செய்திகள்

ஈரோடு அருகே பரபரப்பு, பள்ளிக்குள் புகுந்து விடைத்தாள்களை கிழித்து மர்ம நபர்கள் அட்டூழியம் - கழிவறை கதவுகளும் உடைப்பு

ஈரோடு அருகே அரசு உயர்நிலைப்பள்ளிக்குள் புகுந்து விடைத்தாள்களை கிழித்து எறிந்தும், கழிவறை கதவுகளை உடைத்தும் மர்ம நபர்கள் அட்டூழியம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளிக்கூடத்தில் சுந்தராம்பாளையம், ஊமாரெட்டியூர், மூனாஞ்சாவடி, கோலக்காரனூர், அந்தோணிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 195 மாணவ- மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படித்து வருகிறார்கள்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக இந்த பள்ளிக்கூடம் உள்ளது. பள்ளிக்கூடத்துக்கு சுற்றுச்சுவர் கிடையாது. ஆனால் பள்ளி வகுப்பறைக்குள் யாரும் செல்லக்கூடாது என்பதற்காக நுழைவு வாயிலில் ஷட்டர் கதவு போடப்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் இரவு இந்த பள்ளிக்கூடத்துக்கு மர்ம நபர்கள் வந்து உள்ளனர். ஷட்டர் கதவு பூட்டப்பட்டிருந்ததால் அவர்களால் பள்ளிக்கூடத்துக்குள் செல்ல முடியவில்லை. உடனே அவர்கள் அருகில் இரும்பு கிரில் வைத்து அமைக்கப்பட்ட பெரிய ஜன்னலில் உள்ள இடைவெளி வழியாக பள்ளிக்குள் சென்றனர்.

பின்னர் பள்ளியின் 2-வது தளத்துக்கு சென்ற அவர்கள் 10-ம் வகுப்பு விடைத்தாள் உள்ள அறைக்குள் புகுந்தனர். அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த பருவத்தேர்வு விடைத்தாள்கள் மற்றும் ரேங்க் அட்டை ஆகியவற்றை கிழித்து அங்குள்ள வராண்டாவில் வீசியுள்ளனர். இதையடுத்து கீழ் தளத்துக்கு சென்ற அவர்கள் கழிப்பறை கதவுகளை உடைத்து எறிந்தனர். மேலும் அங்குள்ள கோப்பைக்குள் தண்ணீர் பாட்டில அழுத்தி வைத்துவிட்டனர். அதுமட்டுமின்றி மதுபாட்டில்களையும் உடைத்து எறிந்தனர். பின்னர் அவர்கள் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறி உள்ளனர். வெளியில் செல்லும் போது ஷட்டர் கதவின் உள்புறமாக சிறிய கம்பியை வைத்து முறுக்கி வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்துக்கு வந்து ஷட்டர் கதவை திறக்க முயன்றனர். அப்போது முடியவில்லை. இதைத்தொடர்ந்து கடப்பாரை கம்பியை கொண்டு நெம்பி கதவை திறந்தனர். கம்பியை கொண்டு நெம்பியபோது உள்பக்கமாக முறுக்கி வைக்கப்பட்ட கம்பி அறுந்தது. இதைத்தொடர்ந்து ஆசிரியர்கள் உள்ளே சென்றனர்.

அப்போது யாரோ மர்ம நபர்கள் பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து உள்ளது ஆசிரியர்களுக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் பள்ளிக்கூடத்தின் ஒவ்வொரு தளமாக சென்று பார்வையிட்டனர். 2-வது தளத்தில் 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளின் விடைத்தாள்கள் மற்றும் ரேங்க் பட்டியல் கிழிக்கப்பட்டு கீழே வீசப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கீழ் தளத்தில் உள்ள கழிப்பறை கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்ததையும் கண்டனர்.

இதுபற்றி அறிந்ததும் அம்மாபேட்டை போலீசார் பள்ளிக்கூடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், பள்ளிக்கூடத்தில் விலையுயர்ந்த 12 கம்ப்யூட்டர்கள் உள்ளன. ஆனால் அந்த அறைக்கு மர்ம நபர்கள் செல்லவில்லை. குறிப்பாக விடைத்தாள்கள் உள்ள அறைக்கு மர்ம நபர்கள் சென்று உள்ளனர். அந்த அறைக்கு பூட்டு இல்லாததால் எளிதாக அங்கு வைக்கப்பட்டிருந்த விடைத்தாள்கள் மற்றும் ரேங்க் அட்டைகளை எடுத்து கிழித்து எறிந்து உள்ளனர். மேலும் அந்த அறையில் ஒரு கேனில் லிட்டர் மண்எண்ணயும் வைக்கப்பட்டிருந்தது. எனவே வந்த மர்ம நபர்கள் விடைத்தாள்களை மண்எண்ணெய் ஊற்றி எரித்துவிடலாம் என்ற எண்ணத்தில் வந்து உள்ளனர். ஆனால் அவ்வாறு செய்யாமல் தாங்கள் கொண்டு வந்த மண்எண்ணெய் கேனை அங்கேயே விட்டு விட்டு சென்றுவிட்டனர், என தெரியவந்தது. விடைத்தாள்கள் மற்றும் ரேங்க் பட்டியல்களை குறி வைத்து தான் இந்த அட்டூழிய சம்பவம் நடந்து உள்ளதால் மாணவர்கள் யாராவது இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா? அல்லது மாணவர்கள் சார்பில் வேறு யாராவது ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கூடத்துக்கு திரண்டு வந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி பெற்றோர்கள் கூறுகையில், இந்த பள்ளிக்கூடத்துக்கு சுற்றுச்சுவர் அமைப்பதுடன், இரவு நேர காவலாளியும் நியமிக்க வேண்டும், என்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து