கண்கவரும் சிற்ப வேலைப்பாடுகளுடன், பிரமாண்டமான கோவில்களைக் கட்டும் நுட்பத்தைத் தமிழகத்தில் இருந்து கற்றுக்கொண்ட கம்போடிய மன்னர்கள், தமிழக கோவில்களில் இருப்பது போன்ற கல்வெட்டுகளையும் தாங்கள் கட்டிய கோவில்களில் அமைத்த ஒரே காரணத்தால், கம்போடியாவின் வரலாற்று செய்தி, கால வெள்ளத்தில் கரைந்து விடாமல் தப்பியது.
கம்போடிய கோவில்களில் உள்ள கல்வெட்டுகள் மட்டுமே, அந்த நாட்டில் நிலவிய கலை, கலாசாரம் மற்றும் அங்கே ஆட்சி செய்த மன்னர்களின் பரம்பரை விவரம் ஆகிய செய்திகளைத் தரும் அசைக்க முடியாத ஆவணங்களாகத் திகழ்கின்றன.
பழங்கால தமிழகத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதும் வழக்கம் இருந்தது போலவே, பனை மரங்கள் நிறைந்த கம்போடியாவிலும் ஓலைச்சுவடிகள் பயன்படுத்தப்பட்டன. இந்த ஓலைச்சுவடிகளை பாதுகாக்க சில கோவில்களில் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
ஆனால், அந்த ஓலைச்சுவடிகளில் ஒன்றுகூட கிடைக்காமல் அனைத்தும் அழிந்துவிட்ட நிலையில், கம்போடியா வரலாறு கூறும் ஒரே ஆவணம், அங்கே கோவில்களில் காணப்படும் கல்வெட்டுகளே என்பதால் கல்வெட்டு செய்தி களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
கல்வெட்டுகள் பல விதங்களில் அமைந்து இருக்கின்றன. ஒரே ஒரு வரி கொண்ட கல்வெட்டு வாசகமும், பல நூறு வரிகளைக் கொண்ட கல்வெட்டு களும் உள்ளன.
5-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கல்வெட்டு, அப்போது தென் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த பல்லவ கிரந்த எழுத்துக்களால் ஆனது.
அதன் பின்னர் உருவாக்கப்பட்ட கல்வெட்டுகளில் சமஸ்கிருத வாசகம் பாடலாகவும், அதே தகவல் கெமெர் மொழியில் வசன நடையிலும் எழுதப்பட்டுள்ளன.
கம்போடிய கோவில்களில் இதுவரை ஏறத்தாழ 2 ஆயிரம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், ராமநாதபுரம், விழுப்புரம் உள்பட பல ஊர்களின் பெயர்கள் புரம் என்று முடிவடைவதைப் போல, கம்போடியாவில் ஜியேஸ்தபுரம், இந்திரபுரம், தமாந்தரபுரம், தாம்ரபுரம், பீமாபுரம், சக்ரங்கபுரம் என்று பல ஊர்களின் பெயர்கள் புரம் என்ற சொல்லைக் கொண்டு இருந்தது என்பதை 667-ம் ஆண்டு கல்வெட்டு மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
தமிழகத்தை சோழர்கள் ஆட்சி செய்த காலத்தில் கோவில்கள், பொது மக்களுக்கு சேவை செய்யும் வங்கிகள் போல செயல்பட்டன.
அதே முறை கம்போடியா கோவில்களிலும் கடைப்பிடிக்கப்பட்டது என்பதை 803-ம் ஆண்டு கல்வெட்டு பறைசாற்றுகிறது.
பொதுமக்கள் தங்கள் சொத்துக்களை பரிமாற்றம் செய்து கொண்டது தொடர்பான தஸ்தாவேஜுகள் கோவில்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. சிலர் தங்களது நிலத்தை அடகு வைத்து, வெள்ளி அல்லது துணிமணிகளை கோவிலில் இருந்து பெற்றுக்கொண்டனர். சிலர் தங்களின் மதிப்பு மிக்க பொருட்களை கோவில்களில் பாதுகாப்பாக வைத்து இருந்து பின்னர் பெற்றுக் கொண்டனர் என்றும் கல்வெட்டு கூறுகிறது.
நமது நாட்டில் அரசியல்வாதிகள் தேர்தல் பிரசாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து மதுவிலக்கு என்பது போல ஏதாவது ஒன்றை உறுதி மொழியாகச் சொல்வார்கள்.
