தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. முதல்கட்ட தேர்தலில் 1,126 பதவிகளுக்கும், 2-வது கட்ட தேர்தலில் 1,275 பதவிகளுக்கும் என மொத்தம் 2,401 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் அந்தந்த யூனியனுக்கான வாக்குப்பதிவு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறையானது தேர்தல் பார்வையாளர் சம்பத் முன்னிலையில் நேற்று காலையில் திறக்கப்பட்டது. பின்னர் அங்கு இருந்த வாக்குப்பெட்டிகள் ஒவ்வொன்றாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைக்கு கொண்டு வரப்பட்டது. சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில், வாக்குப்பெட்டிகளின் சீல் அகற்றப்பட்டது.
பின்னர் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் என 4 பதவிகளுக்கான வாக்குச்சீட்டுகளையும் தனித்தனியாக பிரித்து, 50 எண்ணிக்கையில் கட்டினர். தொடர்ந்து 4 பதவிகளுக்குமான வாக்குச்சீட்டுகளையும் அந்தந்த வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு சென்று எண்ணும் பணி நடந்தது.
ஒவ்வொரு பதவிக்கும் போட்டியிட்டவர்களின் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னரும் இறுதி முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஓட்டப்பிடாரம் யூனியனுக்கான வாக்குகள் எண்ணப்பட்டது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அந்த வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டது. தூத்துக்குடியில் நடந்த வாக்கு எண்ணும் பணியை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வாக்கு எண்ணும் பணியானது விடிய விடிய நடந்தது.
இரவு 7 மணி நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 பஞ்சாயத்து யூனியன்களில் அ.தி.மு.க. அதிக இடங்கள் பிடித்த பஞ்சாயத்து யூனியன்கள் விவரம் பின்வருமாறு;-
ஸ்ரீவைகுண்டம் பஞ்சாயத்து யூனியனில் 14 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 7 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் 6 இடங்களை அ.தி.மு.க. வேட்பாளர்கள் கைப்பற்றினர். 1-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் வாசுகி 1,328 வாக்குகளும், 2-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் விஜயன் 1,416 வாக்குகளும், 3-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துசெல்வன் 1,238 வாக்குகளும், 7-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் ரமேஷ் 1,121 வாக்குகளும், 8-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் சுடலைவடிவு 1,414 வாக்குகளும், 9-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் சுந்தரி 1,152 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். இதில் சுந்தரி ஒரு வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளரை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 11-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் சோமசுந்தரி 1,224 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
புதூர் பஞ்சாயத்து யூனியனில் 13 வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் 3 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 3 இடங்களை அ.தி.மு.க. வேட்பாளர்கள் கைப்பற்றினார்கள். 1-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் சுகன்யா 1,436 வாக்குகளும், 2-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் விஜயகுமார் 1,774 வாக்குகளும், 3-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் மகாலட்சுமி 1,490 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.
விளாத்திகுளம் பஞ்சாயத்து யூனியனில் 16 வார்டு உறுப்பினருக்கான தேர்தல் நடந்தது. இதில் 3 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 2 இடங்களை அ.தி.மு.க. வேட்பாளர்கள் கைப்பற்றினார்கள். 1-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆண்டாளம்மாள் 1,036 வாக்குகளும், 2-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் முனியசாமி 1,691 வாக்குகளும், 3-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் தர்மராஜ் 1,673 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியனில் 19 வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில் 5 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 1-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் ரேவதி 1,905 வாக்குகளும், 2-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் விமலாதேவி 907 வாக்குகளும், 3-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் கஸ்தூரி 890 வாக்குகளும், 4-வது வார்டில் தே.மு.தி.க. வேட்பாளர் நிர்மலா 1,204 வாக்குகளும், 5-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் சுந்தரேசுவரி 1160 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.
திருச்செந்தூர் பஞ்சாயத்து யூனியனில் 5 வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில் 1-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் ராமலட்சுமி 1,844 வாக்குகளும், 2-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் வாசுகி 914 வாக்குகளும் பெற்றனர்.
மேலும் கயத்தாறு பஞ்சாயத்து யூனியனில் 16 வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடந்தது. 9 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் 4 இடங்களில் அ.ம.மு.க.வினர் வெற்றி பெற்று உள்ளனர். 1-வது வார்டில் ம.தி.மு.க. வேட்பாளர் முத்துலட்சுமி 2,120 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் மகேசுவரி 1,110 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3-வது வார்டில் அ.ம.மு.க வேட்பாளர் கோட்டூர் சாமி 1,648 வாக்குகளும், 4-வது வார்டில் ம.தி.மு.க. வேட்பாளர் ஜெயசந்திரன் 1,459 வாக்குகளும், 5-வது வார்டில் அ.ம.மு.க. வேட்பாளர் மனோராஜ் 2,046 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். 6-வது வார்டில் அ.ம.மு.க. வேட்பாளர் மூக்கம்மாள் 2,159 வாக்குகளும், 7-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் மகாலட்சுமி 1,450 வாக்குகளும், 8-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் தங்கஈசுவரி 2,056 வாக்குகளும், 9-வது வார்டில் அ.ம.மு.க. வேட்பாளர் மல்லிகா 1,755 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.
சாத்தான்குளம் பஞ்சாயத்து யூனியனில் 14 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 7 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 4 இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 1-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் பிரணிலா கார்மல் 1,897 வாக்குகளும், 2-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் மேரி பொன்மலர் 727 வாக்குகளும், 3-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் சுமதி 1,309 வாக்குகளும், 4-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் குருசாமி 882 வாக்குகளும், 5-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயபதி 902 வாக்குகளும், 6-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் லதா 1,672 வாக்குகளும், 7-வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் சுபா கிருஷ்டி பொன்மலர் 1,245 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.
கருங்குளம் பஞ்சாயத்து யூனியனில் 16 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்தது. 8 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 4 இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 1-வது வார்டில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் சண்முகம் 1,289 வாக்குகளும், 2-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் லட்சுமணபெருமாள் 1,370 வாக்குகளும், 3-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் மணிகண்டன் 747 வாக்குகளும், 4-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் அண்ணாமலை 1,631 வாக்குகளும், 5-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துராமலிங்கம் 861 வாக்குகளும், 6-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் ராதா 1,085 வாக்குகளும், 7-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் கோமதி 1,733 வாக்குகளும், 8-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் வசந்தி 1447 வாக்குகளும் பெற்றனர்.
இரவு 9 மணி நிலவரப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் 215 பஞ்சாயத்து தலைவர்கள், 984 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இரவிலும் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதையொட்டி தேர்தல் பணியில் அலுவலர்கள் சுழற்சி முறையில் ஈடுபட்டனர்.
இரவில் வாக்கு எண்ணும் மையத்தின் வளாகத்திலேயே வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் தங்கினர். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின்போதும் வேட்பாளர்களின் முகவர்களும் மாறி மாறி வந்து, வாக்கு எண்ணிக்கையை பார்வையிட்டனர்.