ஆனால் இந்தியாவின் மாற்று எரிசக்தி உற்பத்தி இலக்கு 175 ஜிகாவாட். 2022-ம் ஆண்டுக்குள் சூரிய மின்னுற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தி துறையில் 175 ஜிகா வாட் இலக்கை எட்டுவது என்பது இந்தியாவின் இலக்காகும். இந்த 175 ஜிகா வாட் மாற்று எரிசக்தி உற்பத்திக்கான இலக்கில் 100 ஜிகாவாட் சூரிய மின்னுற்பத்தி மூலமும், 60 ஜிகாவாட் காற்றாலை மூலமும் 15 ஜிகாவாட் இதர மாற்று எரிசக்தி மூலம் பெறுவதற்கான திட்டங்களை அரசு உருவாக்கியுள்ளது. தற்போது வரை காற்றாலை திறன் 32.2 ஜிகா வாட், சூரிய மின்னுற்பத்தி 12.2 ஜிகாவாட் திறனாக உள்ளது.
இந்த இலக்கை அடைவதற்கான பயணத்துக்கு ஏற்ப இந்த துறையில் பல பெரிய நிறுவனங்கள் புதிய முதலீடுகளை மேற்கொண்டுள்ளன. வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடனுதவியில் முன்னுரிமை அளிக்கின்றன. தொழில்நுட்பங்கள் பரவலாக அதன் விலையும் குறையத் தொடங்குவதைபோல சூரிய மின்னாற்றல் தொழில்நுட்பம் அதிக மக்களை சென்றடைவதால் விலையும் குறைந்து வருகிறது. அப்படியான ஒரு நிலை உருவாகிக் கொண்டிருப்பதால் இந்தியா உலக நாடுகளுக்கான முன்னுதாரமாக உருவாகி வருகிறது. இந்த மிகை மின் உற்பத்தி, பேரளவு முதலீடுகள் தாண்டியும் பல சாதகமான பலன்களும் இந்தியாவுக்கு கிடைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் காற்றாலையில் 34,600 வேலை வாய்ப்பும், சூரிய மின்னுற்பத்தியில் 58,600 வேலை வாய்ப்பும், கூரை தகடுகள் அமைப்பில் 2,38,000 வேலைகளும் உருவாகும் என்றும் கூறியுள்ளது. இதில் காற்றாலை மின்சார உற்பத்திக்கு சாதகமாக உள்ள மராட்டியம், உத்தரபிரதேசம், தமிழ்நாடு மாநிலங்களில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்த வேலை வாய்ப்புகளில் சுமார் 80 சதவீதம் ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது.
மாற்று எரிசக்தியின் முக்கிய சிறப்பு அம்சமே அது குறைவான விலையில் கிடைக்கிறது என்பதுதான். இதனால் இப்போது பரவலாகவும், எளிதாகவும் மக்கள் மத்தியில் ஊடுருவி வருகிறது. மின்சார வினியோக கட்டமைப்பு இல்லாத உள்ளடங்கிய கிராமங்களுக்குகூட இதன் மூலம் மின்சாரம் கிடைக்கிறது. சிறிய சூரிய மின்னுற்பத்தி பேனல் அல்லது சிறிய காற்றாலை ஏற்படுத்திக் கொள்வது மலைப்பகுதி மக்களுக்கு இலகுவானதாகவும் இருக்கிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் மற்றொரு முக்கிய அம்சம், இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை. அனல் மின்சாரத்தைபோல நிலக்கரியை வெட்டியெடுப்பதற்கான மிகப் பெரிய கட்டமைப்புகள் தேவையில்லை. நிலக்கரி மூலம் மின்சார உற்பத்திக்கு தண்ணீரையும் அதிகமாக செலவிட வேண்டும் அல்லது நீர் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சாத்தியம் இல்லாத இடங்களிலும் இந்த மாற்று எரிசக்தி திட்டங்கள் செயல்படுத்த முடியும் என்பதும் இதன் சாதகமான அம்சம்.