செய்திகள்

பெண்களுக்கு பாலியல் கொடுமை நடந்ததாக புகார் கொடுத்த விவகாரம்: கைதான வக்கீல் கோர்ட்டில் ஆஜர்

பெரம்பலூரில் பெண்களுக்கு பாலியல் கொடுமை நடந்ததாக புகார் கொடுத்ததில் கைதான வக்கீல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அந்த வக்கீல் பாலியல் கொடுமை புகார் தொடர்பாக மேலும் முக்கிய ஆதாரங்களை வெளியிடுவதாக தெரிவித்தார்.

தினத்தந்தி

பெரம்பலூர்,

பெரம்பலூரில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் வேலை வாய்ப்பு மற்றும் இதர பிரச்சினைகளுக்காக தங்களை தேடி வரும்போது ஆசைவார்த்தை கூறி, அவர்களை அ.தி.மு.க. முக்கிய பிரமுகர் மற்றும் சிலர், போலி பத்திரிகையாளர் ஒருவர் உதவியுடன் பாலியல் தொந்தரவு செய்ததாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள் கடந்த மாதம் ஏப்ரல் 21-ந் தேதி பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் வக்கீல் அருள் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மேற்கண்ட புகார் தொடர்பாக தன்னுடன் செல்போனில் பேசிய ஆடியோவினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அ.தி.மு.க. முக்கிய பிரமுகர் பற்றி எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இன்றி ஆடியோ ஒன்றை வெளியிட்டு, தவறான செய்தியையும் பரப்பி வரும் வக்கீல் அருளை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட வக்கீல்கள் நலச்சங்கத்தை சேர்ந்த வக்கீல்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தனர். அதன்பேரில், பெரம்பலூர் போலீசார் கடந்த 30-ந் தேதி வக்கீல் அருளை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் அவரை குற்றவியல் நடுவர் நீதிபதி அசோக்பிரசாத் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர் வக்கீல் அருளை 2 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து வக்கீல் அருள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று மதியம் வக்கீல் அருளை பெரம்பலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்து வந்தனர். பின்னர் பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த் முன்னிலையில் வக்கீல் அருள் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது வக்கீல் அருளை வருகிற 14-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வக்கீல் அருளை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

முன்னதாக திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்ல வேனில் ஏற்றிய போது வக்கீல் அருள் நிருபர்களிடம் கூறுகையில், சிலரிடம் பொய்யான வாக்குறுதிகளை பெற்று, தன் மீது மேலும் வழக்குகள் பதிவு செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. பாலியல் சம்பவம் நடந்த நட்சத்திர ஓட்டலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் அகற்றி விட்டதாக தெரிகிறது. அதில், பதிவான காட்சிகளை பார்வையிட்டு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் ஜாமீனில் வெளியே வந்த பிறகு பெரம்பலூரில் நடந்த பாலியல் கொடுமை தொடர்பான மேலும் முக்கிய ஆதாரங்களை வெளியிடுவேன், என்றார். பெரம்பலூரில் பெண்களுக்கு பாலியல் கொடுமை நடந்துள்ளதாக புகார் கொடுத்ததில் கைதான வக்கீல் கோர்ட்டில் ஆஜர்படுத்த வந்ததால் நேற்று கோர்ட்டு பரபரப்பாக காணப்பட்டது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்