சிறப்புக் கட்டுரைகள்

சர்வமும் சீனமயம்..! சாத்தியமா புறக்கணிப்பு கோஷம்..?

இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான எல்லை மோதல்கள், 20 இந்திய வீரர்கள் பலி, 76 வீரர்கள் படுகாயம் ஆகியவை சீனாவிற்கு எதிரான இந்திய மக்களின் கோபத்தை தூண்டி விட்டுள்ளது.

இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான எல்லை மோதல்கள், 20 இந்திய வீரர்கள் பலி, 76 வீரர்கள் படுகாயம் ஆகியவை சீனாவிற்கு எதிரான இந்திய மக்களின் கோபத்தை தூண்டி விட்டுள்ளது. இதையடுத்து சீனப்பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய மந்திரிகள் ராம்விலாஸ் பஸ்வான், ராம்தாஸ் அத்வாலே, பிரபல நடிகை சாஷி அகர்வால் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பல இடங்களிலும் சீனப்பொருட்களை நடுவீதியில் போட்டு உடைப்பது, எரிப்பது ஆகிய உணர்ச்சிகரமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

சீனப்பொருட்களை புறக்கணிப்பது சாத்தியமா? சீனப்பொருட்கள் எந்தளவு இந்திய சந்தையை ஆக்கிரமித்துள்ளன? எந்தெந்த துறைகளில் சீன நிறுவனங்கள் இங்கு ஆதிக்கம் செலுத்துகின்றன? இந்தியாவின் நுகர்வு சந்தையில் சீனா ஒரு தவிர்க்க முடியாத ஆதிக்க சக்தியா? என பல கேள்விகளுக்கான விடையை பார்ப்போம்.

சகலத்திலும் சீன மயமா?

நமது வீட்டு சமையலறையில் உள்ள பிரிட்ஜ், வாஷிங் மெசின் தொடங்கி, ஹாலில் மாட்டியுள்ள கெடிகாரம், உட்காரும் சோபா, பெட்ரூமில் படுக்கை விரிப்பு, பூஜை அறையில் உள்ள பிள்ளையார் பொம்மை, பாத்ரூமில் வாளி, ஷவர் என எல்லாவற்றிலும் சீனப்பொருட்கள் நீக்கமற நிறைந்துள்ளன. இது மட்டுமின்றி அலுவலகத்தில் பயன்படுத்தும் மேஜை, நாற்காலிகள், ஏ.சி., லேப்-டாப், ஆப்பிள் கம்ப்யூட்டர், பிரிண்டிங் மெசின் ஆகிய அனைத்திலும் சீனா சிரிக்கிறது.

குழந்தைகள் பயன்படுத்தும் பொம்மைகள், இளைஞர்கள் அணியும் ரீபாக் ஷீக்கள், செருப்புகள், டி-சர்ட்ஸ், கூலிங் கிளாஸ், பெண்கள் அணியும் வளையல்கள், பொட்டு ஸ்டிக்கர், சேலைகள், அனைவரும் பயன்படுத்தும் செல்போன்கள், அவ்வளவு ஏன்? துறவிகள் பயன்படுத்தும் யோகா மேட் கூட சீனத்தயாரிப்பாக உள்ளது.

ஆக்டோபஸ் கரங்கள்

கடந்த 2000-ம் ஆண்டில் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதியான பொருட்களின் மதிப்பு வெறும் 3 பில்லியன் டாலர்கள் தான். 2008-ல் இது 51 பில்லியனாகியது. 2019-ல் இது 92.7 பில்லியனாகி விட்டது. தற்போதைய நிலையில் இந்தியாவில் சீனா முதலீடு செய்யாத துறை என்ற ஒன்றை கண்டுபிடிப்பதே கஷ்டம். அந்தளவிற்கு தன் ஆக்டோபஸ் கரங்களால் சிறு தொழில்கள் முதல் பெரும் தொழில்கள் வரை அது ஆக்கிரமித்துள்ளது. எலக்ட்ரானிக் பொருட்கள் என்று சொல்லப்படும் மின்னணு பொருட்களின் தேவையில் 75 சதவீதம் சீனா தான் பூர்த்தி செய்கிறது.

செல்போன் சந்தையில் சீனாவின் ஆதிக்கம்தான் கொடிகட்டி பறக்கிறது. அதனால்தான் சீனாவின் செல்போன் நிறுவனங்கள் விளம்பரத்திற்காக மட்டுமே இந்தியாவில் ரூ.2 ஆயிரம் கோடி வரை செலவு செய்கின்றன. நமது சந்தையில் உள்ள 10 ஸ்மார்ட்போன்களில் 8 சீனாவுடையதுதான். குறிப்பாக ஓப்போ, ஜியோமி, விவோ ஆகியவை சீனாவுடையது ஆகும். மேலும் எந்த செல்போனிலும் உள்ள ஐ.சி.சிப்புகள், குறைகடத்திகள் ஆகியவை சீனாவிடம் இருந்தே பெறப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் கூட தங்கள் இணையதளத்தின் வேகத்தை அதிகரிக்க சீனாவின் ஹீவா நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளன. அலுவலகங்கள், திருமண மண்டபங்கள், தெருக்கள் என சகல இடங்களிலும் பயன்படுத்தும் சி.சி.டி.வி. கேமராக்கள் பெருமளவு சீனத்தயாரிப்புகளே.

