சில மாதங்களுக்கு முன்னர் ஓசூர் வழியாக செல்லும் நெடுஞ்சாலையில் பயணிகளை, ஒரு யானை தொடர்ந்து தாக்கியது. அந்த யானையை சில காலம் கண்காணித்த வனத்துறையினர், பிறகு அதை பிடித்து, ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டுப் பகுதிக்கு பத்திரமாக அனுப்பிவைத்தனர்.
அந்த யானையின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள பட்டையில் உள்ள தொலைதூர டிஜிட்டல் டிராக்கரின் மூலம் அதன் நடமாட்டத்தை எனது கைபேசியில் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்கிறார் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவன பேராசிரியரான ராமன் சுகுமார்.
யானைகளின் நடத்தையை பற்றி அவர் 40 வருடங்களாக ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். அந்த நெடுஞ்சாலை, யானைகளின் வசிப்பிடங்களின் வழியாக சென்று அதை இரண்டாக பிளவுபடுத்தி உள்ளது. இதனால் கோபமடைந்த அந்த யானை, தாக்குதல்களை செய்துள்ளது. வேட்டையாடுதல், காடுகள் அழிப்பு மற்றும் காடுகளின் எல்லைகள் நகரமயமாதல் போன்ற காரணங்களினால் யானைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு, புதிய வாழ்விடங்களை தேடி, நகர பகுதிகளை நோக்கி யானைகளை தள்ளுகிறது. இதனால் அழிவு ஏற்படுகிறது.
யானை-மனிதன் மோதல்கள்
யானைகள் செல்லும் பாதைகளை ரெயில்வே தண்டவாளங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் போன்ற வளர்ச்சிக்கான திட்டங்கள் துண்டாடுவதால், யானைகளினால் ஏற்படும் அழிவுகள் அதிகரிக்கின்றது.
யானைகள் பயிர்களை அழிக்கின்றன. கரும்பு தோட்டங்களுக்குள் சென்று கரும்பு பயிரை உண்கின்றன. உணவு தேவையை இவை எளிதாக பூர்த்தி செய்கிறது. அவற்றிற்கு தினமும் 100 முதல் 160 கிலோ எடையுள்ள பசுமையான உணவு மற்றும் அதிக அளவில் தண்ணீரும் தேவைப்படுகிறது. இவை பாசன வசதி கொண்ட விவசாய நிலங்களில் எளிதாக கிடைக்கிறது.
வனப்பகுதியில் தனியார் நிறுவனங்களின் சுற்றுச்சுவர்கள் அதிக அளவில் இருப்பதால், காடுகளுக்கு திரும்பிச்செல்ல முடியாமல், யானைகள் வழி தவறுகின்றன. இதனால் மனிதர்களுடன் மோதல்கள் உருவாகி அதன் விளைவாக யானைகளும், மனிதர்களும் கொல்லப்படுகின்றனர் என்கிறார் தமிழக வனப்பாதுகாப்பு துறையின் முன்னாள் கூடுதல் தலைமை பாதுகாவலர் அஸ்தோஷ் சமந்த் சிங்கர்.
கடந்த வருடத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம், வனத்துறை அதிகாரிகளின் உதவியை, நெடுஞ்சாலைகளுக்கான திட்டமிடுதல் மற்றும் டி.பி.ஆர். உருவாக்கத்தின் போதே பெறத் தொடங்கியுள்ளது என்கிறார் சிங்கர். இதன் மூலம் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் மேம்படும் என்று கருதப்படுகிறது.
கோவை, வாளையார் (கேரளா), பாலக்காடு மற்றும் ஓசூர், தர்மபுரி பகுதிகளில் உள்ள ரெயில்வே பாதைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், யானைகள் இருக்கும் பகுதிகளில் செல்லும் ரெயில்களின் வேகத்தை குறைக்கக்கோரி மாநில வனத்துறை அதிகாரிகள், தெற்கு ரெயில்வே அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தண்டவாளங்களை யானைகள் கடப்பதை பார்த்தால், உடனே ரெயில்வே துறைக்கு தகவல் அனுப்ப வன கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தண்டவாளங்களை யானைகள் கடக்கும் பகுதிகளில், ரெயில் என்ஜின் டிரைவர்கள் ரெயில்களை மெதுவாக இயக்கக்கோரி எச்சரிக்கை பலகைகளை வனத்துறை நிறுவி வருகிறது. ரெயில்வே தண்டவாளங்களின் அருகே உள்ளூர் மக்கள், குப்பைகள் கொட்ட தடை செய்தும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படுகின்றன.
