மும்பை,
மராட்டியத்தில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் நேற்று முன்தினம் லாத்துரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் பிரசாரம் செய்தனர்.
இந்த நிலையில் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை, காஷ்மீர் விவகாரம் உள்ளிட்டவை குறித்து சிவசேனா தனது கட்சி பத்திரிகையான சாம்னாவில் கருத்து தெரிவித்து உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பாகிஸ்தானை தாக்கிய தைரியமிக்க இதயங்களுக்கு மரியாதை செலுத்துங்கள் என பிரதமர் மோடி லாத்தூர் பொதுக்கூட்டத்தில் விடுத்த உணர்ச்சிகரமான வேண்டுகோளுக்கு சிவசேனாவும் ஒப்புதல் அளிக்கிறது.
பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், ஏழைகள், கல்வி மற்றும் சிறு வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் அறிக்கையின் மூலம் ஏழ்மையை ஒழிக்க பிரதமர் மோடி மந்திரம் வழங்குகிறார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்வது, ராமர் கோவில் கட்டுவது என வாக்குறுதி அளித்துள்ள பா.ஜனதா தேர்தல் அறிக்கைக்கு 100-க்கு 200 மதிப்பெண்ணை சிவசேனா வழங்குகிறது.
பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையானது தேசியவாதத்தை ஊக்கப்படுத்தும் விதமாக உள்ளது. மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பயங்கரவாத ஊடுருவல்களை தடுக்கும் விதமாகவும், பயங்கரவாதிகளுக்கான சகிப்புதன்மைக்கு எதிராகவும் உள்ளது.
ஜம்மு- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தால், இந்தியாவில் இருந்து ஜம்மு-காஷ்மீர் பிரிந்து சுதந்திரம் பெறும். மேலும் அதற்கு தனி பிரதமர் உருவாகுவார் என அந்த மாநில முன்னாள் முதல்-மந்திரிகள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் மிரட்டுகிறார்கள். அவ்வாறு கூறுபவர்கள் வாயை மூட செய்வது அவசியம்.
ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டால், அங்கு தேசிய கொடியை யார் பறக்க விடுவார் என பார்ப்போம் என்று பரூக் அப்துல்லா கூட மிரட்டுகிறார். இப்படி சொல்பவர்களின் நாக்குகள் வெட்டப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.