ஏப்ரல் மாதத்தில், டாலர் மதிப்பில் கச்சா எண்ணெய் இறக்குமதி 9.26 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
மூன்றாவது இடம்
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நம் நாடு சவுதி அரேபியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்ய வேண்டி இருக்கிறது.
நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் 1,124 கோடி டாலருக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது. முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது அது 4 சதவீதம் குறைவாக இருந்தது. பிப்ரவரி மாதத்தில் எண்ணெய் இறக்குமதி 938 கோடி டாலராக இருந்தது. மார்ச் மாதத்தில் 1,175 கோடி டாலருக்கு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது.
இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி 1,138 கோடி டாலராக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 1,041 கோடி டாலராக இருந்தது. ஆக இறக்குமதி 9.26 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் எண்ணெய் அல்லாத சரக்குகள் இறக்குமதி 3,002 கோடி டாலராக உள்ளது. முந்தைய மாதத்தில் (மார்ச்) அது 3,169 கோடி டாலராக இருந்தது.
கடந்த நிதி ஆண்டில் (2018-19), ஒட்டுமொத்த அளவில் 14,047 கோடி டாலருக்கு எண்ணெய் இறக்குமதி ஆகி உள்ளது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 29 சதவீதம் அதிகமாகும். அப்போது இறக்குமதி 10,866 கோடி டாலராக இருந்தது. இதே காலத்தி எண்ணெய் அல்லாத சரக்குகள் இறக்குமதி 3 சதவீதம் உயர்ந்து 36,697 கோடி டாலராக இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் அது 35,692 கோடி டாலராக இருந்தது.
சென்ற நிதி ஆண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம், வரலாறு காணாத அளவிற்கு, 11,190 கோடி டாலரை எட்டி இருக்கிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 27.15 சதவீதம் அதிகமாகும்.
தங்கம் இறக்குமதி
இந்தியாவில் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக தங்கம் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. தங்கம் இறக்குமதியில் நம் நாடு முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் 3,280 கோடி டாலருக்கு தங்கம் இறக்குமதி ஆகி உள்ளது. முந்தைய நிதி ஆண்டில் அது 3,370 கோடி டாலராக இருந்தது.