சிறப்புக் கட்டுரைகள்

2019-ஆம் ஆண்டில் 139 கோடி கிலோ தேயிலை உற்பத்தி

கடந்த 2019-ஆம் ஆண்டில், 139 கோடி கிலோ தேயிலை உற்பத்தி ஆகி இருக்கிறது.

சர்வதேச அளவில், தேயிலை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உள்நாட்டில் தேயிலை உற்பத்தியில் அசாம் மாநிலம் 50 சதவீத பங்குடன் முதலிடத்தில் இருந்து வருகிறது. உயர்தர தேயிலையான ஆர்தோடக்ஸ் ஈராக், ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. சி.டி.சி. தேயிலை பெரும்பாலும் எகிப்து, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டில், நம் நாடு மொத்தம் 139 கோடி கிலோ தேயிலை உற்பத்தி செய்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது சுமார் 4 சதவீதம் உயர்வாகும். அப்போது அது 133 கோடி கிலோவாக இருந்தது. வட இந்தியாவில் தேயிலை உற்பத்தி 5 சதவீதம் அதிகரித்து 117 கோடி கிலோவாக இருக்கிறது. 2018-ஆம் ஆண்டில் அது 111 கோடி கிலோவாக இருந்தது.

மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சம் வெளியிட்டுள்ள தற்காலிகப் புள்ளிவிவரம் ஒன்றின்படி கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ரூ.507 கோடிக்கு தேயிலை ஏற்றுமதி ஆகி இருக்கிறது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அது ரூ.573 கோடியாக இருந்தது. ஆக, ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி 12 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது. இதே காலத்தில், டாலர் மதிப்பிலும் தேயிலை ஏற்றுமதி 12 சதவீதம் சரிந்து 7.12 கோடி டாலராக குறைந்துள்ளது.

உள்நாட்டில் பயன்பாடு மிக அதிகமாக உள்ளதால் அதிக அளவு தேயிலையை இந்தியா ஏற்றுமதி செய்ய முடிவதில்லை. தேயிலை உற்பத்தியில் முன்னணி நாடுகளுள் ஒன்றான கென்யா அதன் மொத்த உற்பத்தியில் 95 சதவீதத்தை ஏற்றுமதி செய்கிறது.