சிறப்புக் கட்டுரைகள்

பிப்ரவரி மாதத்தில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 5.6% அதிகரிப்பு

பிப்ரவரி மாதத்தில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 5.6 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. எனினும் வளர்ச்சி வேகம் 53 வாரங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.

புதுடெல்லி

கடந்த பிப்ரவரி மாதத்தில் உள்நாட்டு விமான சேவையை மொத்தம் 1.13 கோடி பயணிகள் பயன்படுத்தி உள்ளனர். சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 5.6 சதவீத வளர்ச்சியாகும். அப்போது பயணிகள் எண்ணிக்கை 1.07 கோடியாக இருந்தது.

பிப்ரவரி மாதத்தில், இண்டிகோ நிறுவனத்தின் விமானங்களில் அதிகபட்சமாக 49.31 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இந்த வகையில் இந்நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்து ஸ்பைஸ் ஜெட் விமானங்களில் 15.58 லட்சம் பேரும், ஏர் இந்தியா விமானங்களில் 14.53 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளனர். ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் (11.33 லட்சம் பேர்), கோ ஏர் விமானங்களில் (10.88 லட்சம் பேர்), விஸ்தாரா விமானங்களில் (45.20 லட்சம் பேர்) பயணம் செய்து இருக்கின்றனர்.

அதிக அளவு இருக்கைகள் நிரம்பிய வகையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் விமான இருக்கைகள் அதிகபட்சமாக 94 சதவீதம் நிரம்பி இருக்கிறது. அடுத்து கோ ஏர் விமானங்களில் 92.60 சதவீதம் நிரம்பி உள்ளது. மூன்றாவதாக ஏர் ஏஷியா விமானங்களில் 91.80 சதவீதம் நிரம்பி உள்ளது. ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் 89.40 சதவீதம் நிரம்பி இருக்கின்றன.

குறித்த நேரத்தில் அதிக சேவைகள் வழங்கிய வகையில் கோ ஏர் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. டெல்லி, மும்பை, ஐதராபாத் மற்றும் பெங்களூரூ ஆகிய நகரங்களில் இந்நிறுவனம் 86.30 சதவீத சேவைகளை குறித்த காலத்தில் வழங்கி உள்ளது. அடுத்து விஸ்தாரா (81.60 சதவீதம்), ஸ்பைஸ்ஜெட் (77.10 சதவீதம்) ஆகிய நிறுவனங்கள் இருக்கின்றன.

சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககம் இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில், கடந்த 2018-ஆம் ஆண்டில் உள்நாட்டு விமான சேவையை மொத்தம் 13.89 கோடி பயணிகள் பயன்படுத்தி இருக்கின்றனர். 2017-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 18.6 சதவீத வளர்ச்சியாகும். அப்போது பயணிகள் எண்ணிக்கை 11.71 கோடியாக இருந்தது.

மதிப்பீடு

நடப்பு நிதி ஆண்டில் (2018-19) உள்நாட்டு விமானச் சேவையில் பயணிகள் எண்ணிக்கை 15 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2017-18-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 12.50 கோடியாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் சர்வதேச விமான பயணிகளின் எண்ணிக்கை 7.50 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.