மேலும், இறந்துபோன உயிரினங்களின் உடலில் ஆந்தராக்ஸ், காலரா, ராபிஸ் போன்ற நோய் தொற்றுகள் இருந்தால் அந்த உயிரினங்களை தின்பதன் மூலம் குறிப்பிட்ட நோய் கிருமிகளின் பரவலை இவை தடுக்கின்றன. அந்த நோய் கிருமிகளை ஜீரணித்து கொள்வதற்கான அமிலம் பிணந்தின்னி கழுகுகளின் வயிற்றில் சுரக்கிறது.
பிணந்தின்னி கழுகுகளின் அழிவுக்கு காரணம் நகர் மயமாக்கம்தான் என்றாலும், முழு முதற்காரணம் கால்நடைகளுக்கு தரப்படும் டைக்ளோபினாக் எனும் வலி நிவாரணி மருந்து. டைக்ளோபினாக் மருந்தை உட்கொண்ட கால்நடைகள் இறந்த பிறகு, பிணந்தின்னி கழுகுகள் அவற்றை உணவாக கொள்கின்றன. அப்போது அந்த உயிரினங்களின் உடலில் எச்சமாக தங்கியிருக்கும் டைக்ளோபினாக் கழுகுகளின் உடலுக்குள் சென்று அவற்றை மரணத்துக்கு தள்ளுகின்றன.
பிணந்தின்னி கழுகுகளின் எண்ணிக்கை குறைய தொடங்கிய ஆரம்ப காலத்தில், டைக்ளோபினாக் தாக்குதல் மட்டுமே அவற்றின் அழிவுக்கு காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால் சமீபகாலமாக சடலத்துக்கு விஷம் தடவுதல், அதாவது புலி போன்ற விலங்குகளால் கொல்லப்பட்ட இதர விலங்குகளின் உடலில் விஷத்தை வைத்துவிடுவதும் இக்கழுகுகள் அழிவுக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.
புலிகள் போன்ற ஆட்கொல்லி விலங்குகள் ஒரு மாட்டை கொன்றால், உடனடியாக முழு இறைச்சியையும் தின்று விடாது. இரையின் உடலை மறைவான இடத்துக்கு இழுத்து சென்று இரண்டு, மூன்று நாட்கள் வைத்திருந்தே உண்ணும். அப்போது, இந்தப் புலிகள் இதர மாடுகளை கொன்றுவிடக் கூடாதே என்ற அச்சத்தில், ஏற்கனவே புலிகளால் கொல்லப்பட்ட மாட்டின் உடலில் விஷத்தை தடவி வைத்து விடுகிறார்கள் உள்ளூர் மக்கள். அவற்றை புசிக்கும் புலியும் இறந்துவிடும். புலியை புசிக்கவரும் பிணந்தின்னி கழுகுகளும் இறந்து விடுகின்றன.