இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
1.29 கோடி பயணிகள்
நடப்பு ஆண்டு நவம்பர் மாதத்தில் உள்நாட்டு விமான சேவையை மொத்தம் 1.29 கோடி பயணிகள் பயன்படுத்தி இருக்கின்றனர். சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 11 சதவீத வளர்ச்சியாகும். கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அதனை 1.16 கோடி பயணிகள் பயன்படுத்தி இருந்தனர். முந்தைய மாதத்தில் பயணிகள் எண்ணிக்கை 3.98 சதவீதம் உயர்ந்து இருந்தது.
நவம்பர் மாதத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானங்களில் அதிகபட்சமாக 20 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இந்த வகையில் இந்நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இதன் சந்தைப்பங்கு 16.1 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. இண்டிகோ இந்நிறுவனத்தின் சந்தை பங்கு 47.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. கோ ஏர் விமானங்களில் 14 லட்சம் பேரும், ஏர் இந்தியா விமானங்களில் 15 லட்சம் பேரும் பயணம் செய்து இருக்கின்றனர்.
அதிக அளவு இருக்கைகள் நிரம்பிய வகையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் விமான இருக்கைகள் அதிகபட்சமாக 92.8 சதவீதம் நிரம்பி இருக்கிறது. கோ ஏர் விமானங்களின் இருக்கைகள் 92.7 சதவீதம் (இரண்டாவது இடம்) நிரம்பி உள்ளது. மூன்றாவதாக இண்டிகோ விமானங்களில் 91.4 சதவீத இருக்கைகள் நிரம்பி இருக்கிறது. ஏர் ஏஷியா மற்றும் விஸ்தாரா விமானங்களில் நிரம்பிய இருக்கைகளின் எண்ணிக்கை முறையே 87 சதவீதம் மற்றும் 84 சதவீதமாக உள்ளது.
குறித்த நேரத்தில் அதிக சேவைகள் வழங்கிய வகையில் கோ ஏர் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. டெல்லி, மும்பை, ஐதராபாத் மற்றும் பெங்களூரூ ஆகிய நகரங்களில் இந்நிறுவனம் 67.6 சதவீத சேவைகளை குறித்த காலத்தில் வழங்கி உள்ளது. அடுத்து விஸ்தாரா (67.4 சதவீதம்), ஏர் ஏஷியா (66.7 சதவீதம்) ஆகிய நிறுவனங்கள் இருக்கின்றன.
சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககம் இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
சென்ற நிதி ஆண்டில் (2018-19) உள்நாட்டு விமான சேவையை மொத்தம் 12.67 கோடி பயணிகள் பயன்படுத்தி இருக்கின்றனர். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 16 சதவீத வளர்ச்சியாகும். அப்போது பயணிகள் எண்ணிக்கை 10.87 கோடியாக இருந்தது.
60 கோடி டாலர்
நடப்பு நிதி ஆண்டில் இந்திய விமானச் சேவை நிறுவனங்களுக்கு, ஒட்டுமொத்த அளவில் ஏறக்குறைய 60 கோடி டாலர் (சுமார் ரூ.4,230 கோடி) இழப்பு ஏற்படும் என கணித்து இருக்கிறது. நடப்பாண்டு ஜூன் மாதத்தில் இந்திய விமானச் சேவைத் துறை 50-70 கோடி டாலர் நிகர லாபம் ஈட்டும் என அந்த அமைப்பு கூறி இருந்தது.