செய்திகள்

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.4½ லட்சம் பறிப்பு

மேல்மலையனூர் அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.4½ லட்சத்தை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேல்மலையனூர்,

விழுப்புரம் அருகே உள்ள வளவனூரை சேர்ந்தவர் ராஜ் (வயது 51). அதேபகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தினந்தோறும் சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் ஒரு வேனில் பாமாயில் பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு ஊர், ஊராக சென்று அங்குள்ள கடைகளில் விற்பனை செய்து விட்டு, அதற்குரிய விற்பனை தொகையை தனியார் நிறுவன உரிமையாளரிடம் கொடுப்பது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் காலை ராஜ், சுமை தூக்கும் தொழிலாளர்களான மணிகண்டன், காமேஷ் ஆகியோருடன் பாமாயில் பாக்கெட்டுகளை விற்பனை செய்ய ஒரு வேனில் கெடார், வேட்டவலம், கீழ்பெண்ணாத்தூர், அவலூர்பேட்டை, சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளுக்கு சென்றார். வேனை சங்கர் என்பவர் ஓட்டினார்.

பின்னர் அவர் அப்பகுதி கடைகளில் பாமாயில் பாக்கெட்டுகளை விற்பனை செய்துவிட்டு, அதற்கான தொகை 4 லட்சத்து 59 ஆயிரத்து 910 ரூபாயை தனது பணப்பையில் வைத்திருந்தார். மேல்மலையனூர் அடுத்த வளத்தியில் டிரைவர் சாப்பிடுவதற்காக வேனை சாலையோரம் நிறுத்தி விட்டு, அருகில் உள்ள ஓட்டலுக்கு சென்றார். அப்போது அவருடன் மணிகண்டன், காமேசும் உடன் சென்றனர்.

ராஜ் மட்டும் பணப்பையுடன் வேனில் அமர்ந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர், ராஜ் வைத்திருந்த பணப்பையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ் திருடன், திருடன் என கூச்சலிட்டார். இதைக்கேட்ட சாப்பிட சென்றிருந்த ஊழியர்கள், வேன் டிரைவர் ஆகியோர் விரைந்து வந்து மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்மநபரை விரட்டிச் சென்றனர். இருப்பினும் அந்த மர்மநபரை பிடிக்கமுடியவில்லை.

இதுகுறித்த புகாரின்பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.4 லட்சத்தை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.