ஏதென்ஸ்,
உலக சரித்திரத்தில் கிரேக்க நாகரிகத்துக்கு என தனி முக்கியத்துவம் உண்டு. கிரீஸ் நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்னரே பூமி மற்றும் விண்வெளி பற்றி அறிந்து கொள்ள பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
அதன் ஒரு படியாக, உலகின் முதல் வானியல் கால்குலேட்டர் அங்கு பயன்பாட்டில் இருந்தது அறிவியலாளர்களையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும் ஆச்சரியமடைய செய்துள்ளது. கிரீஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டஉலகின் மிகப்பழமையான அனலாக் கணிணி இயந்திரத்தின் பயன்பாடு குறித்து விரிவான விளக்கம் கிடைத்துள்ளது.
கிரேக்க தீவான ஆண்ட்டிகைதேராவில் நடந்த கப்பல் விபத்தில் தான் 1901ம் ஆண்டு இந்த கணிணி கண்டுபிடிக்கப்பட்டது.அதில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே 82 சிறிய பாகங்களாக பிரிக்கப்பட்டு கிடைத்தது. அதன்பின் ஓராண்டுகள் கழித்து தொல்பொருள் ஆய்வாளர் வலேரியோஸ் ஸ்டாயிஸ் அதனுள் கியர்கள் இருப்பதை அறிந்தார்.
முதன்முதலாக கண்டறியப்பட்டபோது துருப்பிடித்திருந்த இந்த சாதனம் என்னவென்று தெரியாமல் வைக்கப்பட்டிருந்தது. பேராசிரியர் பிரீத் தான் எக்ஸ் ரே லென்ஸ்கலை பயன்படுத்தி இதன் மகத்துவத்தை கண்டறிந்தார்.
2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆன்ட்டிகைதேரா செயல்பாடு முறை, சூரிய குடும்பத்தின் இயந்திர மாதிரி ஆகும். இது உலகின் மிகப் பழமையான கணிணியாகவும் கருதப்படுகிறது. இந்த பொறிமுறையானது அதன் வெண்கல கியர் சக்கரங்களைப் பயன்படுத்தி கணக்கிடும் ஒரு பிரத்யேக கணக்கீட்டு இயந்திரம் ஆகும்.
இந்த மாதிரியை பயன்படுத்தி ஒலிம்பிக் போட்டிகள் எந்தெந்த ஆண்டில் நடைபெற வேண்டும் என்பதை பண்டைய கிரேக்கர்கள் கணக்கிட்டுள்ளனர்.
நவீன உலகில் 3டி எக்ஸ்ரே தொழில்நுட்பம் வந்துவிட்ட காரணத்தால், அதன் மூலம் இதனுள் இருக்கும் கியர்களை பிரித்து பார்த்து அவற்றின் செயல்முறையை ஓரளவுக்கு தெளிவாக அறிய முடிந்தது.
ஆயிரக்கணக்கான கிரேக்க எழுத்துக்கள் இதில் உள்ளன. சூரிய கிரகணம் சந்திர கிரகணம் போன்ற வானியல் நிகழ்வுகளை இந்த உபகரணத்தால் கணிக்க முடியும் என்பது தெளிவாகி உள்ளது.
அதனுள் இருக்கும் வெண்கல கியர்கள் மற்றும் கணக்கிடும் சாதனங்களை பயன்படுத்தி பண்டைய கிரேக்க அறிஞர்கள் வானியல் நிகழ்வுகளை அறிந்தனர்.
இப்போது இந்த பொக்கிஷம் கிரீஸ் தலைநகர் ஏதென்ஸின் தேசிய தொல்பொருள் அருங்காட்சியகத்தில் உள்ளது.