பண்டீ சாம்ரே கோவிலின் உட்புறத் தோற்றம் 
சிறப்புக் கட்டுரைகள்

அங்கோர் வாட்: கல்லிலே கலைவண்ணம் - 33. கோவிலுக்குள் பதப்படுத்திய மன்னர் உடல் - அமுதன்

தற்செயலாகக் கொல்லப்பட்ட மன்னர் ஒருவரின் உடல், பதப்படுத்தி கோவிலுக்குள் வைக்கப்பட்டு இருந்தது என்ற கர்ணபரம்பரைக் கதை பற்றிய விவரத்தை இங்கே பார்க்கலாம்.

பண்டீ சாம்ரே

அங்கோர் வாட் கோவிலில் இருந்து 17 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பண்டீ சாம்ரே என்ற கோவில், வித்தியாசமான ஒரு கதையைத் தன்னுள் கொண்டு இருக்கிறது.

இந்தக் கதைக்கு வரலாற்று ஆதாரம் ஏதும் இல்லை என்றாலும், வரலாற்று ஆய்வாளர்கள் பலரது நூல்களில் இந்தக் கதை இடம் பிடித்து இருக்கிறது.

பண்டீ சாம்ரே கோவிலின் சன்னிதானம் அருகே வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டி போன்ற ஒரு தொட்டி, இந்தக் கதைக்கு மேலும் வலுவூட்டி இருக்கிறது.

பண்டீ சாம்ரே என்றால், சாம்ரேயின் கோட்டை என்று பொருள்.

சாம்ரே என்பது, பழங்காலத்தில் குலேன் மலைஅடிவாரத்தில் வசித்து வந்த ஓர் இனத்தின் பெயர் ஆகும்.

சாம்ரே இனத்தவரின் கோட்டை என்பதால், கோவிலுக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுவிட்டது.

பண்டீ சாம்ரே கோவிலில் உள்ள மர்மத் தொட்டி

பண்டீ சாம்ரே கோவில், இரண்டாம் சூர்யவர்மன் காலத்தில் கட்டப்பட்டது என்ற போதிலும், அது தொடர்பாகக் கூறப்படும் கதை, எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்பது தெரியவில்லை.

குலேன் மலைப்பகுதியில் வசித்து வந்தவர் போவு என்ற விவசாயி. இவர், அதிசய சக்தி மூலம் அபூர்வமான வெள்ளரிப் பழத்தின் விதை தனக்குக் கிடைத்ததாகக் கூறி, அதைத் தனது நிலத்தில் பயிர் செய்தார்.

நிலத்தில் விளைந்த முதல் வெள்ளரிப் பழத்தை, மன்னருக்கு சமர்ப்பிக்க விரும்பி அரண்மனைக்கு எடுத்துச் சென்றார்.

அந்த வெள்ளரிப் பழத்தைச் சாப்பிட்ட மன்னர், அதன் வித்தியாசமான சுவையில் சொக்கிப் போனார்.

அங்கே விளையும் அதிசய வெள்ளரிப் பழங்கள் அனைத்தையும் தனக்கே கொடுக்க வேண்டும் என்றும், அது விளையும் தோட்டத்தைக் காவல் காக்க வேண்டும்; யாராவது, அல்லது எந்த மிருகமாவது அத்துமீறி அந்த தோட்டத்துக்குள் நுழைந்தால் கொன்றுவிட வேண்டும் என்றும் மன்னர் ஆணையிட்டார்.

கோடைகாலம் முடிந்து மழைக்காலம் வந்த போது, அதிக அளவில் வெள்ளரிப் பழங்கள் கிடைக்கவில்லை.

ஆசையை அடக்க முடியாத மன்னர், ஒரு நாள் இரவு அந்த விவசாயியைத் தேடிக் கொண்டு கிராமத்துக்குச் சென்றுவிட்டார்.

வீட்டில் விவசாயி இல்லை. அவர் வயலுக்கு காவலுக்குச் சென்று இருக்கிறார் என்பதை அறிந்த மன்னர், அந்த விவசாயியைச் சந்திக்க வயலை நோக்கி நடையைக் கட்டினார்.

இருள் சூழ்ந்த நேரம்- தூரத்தில் யாரோ ஒருவர் வருவதைக் கண்ட விவசாயி, திருடன் தான் வருகிறான் என்று எண்ணி, தனது வில்லால் குறி பார்த்து அம்பை எய்தினார்.

அம்பு பாய்ந்த மன்னர், அதே இடத்தில் செத்து விழுந்தார்.

தனது அம்புக்குப் பலியானது மன்னர் என்பதை அறிந்த விவசாயி, அவசரம் அவசரமாக வயலிலேயே குழி தோண்டி மன்னர் உடலைப் புதைத்து விட்டார்.

மறுநாள் மன்னரைக் காணாமல் அமைச்சர்களும் அரண்மனை அதிகாரிகளும் தவித்தார்கள். மாயமாக மறைந்த மன்னர் திரும்பி வரவே இல்லை.

அந்த மன்னருக்கு வாரிசு கிடையாது.

