ஆட்டோமொபைல் தொழிலில் ஏற்பட்டுள்ள மந்தம் தமிழகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் சந்தையில் நிலவும் நிதி தட்டுப்பாடு, நிதி நிறுவனங்கள் சந்திக்கும் பண நெருக்கடிகளினால் ஆட்டோமொபைல் தொழிலில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு ஜூலை 2019 தான் மிக மோசமான மாதம் ஆகும். 2001க்கு பிறகு மிக மோசமான விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டதால், ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை குறைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் வாகன விற்பனை பெரிய அளவில் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் இவர்கள் தங்களில் உற்பத்தி கொள்ளளவை விரிவுபடுத்தியிருந்தனர்.
நிதி பற்றாக்குறை மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் ஆகியவற்றினால் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவாக, வாகன உற்பத்தியாளர்கள், வேலை நாட்களை குறைத்தும், ஆட்குறைப்பு செய்தும் நிலைமையை சமாளிக்க முயல்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர். நிலைமை விரைவில் சீரடையும் என்று அவர்களுக்கு நம்பிக்கையில்லை.
ஜூலை 2019ல், பயணிகள் வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 30.9 சதவீத வீழ்ச்சியடைந்து, 2,00,790 ஆக இருந்ததாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது. சென்ற ஆண்டு ஜூலையில் இது 2,90,931 ஆக இருந்தது.
இரு சக்கர வாகனங்களின் விற்பனை ஜூலை மாதத்தில் 16.82 சதவீத வீழ்ச்சியடைந்து, 1.52 கோடியாக இருந்தது. சென்ற ஆண்டு ஜூலையில் இது 1.817 கோடி அலகுகளாக இருந்தது. வணிக வாகனங்களின் விற்பனை 25.71 சதவீத வீழ்ச்சியடைந்து, 56,866யாக இருந்தது.
வேலை மற்றும் உற்பத்தி திறன் இழப்புகள்
ஆட்டோமொபைல் மற்றும் உதிரிவாகன உற்பத்தி துறையில், சுமார் 3.5 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மட்டும், சமீப மாதங்களில் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக கணிக்கப்படுகிறது.
மே மாதத்தில் இருந்து மாருதி நிறுவனம், டாடா மோட்டார்ஸ், மகிந்திரா அண்ட் மகிந்திரா, ஹுண்டாய் மோட்டார்ஸ் இந்தியா மற்றும் இதர முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த தினங்களை அறிவித்துள்ளன.
இரண்டாவது காலாண்டான ஜூலை, செப்டம்பர் மாதங்களிலும் இதை தொடர்வதாக அறிவித்துள்ளன. ஜூலை கடைசி வாரத்தில் மேலும் அதிக உற்பத்தி குறைப்பை அறிவித்துள்ளன.
மிகப்பெரிய வணிக வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிம்பிரி மற்றும் ஜாம்ஷெட்பூர் தொழிற்சாலைகளை மூன்று நாட்கள் மூட உள்ளதாக அறிவித்துள்ளது. மகிந்திரா குழுமம், அதன் தொழிற்சாலைகளை, இரண்டாவது காலாண்டில், 8 முதல் 14 தினங்களுக்கு மூடுவதாக அறிவித்துள்ளது. ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் அதன் தொழிற்சாலைகளை இந்த மாதத்தில் மட்டும் நான்கு தினங்களுக்கு மூடியுள்ளது. அசோக் லேலாண்ட் நிறுவனம் இந்த மாதத்தில் இரண்டு தினங்கள் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்தது. டி.வி.எஸ் குழுமத்தை சேர்ந்த டி.வி.எஸ் லூகாஸ் நிறுவனம் கடந்த ஒரு மாதத்தில் சில நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தம் செய்துள்ளது.
டீலர் நிறுவனங்கள் மூடல்
இதன் தொடர் விளைவாக, கடந்த 18 மாதங்களில் நாடு முழுவதும் 286 வாகன டீலர் நிறுவனங்கள் மூடப்பட்டன. சுமார் 40,000 பேர் வேலையிழந்துள்ளனர். பயணிகள் கார் விற்பனை தான் மிக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூறுகிறது. நகர்ப்புற, அரை நகர்ப்புற பகுதிகளில் அதிக அளவில் டீலர் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
மராட்டியத்தில் மட்டும் 64 டீலர் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதை அடுத்து தமிழகத்தில் 35 நிறுவனங்களும், டெல்லியில் 27 நிறுவனங்களும், பீகாரில் 26 நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
சென்னையை தலைமையிடமாக கொண்ட முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவரான வேணு ஸ்ரீநிவாசன், வரும் ஆண்டு மிகவும் கடினமாக இருக்கும் என்கிறார். கடந்த காலாண்டில் டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை குறைந்துள்ளது. நிச்சயமற்ற, கொந்தளிப்பான ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்.