இந்தியாவின் இயங்கு சக்தி

இந்திய மக்களில் சுமார் 25 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் ஏ.டி.எம். எனப்படும் பணப்பரிவர்த்தனை சீனாவின் தயவில்தான் நடக்கிறது.

மேலும் இன்று நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்தும் ஆட்டோ, டாக்சி இயங்கு நிறுவனங்கள், ஓட்டல்களில் இருந்து உணவு தருவித்து தரும் நிறுவனங்கள், எந்தவிதமான பொருட்களையும் கடைக்கு செல்லாமலே வீட்டில் இருந்தபடியே தருவித்து தரும் நிறுவனங்கள், டென் செண்ட் எனப்படும் குழந்தைகள் செல்போனில் விளையாடும் பப்ஜி போன்ற விளையாட்டுகள், பலரும் பயன்படுத்தும் டிக்-டாக் செயலி ஆகிய அனைத்தும் சீன நிறுவனங்களின் முதலீட்டிலும், தொழில்நுட்பத்திலும் நமக்கு கிடைத்தவைகளே.

உயிர் காக்கும் மருந்துகள்

பார்மா எனப்படும் மருந்து தயாரிப்பில் இந்திய நிறுவனங்கள் உலகப் புகழ்பெற்று விளங்குகின்றன என்பதும், நாம் சுமார் 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்து ஏற்றுமதி செய்கிறோம் என்பதும் யாவரும் அறிந்த செய்திதான். என்றாலும் இந்த மருந்துகளை தயாரிக்கும் மூலப்பொருட்களில் பெருமளவு சீனாவிடம் இருந்தே பெறப்படுகின்றன.

முக்கியமாக உயிர் காக்கும் மிக முக்கிய மருந்துகள் என 12 மருந்துகளை இந்திய அரசாங்கம் பட்டியலிட்டு உள்ளது. சீனாவில் இருந்து கிடைக்கும் மூலப்பொருட்கள் இல்லாமல் நாம் இவற்றை தயாரிக்கவே முடியாது என்பதுதான் யதார்த்தம். தற்போது கொரோனா காரணமாக சுமார் 3 மாதங்கள் சீனாவில் இருந்து மருந்து தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் வரமுடியாமல் போனபோது இந்திய மருந்து நிறுவனங்கள் அனைத்தும் ஸ்தம்பித்து போய் விட்டன.

அரசு துறையிலும் ஆதிக்கம்

நமது அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் அனைத்திலும் சீன நிறுவனங்களின் பங்களிப்பு உள்ளது. இந்தியாவின் தொலைத்தொடர்பு சாதனங்கள், கம்பியில்லா தொலைத்தொடர்பு சாதனங்கள், 4ஜி டவர்கள், அணுசக்திக்கு தேவையான எந்திரங்கள், கச்சா பொருட்கள், சோலார் உற்பத்திக்கான எந்திரங்கள், ராணுவத்திற்கான ஒரு சில தளவாடங்கள் ஆகிவற்றுக்கு நாம் சீனாவை சார்ந்துள்ளோம்.

இந்தியாவில் அரசு விவசாயிகளுக்கு வழங்கும் உரங்களில் 25 சதவீதம் சீனாவிடம் இருந்து தருவிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய விவசாயமும் சீனாவை ஓரளவு சார்ந்துள்ளது.

தரம் குறைந்தவை

சீனப்பொருட்கள் பொதுவாக விலை மலிவானவை. ஆனால் தரம் குறைந்தவை. மறு சுழற்சிக்கு பயன்படுத்த முடியாத சூழலியல் கேடு தருபவை. சீனப்பொருட்களால் நமது சிறு தொழில்கள் பல நலிவடைந்து விட்டன. பட்டாசு தொழில் தொடங்கி, பொம்மை தயாரிப்பு, மண்பாண்ட பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகிய பல தொழில்கள் சீனப்பொருட்கள் வரவால் பெரும் பாதிப்பு அடைந்துள்ளன.

இந்த தருணத்தில் நம்மால் தயாரிக்க முடிந்த சுமார் 500 பொருட்களை தடை செய்தால்கூட இந்திய சிறுதொழில்கள் மறுமலர்ச்சி அடையும்!

இந்தியா - சீனா ஏற்றுமதியும், இறக்குமதியும்

* சீனாவில் இருந்து ஆண்டுக்கு 4.5 லட்சம் கோடி மின்னணு சாதனங்கள் இறக்குமதியாகிறது.

* மருந்துகளை தயாரிக்கும் மூலப்பொருட்களில் 85 சதவீதம் சீனாவில் இருந்து தருவிக்கப்படுகிறது.

* அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு தந்த தகவல்படி, சுமார் 3 ஆயிரம் பொருட்களை நாம் சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்கிறோம்.

* 1,000-க்கும் மேற்பட்ட சீனாவின் மெகா நிறுவனங்கள் இந்தியாவில் 8 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளன.

* சீனாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களின் மொத்த மதிப்பு 70.32 பில்லியன் டாலர்கள்.

* இந்தியாவிடம் இருந்து சீனா இறக்குமதி செய்வது 16.75 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களே.

* இந்தியா தன் இறக்குமதி தேவைகளில் 16 சதவீதம் சீனாவை நம்பியுள்ளது.

* இந்தியா சீனாவிற்கு பருத்தி, வைரக்கற்கள், தாமிரம், மருந்து, அரிசி, சர்க்கரை, முருங்கை பவுடர், மருதாணி பவுடர் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கிறது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்