செய்திகள்

சங்கரன்கோவில் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்களிடம் நகை பறிப்பு வீடு புகுந்து மர்மநபர்கள் கைவரிசை

சங்கரன்கோவில் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் வீடு புகுந்து 2 பெண்களிடம் மர்மநபர்கள் நகையை பறித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சங்கரன்கோவில்,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வேப்பங்குளத்தை சேர்ந்தவர் முருகையா. இவருடைய மனைவி ராமலட்சுமி (வயது 58). முருகையா வெளியூர் சென்றுவிட்டார். இதனால் ராமலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு ராமலட்சுமி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் வீட்டின் மாடி வழியாக வீட்டுக்குள் புகுந்து, ராமலட்சுமி அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டார்.

சங்கரன்கோவிலை அடுத்த சின்னகோவிலான்குளம் அருகே உள்ள தர்மத்தூரணி வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகையா.

இவருடைய மனைவி ஆனந்தி (40). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டு கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினர். அப்போது மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து ஆனந்தி அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்றுவிட்டார்.

இந்த சம்பவங்கள் குறித்து 2 பேரும் சின்னகோவிலான்குளம் போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர்.

அந்த புகார்களின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து கைவரிசை காட்டிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.