கடந்த ஒன்பது மாதங்களில் ஆட்டோமொபைல் துறையில் 2,085 கோடி டாலர் மதிப்புள்ள அன்னிய நேரடி முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. விற்பனை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள், தங்களில் உற்பத்தி கொள்ளளவை விரிவுபடுத்தியதால், உலகின் நான்காவது பெரிய ஆட்டோமொபைல் தொழில்துறை கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்தது. ஜெர்மனியை இதில் பின்னுக்கு தள்ளியது.
2015ல் இந்த துறையில் பெரும் வளர்ச்சியை இந்தியா அடைந்தது. பயணிகள் வாகனங்களில் விற்பனை நான்கு மடங்காக, 6.9 லட்சத்தில் இருந்து 27.7 லட்சமாக அதிகரித்தது. திடீரென்று ஏற்பட்டுள்ள மந்தத்தினால், தொழிற்சாலைகள் மற்றும் டீலர்கள் வசம் தேங்கியுள்ள வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆட்குறைப்பு அடிக்கடி செய்யப்படுகிறது. இதனால் வேலையிழப்பு அதிகரித்து, 45 ஆண்டுகால உச்சத்தை தொட்டுள்ளது.
2019ல், பயணிகள் வாகனங்களை சொந்தமாக வைத்திருக்க ஆகும் மொத்த செலவு 6 முதல் 8 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. எரிபொருள் விலையேற்றம், காப்பீட்டு கட்டண உயர்வு, கச்சா பொருட்கள் விலை உயர்வினால் உதிரி பாகங்களின் விலை பல முறை உயர்த்தப்பட்டது போன்றவை இதற்கு காரணம் என்று கிரிசில் ஆய்வு மையத்தின் இயக்குனரான ஹெடல் காந்தி கூறுகிறார். இது பயணிகள் வாகன விற்பனையை எதிர்மறையாக பாதித்தது.
அதே போல் காப்பீட்டு பிரிமிய கட்டண உயர்வினாலும், கச்சா பொருட்கள் விலை உயர்வினாலும் இரு சக்கர வாகனங்களின் விலைகளும் அதிகரித்து, விற்பனையை பாதித்துள்ளது என்கிறார். வணிக வாகனங்களில் விற்பனை வீழ்ச்சிக்கு ஆக்ஸில் பற்றிய விதிமுறைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் சந்தையில் நிலவும் நிதித்தட்டுப்பாடு ஆகியவற்றை காரணமாக சொல்கிறார்.
பயணிகள் வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 2020ல் 5 முதல் 7 சதவீத வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு சக்கர வாகன விற்பனை நடப்பு நிதியாண்டில் 1 முதல் 3 சதவீத வீழ்ச்சியடையும் என்று கிரிசில் அமைப்பு கருதுகிறது. நிலைமை விரைவாக சீரடையாது என்பதையே இது காட்டுகிறது.
கால் டாக்சிகளின் அபரிமிதமான வளர்ச்சியும் பயணிகள் வாகன விற்பனை வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகும். ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் கடந்த மூன்று வருடங்களில் முக்கிய நகரங்களில் அசுர வளர்ச்சி அடைந்தன. அவற்றின் கூட்டாளிகள் பயணிகள் வாகனங்களை அதிக அளவில் வாங்கினார்கள்.
