மேகங்கள் தவழ்ந்து செல்லும் மலைப் பகுதியாக இருப்பதால் இதற்கு இந்தப் பெயர் வந்திருக்கலாம். தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதியில் உயர்ந்து நிற்கும் இந்த மலைத் தொடர், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் வருஷநாடு மலைத் தொடரால் இணைந்துள்ளது. இதனால் திடீரென பெய்யும் மழை, மேகங்கள் தவழ்ந்து செல்லும் பசுமை போர்த்திய பகுதியைப் பார்க்கும்போதே பரவசம் பீறிடும். இது மதுரையிலிருந்து சுமார் 145 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சின்னமனூர் சென்று அங்கிருந்து மேகமலைக்கு செல்வது எளிது. இந்த மலை உச்சிக்கு செல்ல 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்தாக வேண்டும். ஒற்றை சாலை என்பதால் கார் பயணம் மட்டுமே சிறப்பானது. அதிலும் எஸ்.யு.வி. ரக கார்களை மட்டுமே பயன்படுத்தவும். சாலைகள் சற்று மோசமாக இருப்பதால் சிறிய ரக கார்களைத் தவிர்ப்பது நல்லது. மலை உச்சிக்கு செல்வதற்கு பக்கவாட்டில் தடுப்புச் சுவர் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் கிடையாது. எனவே ஜாக்கிரதையாக செல்வது நல்லது. இரண்டு மலைத் தொடர்களுக்கு இடையே ஆங்காங்கே பசுமையான தேயிலைச் செடிகள் சூழ அழகான நீர் தேக்கங்கள் இருக்கின்றன. மலையின் மேல் பகுதியில் மகாராஜா மெட்டு என்ற இடத்திலிருந்து கம்பம் பள்ளத்தாக்கின் முழு அழகையும் ரசிக்கலாம். இப்பகுதியிலிருந்துதான் வைகை ஆறு உருவாவதாகக் கூறப்படுகிறது.
மேக மலைக்கு ஹைவேஸ் மவுன்டெய்ன் என்ற பெயரும் உண்டு. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இது உள்ளது. இங்கு தேயிலை மற்றும் ஏலக்காய், காபி எஸ்டேட்கள் அதிகம். இது கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மலை சிகரங்களுக்கு நடுவை அமைந்துள்ள ஒரு பள்ளத்தாக்கு இது.
இரண்டு மலைகளுக்கு இடையே கட்டப்பட்டுள்ள அணையை இங்கே பார்க்க முடியும். நீர்தேக்கத்திலிருந்து வெளியேறும் நீர்தான் சுருளி அருவிக்குச் செல்கிறது. அருவியிலிருந்து வெளியேறும் நீர் தூவானமாக காற்றில் சிதறி தூவானம் என்ற பகுதியில் சிலீரென்று வீசுகிறது. இதனாலேயே இப்பகுதி தூவானம் என்றழைக்கப்படுகிறது. மலைப் பகுதியில் தங்குவதற்கு முன்பதிவு செய்ய வேண்டும்.
மேலே 13 அறைகள் மட்டுமே உள்ளன. இங்கு தங்குவதாயிருந்தால் முன்பதிவு செய்யவேண்டும். யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மலை உச்சிக்கு செல்பவர்கள் மாலையே திரும்ப வேண்டும் என வனத்துறை வலியுறுத்துகிறது. இங்கிருந்து தேக்கடிக்கும் செல்லலாம். அமைதியை விரும்பும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற சுற்றுலா இடமாக மேகமலை திகழ்கிறது.