பரமத்திவேலூர்,
பரமத்தி ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி அலுவலகத்தில், வேளாண்மைத்துறையின் மூலம் கூட்டு பண்ணையத் திட்டத்தின் கீழ் பரமத்தி, கபிலர்மலை மற்றும் மோகனூர் வட்டாரத்தை சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு சுழற்கலப்பை, கலப்பை, புல்வெட்டும் கருவி மற்றும் தூளாக்கும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்செங்கோடு உதவி கலெக்டர் ப.மணிராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 8 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி கூட்டுப்பண்ணையத்திட்டத்தின் மூலம் 38 சுழல் கலப்பைகள், 12 கலப்பைகள், 6 புல் வெட்டும் கருவிகள், தூளாக்கும் கருவி ஒன்று என மொத்தம் 57 பண்ணை எந்திரங்கள் ரூ.45 லட்சம் மானியத்தில் வழங்கினார்.
பின்னர் பரமத்தி, வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில், முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் தொகுப்பினை திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ் தலைமையில், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் முன்னிலையில் அமைச்சர் வழங்கினார்.
இதில், வேளாண் இணை இயக்குனர் சேகர், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கண்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயலட்சுமி, பரமத்தி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் திலகவதி, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் சுகுமார், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் சுரேஷ்குமார், அரசு வக்கீல் தனசேகர், வேளாண்மை துணை இயக்குனர்கள், வேளாண்மை உதவி இயக்குனர்கள் உள்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.