அதுபோல 879-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதலாம் இந்திரவர்மன் என்ற மன்னர், ஆட்சிப்பொறுப்பை ஏற்ற போது, இப்போது பதவி ஏற்கிறேன். இன்னும் 5 நாட்களில் (ஏரிகட்டுவதற்காக) நிலத்தைத் தோண்டுவேன் என்று அறிவித்தார்.
அவர் சொன்னது போலவே, உடனடியாக ஏரி அமைக்கும் பணியைத் தொடங்கினார். 3 கிலோ மீட்டர் நீளமும், ஒரு கிலோ மீட்டர் அகலமும் கொண்ட இந்திர தாதகா என்ற பிரமாண்ட ஏரியை அவர் கட்டி சாதனை படைத்தார்.
யசோதர வர்மன் என்ற மன்னர் காலத்தில், கோவில் விதிகளை மீறுபவர்களுக்கு அவர்களது தகுதிக்கு ஏற்ப தண்டனை விதிக்கப்பட்டது என்ற செய்தி ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது.
கோவில் விதிகளை இளவரசர் அந்தஸ்தில் உள்ளவர் மீறினால் அவருக்கு 700 கிராம் தங்கம் அபராதம். மந்திரி அந்தஸ்தில் உள்ளவர்களுக்கு 350 கிராம் தங்கம் அபராதம். தங்க கைப்பிடி கொண்ட வெண்கொற்றக் குடை வைத்து இருப்பவர்களுக்கு 170 கிராம் தங்கம் அபராதம். இதே குற்றத்தை பொது மக்கள் செய்தால் அவர்களுக்கு 100 கசையடி வழங்கப்படும் என்று கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. (கல்வெட்டில் எடை அளவு அனைத்தும் இந்தியாவில் வழக்கத்தில் இருந்த சமஸ்கிருத எடை அளவு மொழியிலேயே எழுதப்பட்டு இருக்கிறது).
5-ம் ஜெயவர்மனின் மருமகள் ஹிரண்ய லட்சுமி என்ற பெண், சமஸ்கிருத மொழியில் எழுதிய கல்வெட்டு, டோன்லே சாப் நதி அருகே உள்ள யே ஹோம் என்ற கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பெண் ஒருவர் எழுதிய கல்வெட்டு, இது ஒன்றே ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
2-ம் சூர்ய வர்மனின் கல்வெட்டில், குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் தண்டனை விவரம் அச்சமூட்டுவதாக இருக்கிறது.
நிலம், வீடு, விலங்குகள், அரிசி, மது, காலணி, அரசர் அளித்த வெண்கொற்றக் குடை ஆகியவற்றை திருடுவது கடுமையான குற்றமாக அறிவிக்கப்பட்டது. இந்தக் குற்றச்செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை வீதியில் படுக்க வைத்து அவர்கள் மீது கனமான வாகனத்தை ஏற்றி, அவர்களை நசுக்கிக்கொல்வது அல்லது, மரத்தில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடிப்பது, அங்கங்களை அகற்றுவது போன்ற தண்டனைகள் வழங்கப்படும் என்றும் கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கோர் மன்னர்களில் 2-ம் சூர்ய வர்மனுக்கு நிகரானவராகக் கருதப்படும் 7-ம் ஜெய வர்மன் தொடர்பான கல்வெட்டுகள், தகவல் சுரங்கம் போல கருதப்படுகின்றன.
பிரீக் கான் என்ற கோவிலில் உள்ள கல்வெட்டு, 7-ம் ஜெய வர்மனை ராமாயண கதாநாயகரான ராமருக்கும் மேலானவர் என்று கொண்டாடுகிறது.
குரங்குகள் சமுத்திரத்தைக் கடக்க ராமர் கற்களால் பாலம் கட்டினார்; ஆனால் மன்னர் ஜெயவர்மன், மக்கள் பிறவிப் பெருங்கடலை கடக்க தங்கத்தால் பாலம் கட்டினார் என்று அவர் கட்டிய கோவில்களையும் அங்கு குவிக்கப்பட்டுள்ள தங்கத்தையும் சுட்டிக்காட்டி பெருமை பேசுகிறது, அந்தக் கல்வெட்டு.
1903-ம் ஆண்டு லாவோசில் சே போங் என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டு, 7-ம் ஜெய வர்மன் பற்றி ஏராளமான செய்திகளைத் தருகிறது.
