பதாக சாமியார் ஒருவர் தெரிவித்ததாக கூறி உள்ளனர். இதனால் இருவரும் மரகத லிங்கத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.

இதற்காக ஜூன் 6-ந் தேதி இருவரும் கணேஷ் என்பவருடன் அங்கு இருசக்கர மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது கிராம மக்கள் துரத்தியதால் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு ஓடிவிட்டனர். அந்த மோட்டார் சைக்கிளையும், அவர்கள் விட்டுச்சென்ற சில ஆவண நகல்களையும் கிராம மக்கள் கைப்பற்றி திருப்போரூர் போலீசில் ஒப்படைத்தனர்.

அதன்பிறகு அருளும், ரமேசும் மீண்டும் ஜூன் 24-ந் தேதி இள்ளலூர் சென்று, கோவிலில் இருந்த மரகத லிங்கத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். கைதான இருவரையும் போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருக்கும் கணேசை தேடி வருகிறார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்