வாஷிங்டன்,
90 காலகட்டத்தில் இணையத்தை கலக்கிய குட்டி குழந்தை ஆட்டம் போடும் மீம்ஸ், இப்போது நவீன தொழில்நுட்பத்தில் மீண்டும் புதுப்பொலிவுடன் மறுஆக்கம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
1990-2000ம் ஆண்டு காலகட்டத்தில் மிகவும் பிரபலமான மீம்ஸ்களில் ஒன்றான நடனமாடும் குழந்தை, இப்போது ஒரு புதுப்பொலிவைப் பெற்று மீண்டும் இணையத்தை கலக்கவிருக்கிறது.
3டி வடிவத்தில் அமைக்கப்பட்ட குழந்தை நடனமாடும் வீடியோ, சமூக வலைதளங்கள் இல்லாத அப்போதைய 90 காலகட்டத்தில் மிகப் பிரபலம். குட்டி குழந்தையின் ஆட்டம் இ-மெயில் மூலமாக பலரால் பகிரப்பட்டு வந்தது.
1996 இல் மைக்கேல் ஜிரார்ட், ராபர்ட் லூரி மற்றும் ஜான் சாட்விக் ஆகியோரால் 3டி வடிவ குழந்தையின் நடனமாடும் மீம்ஸ் உருவாக்கப்பட்டது. வெள்ளை நிற டிரவுசரில் ஆட்டம் போடும் சின்ன குழந்தையின் படம், குறைந்த தெளிவுத்திறன் கொண்டதாக அப்போது உருவாக்கப்பட்டது.
எதிர்காலத்தில், அனிமேஷன் மற்றும் மீம்ஸ் போடும் கலாச்சாரத்தின் அடையாளமாக இது மாறும் என்று அப்போது யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். இப்போது டிரெண்ட் ஆகியிருக்கும் மீம்ஸ் போடும் கலாச்சாரத்தின் அடித்தளமாக அன்றே நடனமாடும் குழந்தை உருவாக்கப்பட்டுவிட்டது எனலாம்.
இந்த நிலையில், மீண்டும் அந்த மீம்ஸ்க்கு புத்துயிர் கொடுத்து அதிக தெளிவுத்திறன் கொண்டதாக மாற்றும் முயற்சியில் வியன்னா நாட்டை தளமாகக் கொண்ட படைப்பாற்றல் குழுவான "ஹச்.எப்.ஏ - ஸ்டுடியோவுடன்", அதனை முதன்முதலில் உருவாக்கிய, மைக்கேல் ஜிரார்ட், ராபர்ட் லூரி மற்றும் ஜான் சாட்விக் கைகோர்த்து களமிறங்கியுள்ளனர்.
அந்த குழந்தையின், முக பாவங்கள் தெளிவாகத் தெரியும் வகையில், அசல் படத்தை விட மிகவும் யதார்த்தமாக என்.எப்.டி வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஹச்.எப்.ஏ - ஸ்டுடியோ தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் உறுதிபடுத்தியுள்ளது.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பின், புத்தாக்கம் பெற்று புதுப்பொலிவுடன் இப்போதைய நவீன கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில், மீண்டும் இணையத்தை கலக்க வருகிறான் இந்த நடனமாடும் குழந்தை.