காஞ்சீபுரம்,
சின்ன காஞ்சீபுரம் அம்மங்காரத்தெரு பகுதியில் மணல் கடத்தப்படுவதாக சின்ன காஞ்சீபுரம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் முரளிக்கு தகவல் வந்தது. அதையொட்டி அவர் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார். அப்போது மாட்டு வண்டியில் மணல் கடத்தியதாக கல்குளம் பகுதியை சேர்ந்த ராஜா (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் காஞ்சீபுரத்தை அடுத்த அய்யங்கார்குளம், புஞ்சையரசன்தாங்கல், பெரியார் நகர் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் முரளிக்கு தகவல் வந்தது. அதையொட்டி அவர் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார். அப்போது மாட்டு வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தப்படுவது தெரியவந்தது. இதையொட்டி மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய அய்யங்கார்குளத்தை சேர்ந்த மணிகண்டன் (28), குமார் (24), பரமசிவம் (47), அப்துல்லாபுரத்தை சேர்ந்த தயாளன் (24), சண்முகம் (35), கட்சபாளையம் (40), புஞ்சையரசன்தாங்கலை சேர்ந்த விஜயன் (42), சேகர் (42) மற்றும் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய ரஜினி (36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
காக்கநல்லூர்
உத்திரமேரூரை அடுத்த காக்கநல்லூர் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக உத்திரமேரூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் வேணுகோபாலுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து அவர் அந்த பகுதிக்கு போலீசாருடன் சென்று பார்த்தபோது மணல் கடத்துவது தெரிய வந்தது. இதையொட்டி உத்திரமேரூரை அடுத்த சித்தாளப்பாக்கத்தை சேர்ந்த பழனி (29), துரைக்கண்ணு (32), ரகு (31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கூவம் ஆற்றில்
திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூர் அருகே உள்ள கூவம் ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக கடம்பத்தூர் போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சப்இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் ஏகாட்டூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த 2 மாட்டு வண்டிகளை கைப்பற்றி அதை ஓட்டி வந்த அதிகத்தூரை சேர்ந்த சகாதேவன் (45), ஏகாட்டூர் அன்னை இந்திராநகரை சேர்ந்த ஜெகன் (22) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பாண்டூர்
திருக்கழுக்குன்றத்தை அடுத்த பாண்டூர் பாலாற்றில் இருந்து மணல் கடத்துவதாக திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதை யடுத்து போலீசார் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாலாற்றில் இருந்து மாட்டுவண்டிகளில் மணல் கடத்தி வந்த பாண்டூரை சேர்ந்த முனுசாமி (45), சொக்கலிங்கம் (42), பச்சையப்பன் (39), மூர்த்தி (44), நடராஜ் (41), பரமசிவம் (40), மகாலிங்கம் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.