செய்திகள்

மும்பை–நாக்பூர் விரைவுச்சாலை திட்டத்தை சிவசேனா எதிர்க்கவில்லை

மும்பை– நாக்பூர் விரைவுச்சாலை திட்டத்தை சிவசேனா எதிர்க்கவில்லை என்று பொதுப்பணித்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

நாக்பூர்,

மராட்டியத்தின் இருபெரும் நகரங்களாக விளங்கும் மும்பை, நாக்பூர் இடையே 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு விரைவுச்சாலை அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ரூ.46 ஆயிரம் கோடி செலவில் இத்திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

இத்திட்டத்தின்கீழ் நாசிக், புல்தானா, அமராவதி, வார்தா, வாஷிம், தானே, அவுரங்காபாத், அகோலா, பிவண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, சாலை அமைக்கப்படுகின்றன. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மும்பை நாக்பூர் விரைவுச்சாலை திட்டத்துக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில், நாக்பூர் மாவட்டம் ஹிங்கனா தாலுகாவில் இந்த விரைவுச்சாலை திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நில உரிமையாளர்கள் 6 பேர், தங்களுடைய நிலங்களை மாநில அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.

இதையொட்டி, ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் நில விற்பனை பத்திரத்தில் அவர்கள் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை மந்திரி ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) கலந்து கொண்டார். அவர் பேசுகையில் கூறியதாவது:

மும்பை நாக்பூர் விரைவுச்சாலை திட்டத்துக்கு சிவசேனா ஒருபோதும் எதிர்ப்பு தெரிவித்தது கிடையாது. விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க தான் நாங்கள் விரும்புகிறோம். இதனால் தான் நாக்பூருக்கு நான் வந்தேன். நில உரிமையாளர்களும், விவசாயிகளும் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டால், நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்.

இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.