பெண்கள் அனைத்து துறைகளிலும் கால் பதித்தாலும் ஒரு சில துறைகளில் குறைந்த அளவிலேயே உள்ளனர். இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கு ஆர்வம் காட்டினாலும் நான்கு சக்கர வாகனங்களை இயக்குபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அதிலும் கனரக வாகனங்கள் ஓட்டுபவர்களை விரல் விட்டு எண்ணிவிடும் நிலைதான் இருக்கிறது.
பஸ் அல்லது லாரி என ஏதாவதொரு வாகனத்தை ஓட்டுவதற்குதான் உரிமம் பெற்றிருப்பார்கள். ஆனால் கேரளாவை சேர்ந்த ராதாமணி 11 வகையான வாகனங்கள் ஓட்டுவதற்கு உரிமம் பெற்று அசத்தி இருக்கிறார். கார், பஸ், லாரி மட்டுமின்றி ஜே.சி.பி., ரோடு ரோலர், கிரேன், கண்டெய்னர், டிரக் உள்பட அனைத்து வகை வாகனங்களையும் இயக்குவதற்கு பயிற்சி பெற்றிருக்கிறார். இத்தனைக்கும் அவருக்கு 71 வயதாகிறது. இப்போதும் உற்சாகமாக கனரக வாகனங்களை இயக்கிக்கொண்டிருக்கிறார். பெண்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கும் பயிற்சி வழங்கிக்கொண்டிருக்கிறார்.
ராதாமணி, கேரள மாநிலம் தோப்பும்பாடியை சேர்ந்தவர். இவரது கணவர் டி.வி. லால் 1978-ம் ஆண்டு ஓட்டுநர் பயிற்சி பள்ளியை தொடங்கி இருக்கிறார். அந்த சமயத்தில் மனைவியை வாகனம் ஓட்டி பழகுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அப்போது ராதாமணிக்கு வயது 30. கணவரின் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் முதன் முதலில் கார் ஓட்டுவதற்கு பழகி இருக்கிறார்.
பின்பு பஸ் ஓட்டும் பயிற்சி பெற்றிருக்கிறார். 1988-ம் ஆண்டு முதன் முதலில் முறைப்படி பஸ் மற்றும் லாரி ஓட்டுவதற்கான உரிமத்தை பெற்றிருக்கிறார். அந்த சமயத்தில் தோப்பும்பாடியில் இருந்து சேர்த்தலாவுக்கு பேருந்தை ஓட்டி அசத்தினார். அந்த காலகட்டத்தில் பெண்கள் வாகனம் ஓட்டுவதே அரிதான நிகழ்வாக இருந்தது. அதனால் ராதாமணி வாகனம் ஓட்டிச் சென்றதை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.
பின்பு படிப்படியாக கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு பழகி, ஓட்டுநர் உரிமமும் பெற தொடங்கி இருக்கிறார். 2004-ம் ஆண்டு துரதிருஷ்டவசமாக விபத்தில் அவரது கணவர் இறந்துவிட்டார். அதன் பிறகு ஓட்டுநர் பயிற்சி பள்ளியை நிர்வகிக்கும் பொறுப்பை ராதாமணி ஏற்றிருக்கிறார். பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு அதிக அளவில் முன்வர வேண்டும் என்பது ராதாமணியின் வேண்டுகோளாக இருக்கிறது.
தன்னிடம் பயிற்சி பெற வரும் பெண்களிடம் கனரக வாகனம் ஓட்டுவதற்கும் ஊக்கம் அளிக்கிறார். பெண்களுக்கு வாகன ஓட்டும் பயிற்சி வழங்கியபடியே, தானும் கனரக வாகனங்களை இயக்குவதற்கான பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார். கடந்த 2021-ம் ஆண்டு அதிக டன் எடையை சுமக்கும் கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமத்தை பெற்றிருக்கிறார். டவர் கிரேன் ஓட்டுவதுதான் அவரது லட்சியமாக இருக்கிறது. அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார். 71 வயதில் 11 வகையான வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமம் பெற்ற ஒரே பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.