சிறப்புக் கட்டுரைகள்

மீன் பிடிக்கிறார்; கூடவே ரசிகர்களையும் பிடிக்கிறார்

மீன்பிடிக்கும் முறைகள், மீன்பிடி அறிவுரைகள், விதவிதமான வகையில் மீன் சமையல் போன்ற வீடியோக்கள் வெளியாகின்றன.

கேரளாவைச் சேர்ந்த 29 வயது இளைஞர் செபின் கிரியாக், பிஷ்சிங் பிரீக் என்ற பெயரில் யூ-டியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் மீன்பிடிக்கும் முறைகள், மீன்பிடி அறிவுரைகள், விதவிதமான வகையில் மீன் சமையல் போன்ற வீடியோக்கள் வெளியாகின்றன. இதுவரை 300-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் யூ-டியூப் சேனலை 25 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் சப்ஸ்கிரைப் செய்திருக்கிறார்கள்.

செபினின் யூ-டியூப் பயணம் யதேச்சையாக தொடங்கியது. அவர் வீடு ஆற்றுக்கு அருகில் அமைந்திருக்கிறது. எனவே, அவர் சிறு வயதில் இருந்தே மீன்பிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். எம்.எஸ்.சி. எலெக்ட்ரானிஸ் முடித்திருக்கும் அவர் வெளிநாடு செல்லும் திட்டத்தில் இருந்தார். சுவர் ஓவியம் தீட்டுவதில் அதீத ஆர்வம் கொண்டவர் ஒருநாள் தாம் மீன் பிடிக்கும் வீடியோ ஒன்றை யூ-டியூப்பில் பதிவு செய்திருக்கிறார். வெறும் 30 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோ 10 ஆயிரம் பார்வைகளைப் பெற்றது. இதனால் உற்சாகம் அடைந்த அவர் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டார்.

கோ-ப்ரோ கேமரா மூலம் தண்ணீருக்கு அடியில் எடுக்கப்பட்ட வீடியோ முதல்முறையாக வைரல் ஆனது. ஒரே நாளில் பத்து லட்சம் பார்வையாளர்களை வீடியோ பெற்றது. அந்தக் காலகட்டத்தில் மலையாளத்தில் குறைந்த அளவிலேயே மீன்பிடி தொடர்பான யூ-டியூப் சேனல்கள் இருந்தன. அவற்றில் யூ-டியூபர் செபினின் சேனல் தனித்துவம் பெற தொடங்கியது. அடுத்தடுத்து நல்ல வீடியோக்கள் மூலம் பார்வையாளர்களின் மனதை வென்ற அவர் புகழின் உச்சிக்குச் சென்றார்.

கொரோனா முதல் அலைக்கு முன்பு 2 லட்சம் சப்ஸ்கிரைபர்களைப் பெற்றிருந்த செபின், தற்போது 25 லட்சத்திற்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்களைக் கொண்டிருக்கிறார். விரைவில் யூ-டியூபர் செபின் கடை ஒன்றை திறக்க திட்டமிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி அமேசான் ஆற்றில் அரபைமா என்ற ராட்சத மீன்களை பிடிக்க திட்டம் வகுத்திருக்கிறார். மனிதர்களை விட பெரிய அளவில் வளரும் தன்மை கொண்ட இந்த மீன்கள் ஆபத்தானவை.

ராகுல் காந்தி சந்திப்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்த சமயத்தில் கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. அப்போது தேர்தல் பிரசாரத்திற்கு கேரளாவிற்கு வருகை தந்திருந்த காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி செபின் கிரியாக் உடன் கடலுக்கு படகில் சென்று நீச்சல் அடித்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவியது. அதன் மூலம் யூ-டியூபர் செபின் நாடு முழுவதும் மேலும் பிரபலம் ஆனார். அதே வேளையில் ராகுல் காந்தி யூ-டியூப் வீடியோ மூலம் இளம் வயதினரை எளிதாக சென்றடைய முடிந்தது.