எனவே சில நாட்கள் பொறுத்து இருந்த அமைச்சர்கள், பட்டத்து யானையைக் கொண்டு புதிய மன்னரைத் தேர்ந்தெடுப்பது என்று தீர்மானித்தார்கள்.

துதிக்கையில் மாலையுடன் சென்ற அந்த யானை, மிகச்சரியாக அந்த விவசாயி போவு என்பவர் கழுத்தில் மாலையைப் போட்டது.

இப்படித்தான் சாம்ரே என்ற இனத்தின் விவசாயி, புதிய மன்னர் ஆனார்.

ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக அவர், நிலத்தில் புதைக்கப்பட்ட மன்னரின் உடலைத் தோண்டி எடுத்து, கோவிலுக்குக் கொண்டு சென்று பதப்படுத்தினார். பின்னர் முறைப்படி இறுதிச்சடங்கு செய்வதற்காக மெபோன் என்ற கோவிலுக்கு அந்த உடலை எடுத்துச் சென்று வழிபாடு நடத்தி, பிரி ரப் என்ற கோவிலில் உள்ள தொட்டியில் வைத்து தகனம் செய்தார்.

(பிரி ரப் என்ற கோவில், மன்னர்களின் உடல்களை தகனம் செய்வதற்காகவே கட்டப்பட்டது என்பதையும் அந்தக் கோவிலின் முன்பு இதற்காக கல்லால் கட்டப்பட்ட ஒரு தொட்டி வைக்கப்பட்டுள்ளது என்பதையும் கடந்த 25-வது அத்தியாயத்தில் பார்த்தோம்)

நாளடைவில் மன்னர் போவு மீது அதிகாரிகளுக்கு வெறுப்பு ஏற்பட்டது. மன்னரின் கட்டளையை ஏற்க மறுத்தனர்.

இதனால் மன்னர் போவு, தான் இறுதிச்சடங்கு செய்த மன்னரின் எலும்புகள் அடங்கிய அஸ்தியை ஒரு சவப்பெட்டியில் போட்டு, அதனை கோவிலில் வைத்து, அதற்கு அதிகாரிகள் மரியாதை செய்ய வேண்டும் என்றும், தவறினால் தலை துண்டிக்கப்படும் என்றும் ஆணையிட்டார்.

அதன் பிறகு அங்கே அமைதியான ஆட்சி நடைபெற்றது.

இவ்வாறு கூறப்படும் கதையில், கொல்லப்பட்ட மன்னரின் பெயர் என்ன என்பது சொல்லப்படவில்லை.

ஆனால், இப்போதும் பண்டீ சாம்ரே கோவிலின் சன்னிதி அருகே உள்ள அறையில், கல்லால் செய்யப்பட்ட தொட்டி ஒன்று உள்ளது.

மூடி போடப்பட்ட அந்தத் தொட்டியின் மேலே ஒரு துவாரமும், அடிப்பகுதியில் ஒரு துவாரமும் இருக்கிறது.

சவப்பெட்டி போன்ற தோற்றத்தில் காணப்படும் இந்தத் தொட்டியில், பதப்படுத்தப்பட்ட உடலை வைத்து அவ்வப்போது நீரால் குளிப்பாட்டுவதற்கு வசதியாக இது அமைந்து இருக்கிறது என்று, கம்போடியா வரலாற்றின் தந்தை என்று போற்றப்படும் பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர் ஜார்ஜ் செடெஸ் தெரிவித்து இருக்கிறார்.

இவ்வாறு பரபரப்பான ஒரு கதையைக் கொண்டு இருக்கும் பண்டீ சாம்ரே கோவில் முழுவதுமாகச் சீரமைக்கப்பட்டு இப்போது அழகாகக் காட்சி அளிக்கிறது.

ராமாயணக் காட்சிகளில் ஒன்றான, இலங்கைக்குச் செல்ல ராமர் பாலம் கட்டியது, விஷ்ணு, முருகன், எமன் ஆகியோர் தங்கள் வாகனங்களில் ஊர்வலமாக வருவது, பாற்கடல் கடையப்படுவது, கிருஷ்ணர் கோவர்த்தன கிரியை தூக்கிக் கொண்டு நிற்பது போன்ற அழகிய பல சிற்பங்களும் இந்தக் கோவிலில் இருக்கின்றன.

கம்போடியாவின் அனைத்துக் கோவில்களின் சுவர்களிலும் தேவதை களின் சிற்பங்கள் காணப்படும். ஆனால், மிக அழகிய கட்டுமானமும், வேலைப்பாடு மிக்க சிற்பங்களையும் கொண்ட இந்தக் கோவிலின் சுவரில் மட்டும் தேவதைகளின் சிற்பங்கள் இல்லாதது ஆச்சரியம் அளிக்கிறது.

கொல்லப்பட்ட மன்னரின் அஸ்தியை வைத்து இருந்ததால், இங்கே தேவதைகளின் சிற்பங்களை அமைக்கவில்லையோ என்று சந்தேகப்பட வேண்டி இருக்கிறது.

பண்டீ குடி கோவில்

பண்டீ குடி

கம்போடியாவில் உள்ள மேலும் ஒரு மர்மமான கோவில் பண்டீ குடி.