தமிழகத்தில் சோழ மன்னர்கள் செய்த பணிகளைப் பின்பற்றி, கம்போடியாவில் நாடு முழுவதும் பல வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகளையும், பல கிலோ மீட்டர் தூரத்துக்கு தரமான சாலை வசதிகளையும், அந்த சாலைகளில் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒன்று வீதம் பயணிகளுக்கு ஏராளமான தங்கும் விடுதி களையும் 7-ம் ஜெயவர்மன் கட்டினார் என்று கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
அந்த மன்னர், மருத்துவமனைகள் அமைத்ததில் காட்டிய அக்கறை வியக்க வைக்கிறது.
அவரது ஆட்சியின்போது மொத்தம் 102 இடங்களில் மருத்துவ மனைகள் அமைக்கப்பட்டன. அனைத்து மருத்துவமனைகளிலும் அவை தொடர்பான கல்வெட்டுகள் இடம் பெற்று இருந்தன.
மருத்துவமனைகளில் வழிபாடு நடத்த சிறிய கோவிலும் கட்டப்பட்டு இருந்தது. மருத்துவமனை முன்பு அழகிய குளம் ஏற் படுத்தப்பட்டது.
ஒவ்வொரு மருத்துவமனையிலும் தலா இரண்டு மருத்துவர்கள், அவர்களுக்கு உதவியாளர்கள், 2 மருந்தாளுனர்கள் மற்றும் மருந்துகளை தயாரிப்பவர்கள், சமையல் செய்யவும், மருத்துவ மனையை சுத்தம் செய்யவும், சுடு தண்ணீர் வைக்கவும் உதவியாளர்கள் என மொத்தம் 200 பேர் பணியாற்றினார்கள்.
நோயாளிகளுக்கு நாடி பிடித்துப் பார்த்து மருத்துவம் செய்யப்பட்டதாகவும், நோயாளிகள் பாதிக்கப்பட்டது ஏன் என்பதை அறிய ஜோதிடர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர் என்றும் கல்வெட்டு கூறுகிறது.
மருத்துவமனைக்குத் தேவையான துணிகள், அரிசி, பழம், தேன் ஆகியவற்றை சப்ளை செய்யும் பொறுப்பு, 838 கிராமங் களைச் சேர்ந்த 81,640 பேர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மருத்துவர்களுக்குத் தேவையான இரண்டு விதமான கற்பூரம், மெழுகு, இஞ்சி, மிளகு, ஏலக்காய், கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் காய்ச்சலுக்குக் கொடுப்பதற்காக 10 விதமான மூலிகை கலவை மூலம் தயாரித்த கஷாயம் ஆகியவையும் மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன.
மூல நோய்க்குத் தேவையான தைலம், 1,960 குப்பிகளில் தயார் நிலையில் இருந்தது என்றும் கல்வெட்டு தெரிவிக்கிறது.
7-ம் நூற்றாண்டில் சீன துறவி ஒருவர் கம்போடியாவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் தங்கி இருந்து மூலிகை மருத்துவம் படித்து விட்டுச் சென்றார் என்பதும் கல்வெட்டு தரும் தகவல் ஆகும்.
இதுபோல 12-ம் நூற்றாண்டு வரையிலான சம்பவங்களை விளக்கும் கல்வெட்டுகள் ஏராளம் கம்போடியாவில் கிடைத்து இருக்கின்றன என்றாலும், 4 ஆயிரத்துக்கும் அதிகமான கோவில்களைக் கொண்ட அங்கோர் நாகரிகம், அதன் பிறகு எவ்வாறு அழிவை சந்தித்தது என்பது தொடர்பான கல்வெட்டுகள் ஏதும் இல்லாததால் அந்த நாகரிகத்தின் முடிவைத் தெரிந்து கொள்ள வழி இல்லாமல் போய்விட்டது.
ஆனால், அங்கே ஆய்வு மேற்கொண்ட அறிஞர்கள், கம் போடியா பற்றிய பல விசித்திரமான தகவல்களைத் திரட்டி இருக் கிறார்கள்.
அவற்றில் ஒன்று, கம்போடியாவில் கட்டப்பட்ட அத்தனை கோவில்களும் மக்கள் வழிபாட்டுக்காக கட்டப்பட்ட கோவில்கள் அல்ல என்ற வித்தியாசமான தகவல் ஆகும்.
அதனைப் பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.
(ஆச்சரியம் தொடரும்)