கோல் இந்தியா
உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவும், அதன் துணை நிறுவனங்களும் 80 சதவீத பங்கினைக் கொண்டுள்ளன.
2016-17-ஆம் நிதி ஆண்டில் கோல் இந்தியா நிறுவனம் 55.40 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்தது. சென்ற நிதி ஆண்டில் (2017-18) இந்நிறுவனம் 60 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால் 56.74 கோடி டன் மட்டுமே உற்பத்தி செய்தது. எனினும் முந்தைய ஆண்டை விட உற்பத்தி 2.35 சதவீதம் அதிகரித்து இருந்தது.
இந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டில் (2018-19) பிப்ரவரி வரையிலான முதல் 11 மாதங்களில் கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 52.77 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 49.51 கோடி டன்னாக இருந்தது. ஆக, உற்பத்தி 6.6 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.
உற்பத்தி, விற்பனை
நடப்பு நிதி ஆண்டில் கோல் இந்தியா நிறுவனம் தலா 61 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. மேலும், 2025-26-ஆம் ஆண்டில் நிலக்கரி உற்பத்தியை 100 கோடி டன்னாக அதிகரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.