சிறப்புக் கட்டுரைகள்

தினம் ஒரு தகவல் : வர்த்தக போர் வந்தது ஏன்?

கடந்த ஆண்டு சீனாவின் மீது இறக்குமதி வரியை விதித்து வர்த்தக போரை அறிவித்தார், அமெரிக்க அதிபர் டிரம்ப்.

தினத்தந்தி

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது அமெரிக்கா 50 பில்லியன் டாலர் அளவுக்கு புதிய வரி விதித்ததை கண்டு ஆடிப்போனது சீனா. பதிலுக்கு அமெரிக்காவிலிருந்து சீனாவில் இறக்குமதியாகும் பொருட்கள் மீது 3 பில்லியன் டாலர் அளவுக்கு வரி விதித்தது சீன அரசாங்கம்.

அமெரிக்காவின் இந்த வர்த்தக போருக்கு பல காரணங்களை சொல்கிறார்கள், நிபுணர்கள். அதில் முக்கியமானது காப்புரிமை திருட்டு. அமெரிக்காவில் உருவாக்கப்படும் எந்த புதிய பொருளும், உற்பத்தி செய்யப்படுவதற்கு முன் காப்புரிமை பெறப்படும். இப்படி காப்புரிமை பெறுவதற்கு காரணமே, அந்தப் பொருளை உருவாக்கிய நிறுவனத்தின் அனுமதியின்றி உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அந்த பொருளை தயாரிக்கக்கூடாது என்பதற்காகத்தான். ஆனால், காப்புரிமையை மீறும் விஷயத்தில் சீனா உலக அளவில் முதலாவது இடத்தில் இருக்கிறது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு. அமெரிக்காவில் காப்புரிமை பெற்ற பொருட்களை கொஞ்சம்கூட வித்தியாசமில்லாமல் மிக குறைந்த செலவில் தயார் செய்து, அந்த போலியான பொருட்களை அமெரிக்காவின் நிஜமான பொருட்களுடன் கலந்து விற்றுவிடும் வித்தையில் கில்லாடியாக இருக்கிறது சீனா.

உலக அளவில் தயாராகும் போலியான பொருட்களில் 80 சதவீத பொருட்கள் சீனாவில் தான் தயாராகிறது. அமெரிக்காவில், போலியான பொருட்கள் லட்சக்கணக்கில் வர்த்தகமாவது கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்க ராணுவ விமானங்களிலும், ஆயுதங்களிலும் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஏராளமானவை சீனாவில் தயாரான போலியானவை என்ற திடுக்கிடும் உண்மையும், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி போலியான பொருட்கள் குறித்த குற்றச்சாட்டுகள் அமெரிக்காவில் சுனாமியைப் போல வருவதால், அங்கு தயாராகும் பொருட்களை விற்க முடியாமலே போகின்றன. இதனால், அமெரிக்காவில் தொழில் வளர்ச்சி குறைந்து, தொழில் செய்பவர்கள் தங்கள் நிறுவனங்களை இழுத்து மூடவேண்டிய நிலை ஏற்பட்டு, பலரும் வேலை இழக்கும் அபாயம் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. அமெரிக்காவின் நலனுக்காக பாடுபடுவேன் என்ற வாக்குறுதியை கொடுத்து, தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், அமெரிக்காவின் தொழில் நலனை காக்க இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்.

சீனா மீது அமெரிக்கா வர்த்தக போர் தொடுக்க இன்னொரு முக்கிய காரணம், வர்த்தக பற்றாக்குறை. தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறை சுமார் 375 பில்லியன் டாலருக்கு மேல் இருக்கிறது. இத்தனை பெரிய இடைவெளி எப்படி வந்தது? அமெரிக்காவானது சீனாவிலிருந்து 506 பில்லியன் டாலர் அளவுக்கு பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்கிறது. ஆனால், அமெரிக்காவோ சீனாவுக்கு 130 பில்லியன் டாலர் அளவுக்கு மட்டும் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. இதனால்தான் வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்