மின்சார கம்பிகள்
யானைகள் வசிக்கும் பகுதிகள் வழியாக செல்லும் உயர் அழுத்த மின்சார கம்பிகளின் உயரத்தை அதிகரிக்கச்செய்ய, மின் வாரியத்திடம் வனத்துறை முயற்சி செய்து வருகிறது. தங்களின் பயிர்களை யானைகளிடம் இருந்து பாதுகாக்க, யானைகளை கொல்லும் மின்சார வேலிகளை அமைக்கும் உள்ளூர் மக்கள் மீது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் இதர குற்றத்தடுப்பு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. இந்த மோதலில் மனிதர்களும் உயிரிழக்கின்றனர். 2019-ல் தமிழகத்தில், 50 நபர்கள் யானைகளால் கொல்லப்பட்டுள்ளனர்.
யானைகளினால் மனிதர்கள் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. முக்கியமாக கோவை பகுதியில், ஆண்டுக்கு 5 முதல் 10 உயிரிழப்புகள் நடக்கின்றன என்கிறார் இந்திய-அமெரிக்க வனவிலங்கு சங்கத்தின் நிர்வாக அறங்காவலரான டாக்டர் சி.அறிவழகன்.
யானை தந்தங்களுக்காக வேட்டை
யானைகள் வேட்டையாடப்படுவது பற்றிய வழக்குகள் எதுவுமில்லை என்று அதிகாரப்பூர்வமான தகவல்கள் கூறினாலும், வனவிலங்கு கடத்தல் தடுப்பு மற்றும் வனவிலங்கு குற்றவியல் நிபுணர்கள் இதை மறுக்கின்றனர்.
யானை வேட்டை இன்றும் தொடர்கிறது. ஆனால் அதன் நடைமுறை மாறிவிட்டது. தந்தங்களுக்காக கொம்பன் யானைகள் கொல்லப்படுவது, தமிழகம், கர்நாடகம், கேரளாவில் அதிக அளவில் நடைபெறுகிறது. கொம்பன் யானைகள் அதிக அளவில் இந்த தென் மாநிலங்களில் உள்ளன. ஆனால் அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மக்கனஸ் ஆண் யானைகளுக்கு பெரும்பாலும் தந்தங்கள் இருப்பதில்லை.
வேட்டையாடுதல் நின்று விட்டாலும், காட்டு யானைகள் விஷம் கொடுத்து கொல்லப்படுகின்றன. பிறகு அவை இயற்கை மரணமாக காட்டப்படுகின்றன என்று பெயர் சொல்ல விரும்பாத நிபுணர்கள் கூறுகின்றனர். சத்தியமங்கலம் காடுகளில் சமீபத்தில் நடந்த சம்பவத்தில், 200 முதல் 250 யானைகள் குறுகிய காலத்தில் மரணம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. அதே காலக்கட்டத்தில் டெல்லியில் சுமார் 500 கிலோ எடை கொண்ட சட்ட விரோதமான யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன.
இதைப்பற்றி தீவிரமாக விசாரணை நடத்திய பின், தமிழகம், கேரளா, கர்நாடகா எல்லை பகுதிகளில் இயங்கும் வேட்டையாடும் குழுக்கள் இதன் பின்னணியில் இருப்பது தெரியவந்தது. மாநிலங்களிடையே இயங்கும் பல குழுக்கள் இன்றும் இயங்குகின்றன. மாநில காவல் துறையினரிடம் இருந்து தப்ப, மாநிலம் விட்டு மாநிலத்திற்கு மாறுகின்றனர் என்று வனவிலங்கு நிபுணர்கள் கூறுகின்றனர்.
