திருவொற்றியூர்,
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, வேலை வாய்ப்பை உறுதி படுத்து, தொழிலாளர்கள் நல சட்டத்தை திருத்தாதே என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்காக திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்திய பொதுக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஊர்வலமாக சென்று திருவொற்றியூர் தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட ஜி.ராமகிருஷ்ணன் உட்பட 200 பேரை கைது செய்த, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.