சிறப்புக் கட்டுரைகள்

தினம் ஒரு தகவல் : எதிர்கால பசுமை வீடுகள்

நல்ல வீடு எப்படி இருக்க வேண்டும்? அதன் இலக்கணம் என்ன? இயற்கை வெளிச்சமும் சுத்தமான காற்றும் கிடைத்தால் போதும், அதுவே நல்ல வீடு என்கிறீர்களா? மேலே மின்சார வயர்கள் செல்லாத, சுவர்களைச் சுற்றி பச்சைப் பசேலென்ற இலைகள் மூடிய, முழுவதும் மரம் போன்றே தோற்றம் தரக்கூடிய வீடு எப்படி இருக்கும்?

தினத்தந்தி

காட்டில் இருப்பது போன்ற ஒரு வீடு நகரத்துக்குள் கிடைத்தால் கேட்கவா வேண்டும்? ஆனால் இதெல்லாம் நடக்கவா போகிறது, எதற்குத் தேவையில்லாமல் கற்பனையை வளர்க்க வேண்டும் என்று தோன்றுகிறதா? ஆனால் எதிர்காலத்தில் இப்படியான வீடுகள் அதிகம் இருக்கத்தான் போகிறது என்கிறார் ஒரு கட்டிட வடிவமைப்பாளர். நெதர்லாந்தைச் சேர்ந்த ரைமாண்ட் டே ஹுல்லு என்னும் வடிவமைப்பாளர் இத்தகைய வீடுகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

முழுமையான அளவில் பசுமை வீடாக இது உள்ளது. வனத்தின் நடுவே மரப் பொந்தில் வாழ்ந்தது போன்ற வாழ்க்கையை இந்த வீடு உங்களுக்குத் தரும். இவர் உருவாக்க உள்ள நகரக் குடியிருப்பில் புகையைப் பரப்பிச் செல்லும் காரையோ வாகனங்களையோ கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீங்கள் பார்க்கவே முடியாது. மின்னாற்றல், நீர் போன்ற அடிப்படைத் தேவைகளில் தன்னிறைவு பெற்றதாக அது இருக்கும். வீட்டின் உள் அலங்காரங்களில் கண்ணாடியும் மரமும் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கும். அகலமான திறப்பு கொண்ட பிரெஞ்சு மாடல் பால்கனியும், பெரிய பெரிய ஜன்னல்களும் திறந்தவெளியில் இருப்பது போலவே உங்களை உணரச் செய்யும். உலகத்திலேயே முதல் நூறு சதவீத பசுமை நகரை உருவாக்கும் திட்டத்தை இவர் முன்வைத்துள்ளார்.

ஒயாஸிஸ் பவுண்டேஷன் சார்பில் இந்த நகரை உருவாக்க இவர் திட்டமிட்டுள்ளார். நான்கு தளங்களை கொண்ட வீடுகளை அமைக்க உள்ளார். சூரிய சக்தியை மின்னாற்றலாக மாற்றும் சூரிய மின்சக்தி தகடுகளை அமைத்து வீட்டின் மின் தேவைகளைச் சமாளிக்கப்போகிறார். மரத்தாலான வீட்டின் நவீன வசதிகளுடன் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். அத்தகைய சுகத்தை இந்த வீடு தரும் என்கிறார் ரைமாண்ட். உயர் தரத்திலான பசுமை வீட்டை விரும்பும் நடுத்தர வகுப்பினர் அணுகக்கூடிய விலையில் இந்த வீடுகள் கிடைக்கும் என்பது அனைவரையும் ஈர்க்கும் செய்தி.

எல்லோரும் விரும்பும் இந்த வீடு நடுத்தர வர்க்கத்தினரும் வாங்கக்கூடிய விலை கொண்டதாகவும், நீடித்து உழைக்கக் கூடியதாகவும் இருக்கும். மேலும் இன்றைய நகரங்களின் தேவையைப் பூர்த்திசெய்யக் கூடியதாகவும் இது இருக்கும். உலகின் மிகப் பழைய தொழில்நுட்பத்தை நவீனப்படுத்தியதாக இதன் வடிவமைப்பு உள்ளது. ஒடுங்கியதாக, உயரமாக இருக்கும் இந்த வீடுகள் தனித்தனியாக அமைக்கப்படும். உயரத்திலிருந்து பார்க்கும்போது காட்டில் அமைந்திருக்கும் தனித் தனி மரங்கள் போலவே காணப்படும். நகரம், கிராமம் என அனைத்துப் பகுதிகளிலும் இந்த வீட்டை அமைக்கலாம்.

ரைமாண்ட் டே ஹுல்லு கடற்கரையை ஒட்டிய வனப்பகுதியில் தந்தையுடன் வாழ்ந்தவர். எனவே அவருக்குச் சிறு வயது முதலே வனம், இயற்கை, வீடு போன்றவற்றின் மீது பெரும் பிரியம். அவர் தந்தை கட்டிய வீட்டை அருகிலே இருந்து பார்த்த காரணத்தால் அவருக்கு வீட்டின் வடிவமைப்பு மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. எனவேதான் வீட்டை இயற்கையான முறையில் வனச் சூழலில் அமைக்க முற்பட்டிருக்கிறார். இவர் அமைக்க உள்ள நகரம் இப்போது நாம் காணும் நகரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். மேலும் நூறு சதவீதப் பசுமை நகரமாகவும் இருக்கும் என்றும் அவர் ஆரூடம் கூறுகிறார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்