இரண்டாவது அடுக்கு நகரங்களில் வளர்ச்சியடைய அவர்கள் போட்ட திட்டங்கள் பல காரணங்களினால் மட்டுப்பட்டது. முதல் பத்து பெரு நகரங்களில் அவர்கள் அடைந்த பெரும் வெற்றியினால், கார் வாங்க திட்டமிட்டிருந்தவர்களில் பலரும் இவர்களின் சேவைகளை தொடர்ந்து பயன்படுத்த துவங்கியதால், கார் வாங்குவதை தவிர்த்தனர். இளைஞர்களுக்கு இது மிகவும் பொருந்தும். கார் வாங்கி, அதை பராமரித்து, நெரிசல் மிகுந்த நகரங்களில் அவற்றை நிறுத்த இடமில்லாமல் சிரமப்படுவதை விட, கால் டாக்சிகளை பயன்படுத்துவது இவர்களுக்கு எளிதாக இருக்கிறது. மேலும் இளைஞர்கள் தங்களின் பணத்தை இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல செலவிட்டு, புதிய இடங்களை பார்க்க விரும்புகின்றனர். நடப்பாண்டில் வெளிநாடு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
வெளிநாடு செல்லும் இந்திய பயணிகளின் எண்ணிக்கை 2.25 கோடியாக இருந்ததாக ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா நிறுவனம் கூறுகிறது. 2022ல் இது 122 சதவீதம் அதிகரித்து, 5 கோடியை எட்டும் என்று கணிக்கிறது. இந்திய சுற்றுலா பயணிகள் 2300 கோடி டாலர்களை (ரூ.1.61 லட்சம் கோடி) செலவு செய்தனர். இது 4,500 கோடி டாலராக (ரூ.3.15 லட்சம் கோடி) இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார மந்தம்
ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை வேறு ஒரு ஆழமான பிரச்சினையின் வெளிப்பாடா? ரியல் எஸ்டேட் துறையில், விற்பனையாகாத குடியிருப்புகளின் எண்ணிக்கை 12.8 லட்சமாக மார்ச் 2019ல் இருந்தது. சென்ற ஆண்டு இது 12 லட்சமாக இருந்தது.
சென்ற காலாண்டில், வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் தயாரிப்பு துறையின் வளர்ச்சியும் மட்டுப்பட்டுள்ளது. நாட்டின் தொழில்துறையின் வளர்ச்சியை சுட்டும் முக்கிய குறியீடான சரக்கு ரெயில் போக்குவரத்து வளர்ச்சி நடப்பாண்டில் 3.27 சதவீதமாக இருக்கும் என்று சி.எம்.ஐ.இ நிறுவனம் கூறுகிறது. 201819ல் இது 5.31 சதவீதமாக இருந்தது. கிராமப்புற வாங்கும் திறனும் குறைந்துள்ளது. நெருக்கடியில் உள்ள விவசாயிகள், செலவுகளுக்கு பணம் தேட சிரமப்படுகின்றனர்.
பதினைந்து வருடமாக அதீத வளர்ச்சி பாதையில் சென்று, உலகில் அதிவேகமாக வளரும் பொருளாதாரம் என்ற பெயரை ஈட்டிய இந்திய பொருளாதாரம் இப்போது பலகீனமான நிலையை அடைந்துள்ளது. கடந்த நான்கு காலாண்டுகளாக ஏழு சதவீத வளர்ச்சியை தக்க வைக்க போராடுகிறது.
பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலையை கண்ட இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனம் (ஐ.எம்.எப்) ஆகியவை இந்தியாவின் வளர்ச்சி விகிதம் பற்றிய கணிப்பை குறைத்துள்ளன. 201920க்கான வளர்ச்சி விகிதம் பற்றிய கணிப்பை, இந்திய ரிசர்வ் வங்கி, 7 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக குறைத்துள்ளது. அதே போல் பன்னாட்டு நிதி நிறுவனம் வளர்ச்சி விகிதத்தை 7.5 சதவீதத்தில் இருந்து 7.3 சதவீதமாக குறைத்துள்ளது. பிட்ச் என்ற உலக தரநிர்ணய நிறுவனம் 201920க்கான வளர்ச்சி விகிதம் பற்றிய கணிப்பை 6.6 சதவீதமாக குறைத்துள்ளது.
பொருளாதார போக்குகளை கண்டு கவலையடைந்துள்ள தொழில்துறை தலைவர்கள், பொருளாதார நிலைமை சவாலாக உள்ளது என்கின்றனர். கட்டுமானம் மற்றும் பொறியியல் நிறுவனமான லார்சன் அண்ட் டர்போவின் தலைவர் ஏ.எம்.நாயக், பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதத்திற்குள் இருக்கும் என்கிறார்.
சமீபத்தில் ஹெச்.டி.எப்.சியின் தலைவர் தீபக் பரீக் பொருளாதாரத்தில் குறிப்பிடத் தக்க வேகக் குறைவு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டு கடன் நிறுவனங்களில், நிதித் தட்டுப்பாடு நிலவும் சூழல் பற்றி கவலை தெரிவித்துள்ளார்.
