இவை பெரும்பாலும் கான்செப்ட் வாகனங்கள் எனப்படுகின்றன. அதாவது கருத்துரு அடிப்படையில் உருவாக்கப்பட்டு பின்னர் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு சந்தையில் படிப்படியாக விற்பனைக்கு வரும். சில மாடல்கள் வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கும். இந்தியாவில் சந்தை வாய்ப்பை அறிவதற்காகவும் காட்சிப்படுத்தப்படும்.
இவற்றில் பல மாடல்கள் விரைவிலேயே சந்தைக்கு விற்பனைக்கு வரும். கண்காட்சியில் பலரையும் கவர்ந்த இரு சக்கர வாகனங்களைப் பற்றிய கண்ணோட்டம்:
எவர்வ் இ.எப் 1
இது புரோட்டோடைப் மாடலாகும். இது மாக்ஸி ஸ்கூட்டர் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முன்பகுதியில் 7 அங்குல டி.எப்.டி. டிஸ்பிளே உள்ளது.
நேவிகேஷன், டெலிமெட்ரி, ஓ.டி.ஏ. வசதிகள் கொண்டது. யு.எஸ்.டி. போர்க் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய பின்புற ஷாக் அப்சார்பரைக் கொண்டது. இரு சக்கரங் களிலும் டிஸ்க் பிரேக் வசதி கொண்டது.
அப்ரிலியா எஸ்.எக்ஸ்.ஆர் 160
இத்தாலியைச் சேர்ந்த இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனத்தின் தயாரிப்பு. முந்தைய அப்ரிலியா மாடலைப் போல இருந்தாலும் இதில் பல மாறுதல்கள் உள்ளன. மூன்று பகுதிகளைக் கொண்டதாக இதன் முகப்பு விளக்கு உள்ளது.
முன்பகுதியில் டெலஸ்கோப்பிக் சஸ் பென்ஷன் உள்ளது. இது 125 சி.சி. மற்றும் 160 சி.சி. திறனில் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் விற்பனைக்கு வர உள்ளது.
ஒகினோவா குரூயிஸர்
ஒகினோவா குரூயிஸர் முழுக்க முழுக்க பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டராகும். பெரிய அளவிலான முகப்பு விளக்கு, டி.ஆர்.எல். விளக்கு மற்றும் டர்ன் இன்டிகேட்டரை ஒருங்கே கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 3 கிலோவாட் பிரஷ்லெஸ் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இதற்கான மின்சாரத்தை 4 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி அளிக்கிறது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கி.மீ. தூரம் ஓடக் கூடியது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கி.மீ. ஆகும்.
எவோலெட் வாரியர்
முதலாவது பேட்டரி குவாட் பைக். இதில் உள்ள மோட்டார் நீர் புகா தன்மை கொண்டது. இது அதிகபட்சமாக மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் செல்லும்.
இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 கி.மீ. தூரம் செல்லலாம். லித்தியம் அயன் பேட்டரி மற்றும் லெட் ஆசிட் பேட்டரி கொண்ட இரு மாடல்களில் இது வெளிவர உள்ளது.
வெஸ்பா எலெக்ட்ரீசியா
நவீன தோற்றத்தில் (ரெட்ரோ) வடிவமைக்கப்பட்ட இந்த பேட்டரி ஸ்கூட்டருக்கு எலெக்ட்ரீசியா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ரைடிங் மோட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ஸ்மார்ட்போன் செயலி உள்ளது. இதில் 3.6 கிலோ வாட் பிரஷ்லெஸ் டி.சி. மோட்டார் உள்ளது. இதற்கான மின்சக்தியை 4.2 கிலோவாட் பேட்டரி அளிக்கிறது.
ஹீரோ எலெக்ட்ரிக் ஏ.இ 3 டிரைக்
இரண்டு சக்கரங்களைக் கொண்டிருந்தால் அது பைக். மூன்று சக்கரங் களோடு வந்துள்ள இதற்கு பெயர் டிரைக். முன்புறம் இரண்டு சக்கரமும், பின்பகுதியில் ஒரு சக்கரமும் உள்ளது. இதில் 5.5 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான மின்சாரத்தை 4 கிலோவாட் திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி அளிக்கிறது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ. வரை பயணிக்கலாம்.