சிறப்புக் கட்டுரைகள்

மனிதர்களால் முடியாத கணித புதிருக்கு ஏ.ஐ. தீர்வு!.. 10 ஆயிரம் ஏ.ஐ.க்கள் இணைந்து சாதனை!..

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி கணித மேதைகளுக்கு சவாலாக இருந்து வந்த ஒரு மிகப்பெரிய கணிதப் புதிருக்கு ஏ.ஐ. தீர்வு கண்டுள்ளதாக ஓபன் ஏ.ஐ. நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னை,

மனிதர்களால் முடியாத 'நேவியர்ஸ்டோக்ஸ் சமன்பாடு' தொடர்பான கணித புதிருக்கு, 10 ஆயிரம் ஏ.ஐ.க்கள் இணைந்து தீர்வு கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது என ஓபன் ஏ.ஐ. நிறுவனம் அறிவித்துள்ளது.

கணிதப் புதிருக்கு ஏ.ஐ. தீர்வு

இன்று உலகில் ஏ.ஐ. இல்லாத துறையே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மனிதர்கள் செய்யும் பல வேலைகளை ஏ.ஐ. வேகமாக செய்து வருகிறது. எழுதுவது, மொழிபெயர்ப்பது, படம் உருவாக்குவது மட்டுமின்றி, கணிதத்திலும் ஏ.ஐ. தனது திறமையை காட்டத் தொடங்கி உள்ளது. அந்த வகையில், பல ஆண்டுகளாக உலகின் முன்னணி கணித மேதைகளுக்கு சவாலாக இருந்து வந்த ஒரு மிகப்பெரிய கணிதப் புதிருக்கு ஏ.ஐ. தீர்வு கண்டுள்ளதாக ஓபன் ஏ.ஐ. நிறுவனம் அறிவித்துள்ளது.

'மில்லேனியம் பரிசு பிரச்சினைகள்' 7 உள்ளன

இந்த கணிதப் பிரச்சினை சாதாரணமானது அல்ல. உலகின் மிகப்பெரிய கணிதச் சவால்களாக கருதப்படும் 'மில்லேனியம் பரிசு பிரச்சினைகள்' 7 உள்ளன. கடந்த 2000-ம் ஆண்டு தான் இவை அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரச்சினைக்கும் 10 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.9.5 கோடிக்கு மேல் ஆகும். அவற்றில் ஒன்றுதான் 'நேவியர்ஸ்டோக்ஸ் சமன்பாடு'.

பெரிய புதிர்

அதாவது தண்ணீர் எப்படி ஓடுகிறது? காற்று எப்படி நகர்கிறது? கடலில் நீரோட்டம் எப்படி ஏற்படுகிறது? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடை காண பயன்படுவது 'நேவியர்ஸ்டோக்ஸ் சமன்பாடு. ஆனால், இந்த சமன்பாட்டில் ஒரு பெரிய புதிர் இருந்தது.

ஒரு திரவம் தொடர்ந்து நகரும்போது அதன் இயக்கம் எப்போதும் கட்டுப்பாட்டுடன் இருக்குமா? அல்லது ஒரு கட்டத்தில் மிகச்சிறிய பகுதியில் அதன் வேகம் அளவில்லாமல் அதிகரிக்குமா?

இதற்கு கணிதவியலாளர்களால் இதுவரை முழுமையான பதிலை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த கேள்விக்குத்தான் இப்போது ஏ.ஐ. பதில் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

10 ஆயிரம் ஏ.ஐ.-க்கள்

இந்தப் பிரச்சினையை தீர்க்க ஓபன் ஏ.ஐ. புதிய முயற்சியை மேற்கொண்டது. ஒரே ஒரு ஏ.ஐ.யை வைத்து இந்த வேலையை செய்ய முடியவில்லை. சுமார் 10 ஆயிரம் ஏ.ஐ. முகவர்களை ஒன்றாக இணைத்து கணிதப் பிரச்சினையை ஆய்வு செய்தனர். இந்த ஏ.ஐ.க்கள் சுமார் 88 மணி நேரம் தொடர்ந்து கணக்கீடுகளை மேற்கொண்டன. ஒன்றுக்கொன்று சுமார் 50 லட்சம் தகவல்களை பரிமாறிக்கொண்டன. இதன் மூலம் நேவியர்ஸ்டோக்ஸ் சமன்பாட்டில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் 'தனிநிலை' ஏற்படக்கூடும் என்பது நிரூபணம் செய்யப்பட்டது. எனவே அதற்கு தீர்வு கிடைத்துவிட்டதாக ஓபன் ஏ.ஐ. அறிவித்துள்ளது. இந்த நிரூபணம் 'லீன்' என்ற கணித மென்பொருள் மூலம் சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும் ஓபன் ஏ.ஐ. கூறியுள்ளது.

