கோவில்பட்டி,
கோவில்பட்டியில் தீபாவளி பண்டிகைக்காக 4 புதிய வகை கடலை மிட்டாய் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவை பரிசு பெட்டகத்தில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன.
தீபாவளி பண்டிகை வருகிற 8-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்கள் பட்டாசுக்கு அடுத்தபடியாக இனிப்பு பண்டங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். இதனால் கடைகளில் இனிப்பு, பலகாரங்கள் விற்பனை அதிகமாக இருக்கும். ஆனால் சிலருக்கு இனிப்பு அதிகம் சாப்பிடும்போது செரிமானப் பிரச்சினை உள்ளிட்ட பல உடல்நல தொந்தரவுகள் ஏற்படுவது வழக்கம். இனிப்பை சுவைத்து இன்னலை அனுபவிப்பதா? என நொந்துபோன பொதுமக்கள் உடலுக்கு கெடுதல் இல்லாத, ஆரோக்கியமும், சுவையும் தரும் கடலைமிட்டாய் மீது தற்போது தங்களின் கவனத்தை திருப்பியுள்ளனர்.
கரிசல்மண் மணமிக்க கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் கோவில்பட்டி கடலை மிட்டாய் பிரபலமானது. பொதுமக்களிடையே கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகைக்கு கடலைமிட்டாய் அதிகமாக வாங்கும் பழக்கம் தொடங்கியது.
இந்த ஆண்டும் கடலைமிட்டாய் வாங்குவதற்கு மக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்களில் கடலை மிட்டாயையும் சேர்த்து கொடுத்து வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் கோவில்பட்டியில் உள்ள கடலை மிட்டாய் தயாரிப்பு நிறுவனங்களில் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விதவிதமான கடலை மிட்டாய்களுடன் கோவில்பட்டியின் மற்றொரு பிரதான பண்டமான காரச்சேவும் சேர்த்து பரிசுபெட்டகத்தில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் கார்த்திக் மற்றும் செயலாளர் கண்ணன் ஆகியோர் கூறியதாவது:
இயற்கைப் பொருட்கள் மூலம் தயாரித்து, உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் இல்லாத பண்டம் என்றால் அது கடலைமிட்டாய்தான். கரிசல் மண்ணில் விளைந்த தரமான நிலக்கடலையை வறுத்து, அதில் வெல்லம், ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து கடலை மிட்டாய் தயாரிப்பதால் செரிமானத்துக்கு எந்தவித தொந்தரவும் இருக்காது. இதுதான் கடலைமிட்டாயின் தனிச்சிறப்பாகும். இந்தாண்டு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நிறுவனங்களில் இருந்து தங்களது ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு வழங்கும் இனிப்பு பரிசு பெட்டகத்தில் கடலைமிட்டாய் இடம்பெற செய்யும் வகையில் எங்களை அணுகி வருகின்றனர்.
இந்த தீபாவளி பண்டிகைக்கு விதவிதமான கடலை மிட்டாய்களை தயார் செய்து வருகிறோம். இந்த ஆண்டில் கருப்பு கவுனி, கடல்பாசி, நாட்டுச்சோளம், பாசிப்பயறு ஆகியவற்றால் தயாரிக்கப்படும் புதிதாக 4 வகை கடலை மிட்டாய்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் ரோஜா இதழ், மிக்ஸ்டு நட்ஸ், முருங்கை கீரை, பூசணி விதை, பாதாம், முந்திரி, மாப்பிள்ளை சம்பா, பூங்கார் அரிசி ஆகிய கடலை மிட்டாய்களை ஏற்கனவே தயாரித்து வருகிறோம். இவ்வகை கடலை மிட்டாய்கள் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு பல்வேறு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படும் பரிசுப் பொருட்களில் இடம்பெற்றுள்ளன. மேலும் நாங்கள் 'கிப்ட் பாக்ஸ்' (பரிசு பெட்டகம்) மற்றும் 'பக்கெட் கிப்ட்' (சிறிய வாளி) என 2 வகையாக தயார்செய்து வருகிறோம். இவை ரூ.300-ல் இருந்து ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
இவற்றுக்கு பெரியளவில் வரவேற்பு உள்ளது. வெளிமாநிலங்கள் மட்டுமின்றி அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் இந்த 'தீபாவளி கிப்ட்' குறித்து ஆர்வமுடன் அறிந்து எங்களை தொடர்பு கொண்டு மொத்தமாக கேட்கின்றனர். அவர்களுக்கு நாங்கள் கூரியர் மூலம் அனுப்பி வைத்து வருகிறோம். இந்த ஆண்டு கடலை மிட்டாய் உற்பத்தியில் தொழிலாளர்களுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் நல்ல தீபாவளி பண்டிகையாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.