இதன் பெயர் பண்டீ குட்யி- அதாவது, தங்கும் இடத்தின் கோட்டை என்று கூறப்படுவதால், குட்யீ என்பது குடி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் ராஜேந்திரவர்மன் காலத்தில் கட்டப்பட்ட கோவில் மீதே இந்தக் கோவில் கட்டப்பட்டு இருக்கிறது.

இந்தக் கோவிலைக் கட்டியது யார்?, கட்டியதன் நோக்கம் என்ன?, எந்த ஆண்டில் கட்டப்பட்டது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படாததால், இந்தக் கோவில் மர்மக் கோவில் என்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

7-ம் ஜெயவர்மன் காலத்திய சிறிய கல்வெட்டு மட்டுமே இங்கே உள்ளது. அதிலும் கோவில் பற்றிய தகவல் இல்லை.

இந்தக் கோவிலுக்குச் செல்வதற்கான வழியில் உள்ள கோபுரத்தில், பெயோன் கோவிலில் இருப்பது போன்ற மனித முக சிற்பங்கள் வைக்கப்பட்டு இருப்பதால், மன்னர் 7-ம் ஜெயவர்மன் காலத்தில் இது கட்டப்பட்டு இருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது.

7-ம் ஜெயவர்மன் கட்டிய முதல் கோவில் இது தான் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

புத்த மத சாமியார்கள் தங்கி இருப்பதற்காக இந்தக் கோவில் கட்டப்பட்டதால் இது, தங்கும் இடத்தின் கோட்டை என்ற பெயரால் அழைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

ஆனால், கோவிலுக்குள் புத்த சாமியார்கள் தங்கி இருப்பதற்கான கட்டிட வசதி ஏதும் காணப்படவில்லை.

முதலில் ஏதோ ஒருவகையில் கட்ட திட்டமிட்டு, பின்னர் கூடுதலாக 13 கோபுரங்கள் கட்டப்பட்டதால், இந்தக் கோவில் ஒழுங்குமுறை இல்லாமல் காட்சி அளிக்கிறது.

பச்சை மற்றும் சிவப்பு நிற கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோவிலில் அழகிய சிற்பங்களும் உள்ளன.

வடகிழக்கு, தென்கிழக்கு சுவர்களில் தான் சிற்பங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

புத்தமத வழிபாட்டுத் தலமாக இந்தக் கோவில் கட்டப்பட்டது என்றாலும், ராமாயணக் காட்சியை விளக்கும் சிற்பங்களும் அங்கே உள்ளன.

7-ம் ஜெயவர்மனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த 8-ம் ஜெயவர்மன் காலத்தில் இந்தக் கோவிலில் இருந்த புத்தர் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டன.

2001-ம் ஆண்டு சீரமைப்புப் பணிகளை மேற்கொண்ட ஜப்பான் நாட்டுக் குழுவினர், அங்கே உடைந்து கிடந்த புத்தர் சிலைகளின் 270 பாகங்களை சேகரித்தார்கள் என்றால், எந்த அளவுக்கு சிலைகள் சேதப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

தொம்மனான்

தலைநகர் அங்கோர் தாம் கிழக்கு வாசல் அருகே, தொம்மனான், சாவ் சே தேவ்தா ஆகிய இரண்டு கோவில்கள் காணப்படுகின்றன.

இந்த இரண்டு கோவில்களும் மிக அருகருகே அமைந்து இருப்பதால் இவை இரட்டைக் கோபுரங்களாக இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது.

ஆனால் இவை வெவ்வேறு காலத்தில் கட்டப்பட்டவை ஆகும்.

2-ம் சூர்யவர்மன் காலத்தில், அங்கோர் வாட் கோவில் கட்டப்பட்ட அதே நேரத்தில் தொம்மனான் கோவில் கட்டப்பட்டு இருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து.

கோவிலின் மைய மண்டபத்தில் 3 அடி உயர லிங்கம் வைக்கப்பட்டு இருந்தது.

கருடன் மீது விஷ்ணு அமர்ந்து இருப்பது, கயிலாய மலையை ராவணன் அசைப்பது போன்ற சிற்பங்களும் இங்கே காணப்படுகின்றன என்றாலும், விசேஷமான முத்திரைகளைத் தாங்கியபடி உள்ள அழகிய தேவதைகளின் சிற்பங்கள் தான் இந்தக் கோவிலின் தனிச் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.

ஏராளமான தேவதைகளின் சிற்பங்கள் உள்ளதால், சாவ் சே தேவ்தா என்ற கோவில் பிரசவ மருத்துவமனையாக செயல்பட்டு இருக்கலாம் என்று பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

நோய்களைத் தீர்க்கும் அற்புதமான நீரைக் கொண்ட கோவில் பற்றியும், இடிபாடுகளுடன் மிரட்சியாகக் காணப்படும் மிகப்பெரிய கோவில் தொடர்பாகவும் உள்ள செய்திகளைத் தொடர்ந்து பார்க்கலாம்.

(ஆச்சரியம் தொடரும்)