ஆனால் கணித மேதைகள், அதனை முழுமையாக ஏற்று கொள்ளவில்லை. அவர்கள் தொடர்ந்து இது தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். அது மில்லேனியம் பரிசு பிரச்சினைக்கான முழுமையான தீர்வுதானா என்பதையும் அவர்கள் உறுதி செய்து அறிவிக்க வேண்டும்.

கணித சாதனை

தற்போது இதுதொடர்பாக கணித உலகில் விவாதம் தொடங்கி உள்ளது. யார் முதலில் இந்த ஆய்வை மேற்கொண்டது என்பதிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த கண்டுபிடிப்பின் முழுமையான முக்கியத்துவம் தெரிய இன்னும் சிறிது காலம் ஆகும் என்று 'குவாண்டா' இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கணித ஆராய்ச்சியில் புதிய திருப்பம்

ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தை பொறுத்தவரை இது பரிசு தொகைக்கான பிரச்சினை அல்ல. ஆனால் இதுவரை உலகில் கண்டுபிடிக்க முடியாத ஒரு விஷயத்தை கண்டுபிடித்து இருக்கிறோம் என்று கூறுகிறது. இருப்பினும், மனிதர்கள் பல ஆண்டுகளாக போராடி வந்த கணிதப் புதிரை தீர்க்க ஆயிரக்கணக்கான ஏ.ஐ.க்கள் ஒன்றாக இணைந்து முயற்சி செய்திருப்பது, கணித ஆராய்ச்சியில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. முடிவு முழுமையாக உறுதி செய்யப்பட்டால், ஏ.ஐ. மூலம் கிடைத்த மிக முக்கியமான கணித சாதனைகளில் ஒன்றாக இது அமையும்.

நேவியர்ஸ்டோக்ஸ் சமன்பாட்டில் என்ன புதிர்?

தண்ணீர் எப்படி ஓடுகிறது? காற்று எப்படி நகர்கிறது? ஆற்றில் நீரோட்டம் எப்படி ஏற்படுகிறது? இதுபோன்ற திரவங்கள் மற்றும் வாயுக்களின் இயக்கத்தை கணிதத்தின் மூலம் கணக்கிட உதவுவதுதான் நேவியர்ஸ்டோக்ஸ் சமன்பாடுகள். ஆனால், இந்த சமன்பாட்டில் பல ஆண்டுகளாக ஒரு முக்கியமான கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.

'தனிநிலை'

ஒரு ஆற்றில் தண்ணீர் சீராக ஓடுகிறது என்று வைத்துக்கொள்வோம். பொதுவாக தண்ணீரின் வேகம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் இருக்கும். ஆனால், திடீரென்று ஆற்றின் மிகச்சிறிய ஒரு பகுதியில் மட்டும் தண்ணீரின் வேகம் கட்டுப்பாடின்றி அதிகரிக்கத் தொடங்கினால் என்ன ஆகும்? கணித ரீதியாக அந்த வேகம் அளவில்லாமல் அதிகரிக்கும் நிலை உருவாக முடியுமா? இதுபோன்ற நிலைதான் கணிதத்தில் 'தனிநிலை' என்று அழைக்கப்படுகிறது.

விடை கிடைக்காத கேள்வி

அதாவது, திரவத்தின் ஓட்டம் வழக்கமாக சீராக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட மிகச்சிறிய பகுதியில் மட்டும் அதன் இயக்கம் கட்டுப்பாட்டை இழந்து மிகப்பெரியதாக மாறும் நிலை. இந்த தனிநிலை உண்மையில் உருவாகுமா? அல்லது நேவியர்ஸ்டோக்ஸ் சமன்பாடுகளின் தீர்வுகள் எப்போதும் கட்டுப்பாட்டுக்குள் இருக்குமா? என்பதுதான் பல ஆண்டுகளாக கணிதவியலாளர்களுக்கு விடை கிடைக்காத கேள்வியாக இருந்தது.

தனிநிலை உருவாகக்கூடும் என்பதை கண்டுபிடித்ததாக அறிவிப்பு

தற்போது ஓபன் ஏ.ஐ. பயன்படுத்திய ஏ.ஐ. அமைப்புகள், குறிப்பிட்ட சூழ்நிலையில் நேவியர்ஸ்டோக்ஸ் சமன்பாட்டில் இதுபோன்ற தனிநிலை உருவாகக்கூடும் என்பதற்கான நிரூபணத்தை கண்டுபிடித்ததாக அறிவித்துள்ளன. இந்த நிரூபணம் ‘லீன்' என்ற கணித நிரூபண முறையிலும் சரிபார்க்கப்பட்டதாக ஓபன் ஏ.ஐ. தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT