கடந்த வருடம் (முதல் அலை), அமெரிக்கா, பிரேசில், ஐரோப்பா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ்' கோரத்தாண்டவம் ஆடியது. அதேசமயம் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பெரியளவில் பாதிப்பின்றியும் கடந்து சென்றது. ஆனால் இந்த வருடம் (இரண்டாம் அலை) நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கொரோனா வைரஸின் முதல் அலையில் தப்பி பிழைத்த இந்தியா, இரண்டாம் அலை தாக்குதலில் சின்னாபின்னமாகி இருக்கிறது. அதேசமயம் முதல் அலையில் பெருத்த உயிர் சேதத்தை சந்தித்த உலக நாடுகள், இரண்டாம் அலை தாக்குதலில் இருந்து சாதுரியமாக தப்பித்துவிட்டன. இதை எளிதாக கடந்துவிடலாம் என்றாலும், 2-ம் அலையில் இருந்து தப்பி பிழைக்க, உலக நாடுகள் பெரிதும் உழைத்திருக்கின்றன. அதை தெளிவாக விளக்குகிறார், முனைவர் ஆரோக்கிய ராஜ். தென் கொரியாவின் முன்னணி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் இவர், உலக நாடுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பட்டியலிடுகிறார்.
முன்னெச்சரிக்கை
கொரோனா முதல் அலையிலேயே தைவான், தென்கொரியா, சிங்கப்பூர், நியூசிலாந்து, வியட்நாம் போன்ற பெரும்பாலான நாடுகள் உஷாராகிவிட்டன. கொரோனா பாதிப்பிற்குள்ளான நாடுகளுக்கிடையிலான விமான போக்குவரத்து நிறுத்தம், வெளிநாட்டு பயணிகளை தனிமைபடுத்துதல், இலவச மருத்துவ பரிசோதனை, அதிக ஆர்.டி.பி.சி.ஆர். (RTPCR) சோதனைகள், கொரோனா நோயாளிகளின் தொடர்புகளை தீவிரமாக கண்காணிப்பது, கொரோனா நோயாளிகளுக்கு மன தைரியம் அளிப்பது என முதல் அலையிலேயே தீவிரம் காட்டினர். பல நாடுகள் போர்க்கால நடவடிக்கைகளில் இறங்கின. அன்றிலிருந்து இன்றுவரை கொரோனா சம்பந்தமான செய்திகளை உன்னிப்பாக கவனிக்கின்றன, கொரோனா பற்றிய ஆய்வுகள் நடத்துகின்றன. விஞ்ஞானிகளின் முன்னெச்சரிக்கை அறிக்கைகளை செவிக்கொடுத்து கேட்கின்றன. உடனுக்குடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்குகின்றன.
வெளிப்படை தன்மை
சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதை ஊடகங்கள் வாயிலாக உலக நாடுகள் துல்லியமாக மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன. கொரோனா தொற்று வேகமாக பரவ தொடங்கினால் அதை மூடி மறைக்காமல், உள்ளதை உள்ளபடியே மக்களிடம் கூறி, அவர்களுக்கு பயத்துடன் கூடிய விழிப்புணர்வை ஊட்டுகின்றனர். அரசு உண்மைநிலையை வெளிப்படுத்துவதன் மூலம் மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் அரசுடன் கைக்கோர்த்து கொரோனாவை கட்டுபடுத்த முடியும். அதேபோல அறிவியல்-மருத்துவ கட்டமைப்புகளுக்கு அதிக நிதி ஒதுக்குவதன் மூலம் கொரோனா போன்ற பேரிடர்களை சமாளிக்கமுடியும்.
கடுமையான கட்டுப்பாடுகள்
போர் காலங்களில் எப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் எல்லாம் கடைப்பிடிக்கப்படுமோ, அதை கொரோனா காலத்தில் கடைப்பிடிக்கிறார்கள். சீனா, வட-தென் கொரியா, ரஷியா... போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. பொது இடங்களில் கூட்டம் கூட தடை, கட்டாய சமூக இடைவெளி, கட்டாய முககவசம் அணிதல், கைகளில் சானிடைசர் ஜெல், சாதாரண சளி-காய்ச்சலுக்கும் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வது, காரணமில்லாமல் வெளியில் சுற்றித்திரிவதை குறைப்பது... போன்ற கட்டுப்பாடுகளை உலக நாடுகள் வகுத்திருக்கின்றன. அதை பொதுமக்களும் கடைப்பிடிக்கிறார்கள்.
உடனடி மருத்துவ கட்டமைப்புகள்
பெரும்பாலான நாடுகள் கொரோனா முதல் தாக்குதலில் பெற்ற தோல்வி அனுபவங்களை வைத்து இரண்டாம் அலையை சமாளித்து உள்ளன. அதாவது மருத்துவ கட்டமைப்புகளை உயர்த்துதல், கொரோனா தடுப்பூசி ஆய்வுகள், அறிவியல் ஆரய்ச்சியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கொரோனா பற்றிய தொடர் கருத்தரங்குகள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், கொரோனா சிகிச்சை மருந்துகள், தற்காலிக சிகிச்சை மையங்கள், அவசர கால மருத்துவமனைகள், ஆக்ஸிஜன் படுக்கைகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், அவசர கால மருத்துவர்கள், செவிலியர்கள், நிதி ஒதுக்குதல்... இப்படி கொரோனா பாதிப்பை எதிர்கொள்வதற்கு முன்பாகவே, தங்களை தயார்படுத்தி கொள்கின்றனர். அதனால் கொரோனா 2-ம் அலையின் பாதிப்பை வெகுசுலபமாக சமாளித்துவிட்டனர்.
டி3 (டெஸ்டிங்-டிராக்கிங்-டிரேசிங்)
சீனா, தென் கொரியா போன்ற நாடுகள் இந்த டி3 பார்முலாவை கொண்டுதான் கொரோனாவின் முதல் அலையை கட்டுப்படுத்தினர். 2-ம் அலை ஏற்படாமல் இருக்க, கட்டுப்பாடாகவும் இருக்கிறார்கள். டி3 என்பது டெஸ்டிங், டிராக்கிங் மற்றும் டிரேசிங் ஆகிய மூன்றின் சுருக்கம். அதாவது முடிந்த அளவிற்கு அதிகமாக கொரோனா பரிசோதனை (டெஸ் டிங்) செய்கிறார்கள். பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர், அவர் தொடர்புடைய நபர்கள் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுவார்கள். அதேசமயம் கொரோனா பாதித்த நபரின் கிரெடிட் கார்டு மூலம் அவர் எங்கெல்லாம் சென்றார் (டிராக்கிங்), எந்த பொதுபோக்குவரத்தை பயன்படுத்தினார், அவருடன் பயணித்த மற்ற நபர்களின் விவரங்களை பட்டியலிட்டு (டிரேசிங்), அவர்களையும் தேடிப்பிடித்து தனிமைப்படுத்துகிறார்கள். இப்படிதான் சீனா கொரோனாவை கட்டிற்குள் கொண்டு வந்தது.
சமூக பொறுப்பு
கொரோனாவிற்கு எதிரான போரில் உலக நாட்டு மக்களும் பங்கெடுத்திருக்கிறார்கள். அரசாங்கத்தின் சட்டத்திட்டங்களை மதிக்கிறார்கள். அவர்களது சமூக கடமையை சரிவர செய்கிறார்கள். தேவையின்றி வெளியில் சுற்றி திரிவதில்லை. நெருங்கிய சொந்தங்களின் விழாக்களில்கூட சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்கள். முககவசம் அணிகிறார்கள்.
தடுப்பூசி
கொரோனாவிற்கு எதிரான ஆயுதமாக, தடுப்பூசியைதான் உலக நாடுகள் கையில் எடுத்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் தற்பொழுது கொரானா தொற்று குறைகிறது. காரணம் 48 சதவிகித மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். சில நாடுகளில் விருப்பு வெறுப்பின்றி, தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. சில நாடுகளில் மக்களே முன்வந்து, தடுப்பூசிகளை செலுத்தி கொள்கிறார்கள். சில நாடுகளில் அதிக விலை கொடுத்தும், சில நாடுகளில் குறைந்த விலையிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இப்படிதான் பல உலக நாடுகள் 2-ம் அலையில் இருந்து தப்பிப்பிழைத்திருக்கின்றன. நாமும் கொரோனா 2-ம் அலையில் பெற்ற அனுபவங்களை ஆய்வு செய்வதன் மூலம் 3-ம் அலையை முன்னெச்சரிக்கையோடு எதிர்கொள்ள முடியும்.