திருப்பூர்,
கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் விடைத்தாள் திருத்திய ஆசிரிய-ஆசிரியைகளுக்கு இது வரை ஊதியம் வழங்கப்பட வில்லை. இது குறித்து ஆசிரியர்கள் பலமுறை கேட்டும் அந்த தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி திருப்பூர் மாவட்டத்தில் செயின்ட் ஜோசப் மெட்ரிக்பள்ளி மற்றும் தாராபுரம் தேன்மலர் மெட்ரிக் பள்ளி ஆகிய 2 இடங்களில் கடந்த 1-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. வழக்கமாக காலை 9.30 மணிக்கு இந்த பணி தொடங்கும். ஆனால் பணிக்கு வந்த ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் ஆசிரிய-ஆசிரியைகள் விடைத்தாள் திருத்தும் மையத்துக்குள் செல்லாமல் பணியை புறக்கணித்து மையத்தின் முன்புறம் நின்று கொண்டு திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மற்ற பாட ஆசிரியர்களும் வெளியில் நின்று கொண்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு தரையில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
இது குறித்து ஆசிரியர்களிடம் கேட்ட போது, கடந்த ஆண்டு ஆங்கிலம், சமூகஅறிவியல் விடைத்தாள் திருத்தியதற்கான ஊதியம் எங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. பலகட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு இன்று (நேற்று) வழங்குவதாக அறிவித்து இருந்தனர். ஆனால் இது வரை வழங்கப்படவில்லை. எனவே ஊதிய தொகை வழங்கினால் மட்டுமே பணியை தொடர்வோம்.
இதைத்தொடர்ந்து கல்வி அதிகாரிகள் 11 மணியளவில் பணத்தை கொண்டு வந்து ஆசிரியர்களுக்கு வழங்கினார்கள். பணத்தை பெற்றுக்கொண்ட ஆசிரியர்கள் 11.30 மணிக்கு பணிக்கு திரும்பினார்கள். இதனால் சுமார் 2 மணி நேரம் விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டது.
ஆசிரியர்களின் போராட்டம் குறித்து விடைத்தாள் திருத்தும் மைய பொறுப்பு அதிகாரி கனகமணி கூறும் போது, ஆசிரியர்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதிய தொகை மையபொறுப்பு அதிகாரி பெயரில் பள்ளிக்கல்வித்துறையில் இருந்து வங்கி வரைவோலையாக கடந்த மாதம்தான் வந்தது. அந்த தொகையை உடனடியாக அவரவர் வங்கி கணக்கில் சேர்க்கும்படி வங்கிக்கு கடிதம் கொடுத்து விட்டோம். ஆனால் வருட கடைசி என்பதால் அந்த தொகை ஆசிரியர் கணக்கில் சேர்க்க முடியாமல் போய் விட்டது.
எனவே அந்த கடிதத்தை ரத்து செய்து விடும்படி மற்றொரு கடிதத்தை கொடுத்து விட்டு, வங்கியில் இருந்து பணமாக வாங்கி கொண்டு வந்து ஆசிரியர்களுக்கு கொடுத்து விட்டோம். அதே போல் தாராபுரம் மையத்துக்கும் பணத்தை கொடுத்து அனுப்பி விட்டோம். பணத்தை பெற்றுக்கொண்ட ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கு திரும்பி விட்டார்கள். தற்போது வழக்கம் போல விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.
இதே போல் தாராபுரத்தில் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில், விடைத்தாள்கள் திருத்தும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் தாராபுரம், மடத்துக்குளம், காங்கேயம், மூலனூர், குண்டடம், வெள்ளகோவில், கணியூர் உள்ளிட்ட பல ஊர்களை சேர்ந்த ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று விடைத்தாள்களை திருத்துவதற்காக வந்த ஆசிரியர்கள், கடந்த ஆண்டு விடைத்தாள்கள் திருத்தியதற்காக, ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய சிறப்பு ஊதியத்தொகையை, அரசு உடனே வழங்க வேண்டும் எனக்கோரி திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஆசிரியர்கள் நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். நிலுவைத்தொகை கிடைத்தால் மட்டுமே விடைத்தாள் திருத்தும் பணியை தொடருவோம் என தெரிவித்தார்கள். அதற்கு பிறகு சிறிது நேரத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கு நிலுவைத்தொகை வழங்கப்பட்டது. நிலுவைத்தொகையை பெற்றுக் கொண்ட ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.