சென்னையை சேர்ந்த பல சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் உரிமையாளர்கள், இந்த மந்தத்திற்கான ஆரம்ப விதைகள் 2016ல் அமல்படுத்தப்பட்ட பண நீக்க நடவடிக்கையில் இருந்து தொடங்கியதாக கருதுகின்றனர். அதிக வேலை வாய்ப்புகள் அளிக்கும் சிறு தொழில் துறையை இது முடக்கியது என்கின்றனர். பண நீக்க நடவடிக்கை தான் பொருளாதாரத்தை மிக நீண்ட காலத்திற்கு, சீர்படுத்தவே முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்திய பேரழிவு நடவடிக்கை ஆகும் என்று பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் முன்னாள் பொருளியல் நிபுணரான பேராசிரியர் ஏ.வி.ஜோஸ் கூறுகிறார்.
நிதி தட்டுப்பாடு நெருக்கடி
பொதுத் துறை வங்கிகளில் வாராக்கடன்கள் மிகவும் அதிகரித்துள்ளன. ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தரவுகளின் படி, மார்ச் 2019 வரையில், பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் வாராக்கடன்களின் அளவு ரூ,17,55,691 கோடியாக உள்ளது. இதன் விளைவாக கடன் அளிக்க பல புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. வங்கிகளுக்கு புதிய முதலீடுகள் அளிக்கப்படுவதன் மூலம், கடன் அளிக்கும் திறனை அதிகரிக்க செய்ய வேண்டும். பொதுத்துறை வங்கிகளுக்கு முதலீடு அரசிடம் இருந்து வர வேண்டும். சென்ற பட்ஜெட்டில் இதற்காக ரூ.60,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வங்கிகளை சீர்படுத்த இது போதாது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
செப்டம்பர் 2018ல், அரசின் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு சொந்தமான, உள்கட்டுமான வளர்ச்சி மற்றும் நிதித் துறையில் பெரும் நிறுவனமான ஐ.எல் எப்.எஸ். வாங்கிய கடன்கள், வைப்புத் தொகைகளை திருப்பிச் செலுத்த முடியாத நிலையை அடைந்தது. இந்நிறுவனத்தின் மொத்த கடன் ரூ.91,000 கோடியாக உள்ளது. மிகக் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. இதன் தொடர் விளைவாக இதர வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் கடன் தேவைகளில் மூன்றில் ஒரு பங்கை பூர்த்தி செய்யும் இந்நிறுவனங்கள் மூலம் தான் சிறு நிறுவனங்கள், நுகர்வோர்களுக்கான வாகன கடன்கள், வீட்டு கடன்கள், பண்டங்களுக்கான கடன்கள் போன்றவை அளிக்கப்படுகிறன.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பொருளாதாரத்தை ஊக்குவிக்க எதுவும் செய்யப்படவில்லை. தேர்தலுக்கு பின் பொருளாதாரம் மீளும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. ஆட்டோமொபைல் துறை இப்போது அரசின் உதவியை நாடியுள்ளது. ஜி.எஸ்.டி மற்றும் கார்ப்பரேட் வரி குறைப்பை கோருகிறது. தற்போது உள்ள 28 சதவீத ஜி.எஸ்.டியை 18 சதவீதமாக, தற்காலிகமாகவாது, குறைக்க கோருகிறது.
இந்த தொழில்துறையின் தலைவர்கள் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சமீபத்தில் சந்தித்து, துறையை மீட்டெடுக்க, ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத் திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை விடுத்தனர். வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடியினால், ஆட்டோமொபைல் துறை, வீட்டு கடன்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கருதுகிறார்கள். நுகர்வோர்களின் வாங்கும் திறனை அதிகரிக்க, வட்டி விகிதங்களை குறைக்க கோருகின்றனர். பொருளாதாரத்தை மீட்டெடுக்க, அரசாங்கம் இவர்களின் கோரிக்கையை ஏற்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நிதித் தட்டுப்பாடு மற்றும் பெரிய அளவிலான வேலையின்மையினால் அனைத்து பகுதிகளிலும் வாங்கும் திறன் குறைந்தது. இது ஆட்டோமொபைல் துறையை பெரிதும் பாதித்துள்ளது. நிதித் தட்டுப்பாட்டில் அதிகம் பாதிக்கப்பட்டது 12 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும், இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தாம். நிதித் தட்டுப்பாட்டை போக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது மிக அவசியமானது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு தேவையான கடன்களை அளித்து, அதன் மூலம் வளர்ச்சியையும், வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்க செய்ய வேண்டும்.
