இத்தகைய பசியின்மைக்கு மனக்கவலையும் ஒருவகையில் காரணமாக இருக்கலாம். ஏதாவதொரு விஷயத்தை பற்றி சிந்தித்து கவலைப்படும்போது மன அழுத்தத்தை தோன்றுவிக்கும் ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கும். அது செரிமான செயல்பாடுகளை குறைக்கும். பசியின்மையையும் ஏற்படுத்தும். மனச்சோர்வும் பசியின்மையை தூண்டிவிடும்.
சோர்வாக இருக்கும்போது மூளையின் வழக்கமான செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும். சுறுசுறுப்புத்தன்மை குறைந்துவிடும். அதுவும் பசி உணர்வை கட்டுப்படுத்திவிடும். ஒருவர் மன அழுத்தத்தில் இருந்தாலும் அதுவும் சாப்பிடும் முறையை பாதிக்கும். மன அழுத்தம் அதிகரிக்கும்போது அஜீரணம், குமட்டல் போன்ற பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். அதுவும் உணவு மீதான ஆசையை குறைத்து விடும்.
சாப்பிடும் உணவின் அளவு குறைந்துபோகும். வயதுக்கும், உணவு பழக்கத்திற்கும் கூட தொடர்பு இருக்கிறது. வயதானவர்களில் 15 சதவீதம் முதல் 30 சதவீதம் பேர் வரை பசியின்மையால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. பசியின்மைக்கு என்ன காரணம் என்பதை கண்டறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்வது மிக அவசியமானதாகும். இல்லா விட்டால் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.