இவர்களின் கண்டுபிடிப்பில் உருவான ஹெலிகாப்டர் டிரோன் நான்கு கிலோ எடையைத் தாங்கும் வல்லமை கொண்டது. இதைன இரண்டு மணி நேரம் தொடர்ந்து இயக்க முடியும்
மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் சிராக். இவர் பாட்னாவில் உள்ள ஐ.ஐ.டி.யில் பி.டெக் பட்டம் பெற்றவர். நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்ததால் அவர் கல்லூரி நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இரண்டு பெரு நிறுவனங்கள் வேலைக்கு அழைப்பு விடுத்தன. ஆண்டுக்கு பத்து லட்சம் ரூபாய் சம்பளம். ஆனால், சிராக் அந்த அழைப்பை ஏற்கவில்லை.
இதற்கு காரணம் அவர் வெளிநாட்டிற்குச் சென்று உயர்கல்விப் பயில ஆசைப்பட்டார். அமெரிக்காவில் முதுகலை மற்றும் பி.எச்டி.யை முடித்துவிட்டு இந்தியாவில் சுயதொழில் தொடங்க வேண்டும் என்பது அவரது குறிக்கோளாக இருந்தது.
இதற்கிடையே, விண்வெளிப் பொறியியலில் அதிக ஆர்வம் இருந்ததால் அதைப் பற்றி தெரிந்து கொள்ள கான்பூர் ஐ.ஐ.டி ஹெலிகாப்டர் ஆய்வகத்தில் சேர்ந்தார். அப்போது அங்கிருந்த இரண்டு பேராசிரியர்களின் மனநிலையும், சிராக்சின் எதிர்கால திட்டமும் ஒன்றாக இருந்தது. அவர்கள் அனைவரும் இந்தியாவிலேயே ஒரு விண்வெளி சம்பந்தப்பட்ட நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்று நினைத்தனர். எனவே, சிராக் தனது வெளிநாட்டு உயர்கல்விக் கனவைத் தூக்கி எறிந்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு கான்பூர் ஐ.ஐ.டி.யிலேயே முதுகலைப் படிப்பில் சேர்ந்த அவர், கையோடு என்டியூர் ஏர் என்ற நிறுவனத்தையும் தொடங்கினார். அவருடன் அபிஷேக் மற்றும் மங்கள் கோதாரி ஆகிய கல்லூரி இணைப் பேராசிரியர்களும், ராம கிருஷ்ணா என்ற ஐ.ஐ.டி. பட்டதாரியும் கைகோர்த்தனர். கல்லூரி படிக்கும்போதே சிராக் டிரோன்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்திருந்தார். குறிப்பாக இயற்கைப் பேரழிவு நேரங்களில் மீட்புப் பணியில் ஈடுபட உதவும் வகையிலான டிரோன்களை வடிவமைத்து தயாரிக்கத் தொடங்கினர்.
இவர்களின் கண்டுபிடிப்பில் உருவான ஹெலிகாப்டர் டிரோன் நான்கு கிலோ எடையைத் தாங்கும் வல்லமை கொண்டது. அதனை இரண்டு மணி நேரம் தொடர்ந்து இயக்க முடியும். மீட்பு இடத்திற்குச் சென்று இறங்கியதும் அங்கிருந்து தாமாகவே புறப்பட்ட இடத்திற்கு வரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு டிரோன் ஐந்து கிலோ எடையை நூறு கிலோ மீட்டர் தொலைவு வரை சுமந்து செல்லும் திறனைக் கொண்டுள்ளது. இவ்வாறு பல்வேறு மீட்பு வசதிகளுடன் 25-க்கும் மேற்பட்ட டிரோன்கள் உருவாக்கப்பட்டன. இதில் எட்டு விற்பனையாகிவிட்டன.
இவரின் நிறுவனத்துடன் சில இணை நிறுவனங்கள் சேர்ந்து பணியாற்றுகின்றன. டி.ஆர்.டி.ஓ, ஜென் டெக்னாலஜிஸ், டெல்ஹிவரி ஆகிய நிறுவனங்களுக்கு டிரோன்களைத் தயாரித்துக் கொடுப்பதன் மூலம் நல்ல வருமானம் பெறமுடிகிறது. கடந்த நிதியாண்டில் இவர்களது நிறுவனம் ஒரு கோடி ரூபாயை வருமானமாகப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர்களின் டிரோன் சி.ஆர்.பி.எப், பி.எஸ்.எப், ஐ.ஏ.எப் மற்றும் ஏ.டி.எஸ் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகள் தங்களது மீட்புப் பணியில் இணைக்க விருப்பம் தெரிவித்துள்ளன. இவர்களின் டிரோன்கள் உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கு உள்ளிட்ட பேரிடர் சம்பவங்களின் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.