இந்தியாவின் ஆளும் கட்சி, இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக 2024ல் உயர்த்த தன்னம்பிக்கையுடன் திட்டமிட்டுள்ளது. இதற்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 10 சதவீத வளர்ச்சி தேவை. மந்த நிலையில் உள்ள பொருளாதாரத்தில் இத்தகைய வளர்ச்சி சாத்தியமில்லை. அதற்கு பெரும் சீர்த்திருத்தங்கள், கொள்கை முடிவுகள் தேவை.
தமிழகத்தின் நிலை என்ன?
தமிழ்நாட்டில் சென்னையை சுற்றி, ஒரு வளம் கொழிக்கும் ஆட்டோமொபைல் தொழில் மையம் உருவாகியுள்ளது. இது இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகிறது. நாட்டின் ஆட்டோமொபைல் தொழிலில் 30 சதவீதத்தையும், ஆட்டோமொபைல் உதிரிபாக தொழில் துறையில் 35 சதவீதத்தையும் இது அளிக்கிறது. இந்தத் துறையில் ஏற்பட்ட மந்தத்தினால் பெரிதும் பாதிக்கபட்டு, சுமார் ஒரு லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள ஆட்டோமொபைல் மற்றும் உதிரி பாகங்கள் துறையை சேர்ந்த நிறுவனங்கள், கடந்த ஆறு மாதங்களில் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்துள்ளது என்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் தலைவரான எ.சவுந்தர்ராஜன் கூறுகிறார். மந்தம் மேலும் அதிகரித்து வருவதால், வரும் நாட்களில் வேலையிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று கருதுகிறார்.
நிசான் நிறுவனம் 3000 தொழிலாளர்களை நீக்கியுள்ளதாகவும், ஹுண்டாய் நிறுவனம் சுமார் 1,000 தொழிலாளர்களை நீக்கியுள்ளதாகவும் கூறுகிறார். இவற்களில் பெரும்பாலானவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் ஆவார்கள்.
ஆகஸ்டு மாதத்தில் இரண்டு நாள் உற்பத்தி நிறுத்தத்தை அசோக் லேலாண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. தொழிற்சங்கங்கள் இந்த முடிவை எதிர்த்து வருகின்றனர். சமீபத்தில் இந்நிறுவனம் ஒரு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது.
டி.வி.எஸ். குழுமத்தை சேர்ந்த லூகாஸ் டி.வி.எஸ் என்ற முன்னணி உதிரி பாக தயாரிப்பு நிறுவனம் சீரான உற்பத்தி நிறுத்த தினங்களை அறிவித்துள்ளது. சென்ற வாரம் இரண்டு நாட்கள் உற்பத்தியை நிறுத்தியது.
தமிழகத்தில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்கள், செயல்படாத தினங்கள் என்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக சவுந்தர்ராஜன் தெரிவிக்கிறார். இந்த நாட்களில் உற்பத்தி நடக்காது என்றாலும், தொழிலாளர்களுக்கு ஊதியம் அளிக்கப்படும். எதிர்காலத்தில் இதை தொழிலாளர்கள் ஈடு செய்ய வேண்டியிருக்கும். சில நிறுவனங்கள் சம்பள குறைப்பு செய்துள்ளனர்.
வேலை இல்லாத நாட்கள் என்பது இந்தத் துறையில் இன்று சகஜமாகிவிட்டது. பெரும்பாலான ஆட்டோமொபைல் மற்றும் உதிரி பாக உற்பத்தி நிறுவனங்கள் செயல்படாத தினங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. சராசரியாக மாதத்தில் எட்டு செயல்படாத தினங்களை தொழிலாளர்கள் எதிர்கொள்வதாக சவுந்தர்ராஜன் கூறுகிறார்.
பண நீக்க நடவடிக்கை, மின்சார வாகனங்களை ஊக்குவித்தல், சரியான திட்டமிடுதல் இல்லாமல் வாகன புகை வெளியேற்றத்தை குறைக்க செய்தது ஆகியவற்றை அரசு முன்னெடுத்ததால், இந்த மந்தம் உருவாகியுள்ளதாக குற்றம் சாட்டுகிறார்.
அரசாங்கம் வேலைகளை பாதுகாக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இந்த மந்தத்திற்கு காரணம் அரசாங்கம் தான். இதற்கு தீர்வையும் அரசு தான் அளிக்க வேண்டும். வரும் நாட்களில் ஒரு போராட்டத்தை நடத்த திட்டமிடுகிறோம் என்கிறார்.