ஒரு கிராம் தங்கத்தை எல்லோராலும் வாங்க முடியும். ஆனால் ஒரு கேரட் வைரத்தை வாங்க சற்று வசதியானவர்களுக்குத்தான் சாத்தியமாகும். வைரத்துக்கு இந்தியாவை காட்டிலும் சீனா மற்றும் மேற்கு ஆசிய நாடுகள், ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில்தான் அதிக கிராக்கி. இதனால் இந்தியாவில் இருந்து கச்சா வைரம் பட்டை தீட்டப்பட்டு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சீனா உள்ளிட்ட நாடுகளில் சிக்கன நடவடிக்கை, பொருளாதார தேக்க நிலை காரணமாக வைரத்தின் தேவை தற்போது குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.. இதனால் இப்போது உற்பத்தி 30 சதவீதம் வரை குறைந்துள்ளது. கச்சா வைரத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேசமயம் பட்டை தீட்டப்பட்ட வைரத்தின் விற்பனை குறைந்து வருகிறதாம். கச்சா வைர ஏற்றுமதிக்கு அளிக்கப்படும் வங்கிக் கடன் சலுகைக் காலம் 180 நாட்களில் இருந்து 60 நாட்களாகக் குறைந்துவிட்டது. மேலும் வங்கிகள் வைரம் சார்ந்த தொழிலுக்கு கடன் அளிப்பது குறைந்து வருவதால் இத்துறையில் பணப் புழக்கமும் குறைந்துவிட்டது எனவும் இந்த துறையை சேர்ந்த வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஏற்றுமதியாளர்களுக்கு அவர்கள் ஆர்டர் வைத்திருந்தாலும் பணம் பெறுவதற்கு 2 மாதம் வரை கால தாமதம் ஆவதாகவும் தெரிவிக்கிறார்கள்.