யானை தந்தங்களை வேட்டையாடுபவர்கள் அவற்றை சுமார் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கள்ளச்சந்தையில் விற்கின்றனர். இவை இறுதியாக சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு நேபாளம், மியான்மர் வழியாக கடத்தி செல்லப்பட்டு பத்து மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. அங்கு இவை அலங்கார பொருட்கள், மருந்துகள், மத சடங்குகளுக்காக பயன்படுத்தப்படுவதால், இவற்றிற்கு பெரும் தேவை உள்ளது. சட்டப்படி தடை செய்யப்பட்டாலும், யானை தந்தங்கள் கடத்தப்படுவதில், சில அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். உயிருடன் இருக்கும் யானைகள் நேபாளம் வழியாக சீனா மற்றும் இதர தென்கிழக்கு நாடுகளுக்கு கடத்தப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. அந்நாடுகளில் சுற்றுலா தலங்களிலும், யானைகள் காப்பக சுற்றுலா தலங்களிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் தமிழகத்தில் உள்ள 20 காட்டு பகுதிகளில் ஆண்டுக்கு 30 அல்லது 40 வேட்டை தடுப்பு முகாம்களை தாங்கள் நடத்துவதாக வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த 20 வருடங்களில் இத்தகைய முகாம்களின் விளைவாக வேட்டையாடுதல் முற்றிலும் தடுக்கப்பட்டுவிட்டதாக நம்புகின்றனர்.
வேட்டையாடுதல் இப்போது ஒரு பிரச்சினை இல்லை. பல வருடங்களாக தொடர்ந்து நடத்தப்படும் விரிவான வேட்டை தடுப்பு முகாம்கள் மற்றும் கடுமையான கண்காணிப்புகள் மூலம் இவை நிறுத்தப்பட்டுள்ளன என்கிறார் தமிழ்நாடு தலைமை வனவிலங்கு காப்பாளர் சஞ்சய் குமார் ஸ்ரீவத்சவா.
வனக்காவலர்களுக்கு போதுமான ஆயுதங்கள், பயிற்சிகள் மற்றும் நவீன உபகரணங்கள் அளிக்கப்படுவதில்லை. போதுமான சம்பளம் அளிக்கப்படுவதில்லை என்று கடத்தல் தடுப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் இவ்வகை குற்றங்கள் நடைபெறும்போது, பணத்திற்காக அவற்றை அவர்கள் கண்டுகொள்வதில்லை என்கின்றனர்.
அதிகம் அறியப்படாத உண்மைகள்
யானைகள் கூட்டமாக ஒரு கால்வாயை கடக்கும்போது, ஒரு யானைக்குட்டி மட்டும் தொடர்ந்து செல்லாமல், கால்வாய் நீரில் குளித்து விளையாட முடிவு செய்கிறது. அதன் தாய் மற்றும் மற்றொரு இளம்யானை அதை கூட்டிச்செல்ல திரும்பி வருகின்றன. யானைக்குட்டியை, தாய் யானை தும்பிக்கையினால் தட்டுகிறது. ஆனால் யானைக்குட்டி திரும்பி வர மறுக்கிறது. அப்போது அந்த இளம் யானை, யானை குட்டிக்கு ஒரு பாடம் புகட்ட அதை காலால் உதைக்கிறது. பிறகு அந்த யானைக்குட்டி அமைதியாக ஆனால் வெறுப்புடன் கீழ்படிகிறது.
சில மாதங்களுக்கு முன்னர், திருச்சியில் கோவில் யானை ஒன்று, பல வருடங்களாக அதற்கு பாகனாக இருந்த நபரை கொன்றுவிட்டது. காரணம் அந்த யானை பாகனுக்கும், யானைக்கும் இடையே ஒரு புரிதல் பல வருடங்களாக இருந்தது. பக்தர்கள் அளிக்கும் பணம் மற்றும் பொருட்கள் யானை பாகனுக்கும், பழங்கள் யானைக்கும் என்று பிரித்து கொண்டனர்.
ஆனால் இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்பில் இருந்து, யானைக்கு பழங்களை கொடுக்க, யானை பாகன் மறுத்தார். இதனால் கோபம் கொண்ட யானை, அந்த பாகனை தாக்கியது. யானைகளுக்கும் தெளிவான நியாய உணர்வுகள் உண்டு என்பதை இது காட்டுகிறது. மனிதர்களை போல் யானைகளும் உணர்ச்சி வசப்படும். நீண்ட வாழ்நாள் கொண்டவை. தம் குட்டிகள் மீது பாசம் கொண்டவை. யானை கூட்டத்திலேயே வயதான யானைகளின் சொற்படி நடப்பவை.
60 முதல் 70 ஆண்டுகள் அவை உயிர் வாழும். 10 அல்லது 12 வயதானவுடன் ஆண் யானைகள் தம் கூட்டத்தில் உறவு கொள்வதை தடுக்க, கூட்டத்தை விட்டு வெளியேற்றப்படுகின்றன. பிறகு அவை இளம் ஆண்கள் குழுவாக ஒன்றாக சுற்றுகின்றன. பின்னர் வெவ்வேறு யானை கூட்டங்களுடன் இணைகின்றன. ஒரு இளம் யானை மனிதர்களிடம் இருந்து அச்சுறுத்தலை சந்தித்தால், இதர யானைகளுக்கு மட்டுமே கேட்கும்படியான எச்சரிக்கை ஒலி எழுப்பும். பருவ வயதை எட்டும் இளம்பெண் யானைகள், தம் கூட்டத்தை விட்டு வெளியேறி இந்த இளம் ஆண் யானைகளை நாடி செல்லும். பிடித்தமான ஆண் யானையுடன் உறவுகொண்டு, பிறகு கருத்தரித்த உடன், தம் சொந்த கூட்டத்திற்கு திரும்பும். 18 முதல் 20 மாதங்கள் பேறு காலம் முடிந்தபின், அங்கு தன் குட்டியை பெற்றெடுக்கும்.
யானைகளின் கண் பார்வை பலவீனமானது. ஆனால் மோப்ப சக்தி மற்றும் கேட்கும் திறன் மிக வலுவானது. மனிதர்களுக்கு கேட்காத ஒலிகளையும் கேட்கும் திறன் படைத்தவை. யானை கூட்டத்தின் தலைவியான வயதில் மூத்த பெண் யானை அல்லது பாட்டி யானை கோபம் கொண்டால், மொத்த யானை கூட்டமும் தாக்குதலுக்கு தயாராகும். அவைகளின் தாக்குதலில் இருந்து தப்ப ஓடிச்செல்வதே ஒரே வழி என்கிறார் அறிவழகன்.
யானைகள் மதுவை ருசிப்பதும் உண்டு. சில வருடங்களுக்கு முன்பு கோவை அருகே உள்ள காட்டிற்கு புதிதாக பணியில் சேர்ந்த வனத்துறை அலுவலர் ஒருவர் சென்றபோது, வனக்காவலர்கள், அவரை யானைகள் கூட்டமாக முகாமிட்ட பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று தடுத்தனர்.
ஆனால் பிடிவாதமாக அப்பகுதிக்கு சென்ற அலுவலர், அங்கு யானைகள் அப்பகுதி பழங்குடியினர் தயாரித்த சாராயத்தை குடிப்பதை கண்டார். சாராயம் காய்ச்சப்பட்ட எந்த ஒரு பானையும் உடையாமல் அப்படியே இருந்தன. தும்பிக்கை மூலம் அவற்றில் இருந்த சாராயத்தை யானைகள் அப்படியே உறிஞ்சி குடித்து விட்டன! மனிதர்களை போல, சில யானைகளும் வனத்துறையில், அனைத்து அரசாங்க சலுகைகள் மற்றும் சம்பளத்துடன் பணிபுரிகின்றன. தம் கூட்டத்தினரால் கைவிடப்பட்ட சில யானை குட்டிகள் இவற்றில் சில. காட்டு யானைகள், மனிதர்களின் கைப்பட்ட குட்டிகளை கைவிடுகின்றன. பொதுவாக இவை காப்பாற்றப்பட்டு ஒரு பெண்ணின் பராமரிப்பில் வளர்க்கப்படுகின்றன. அவர் ஒரு வனக்காவலர் அல்லது யானைப்பாகனின் மனைவியாக இருப்பார். இந்த குட்டிகளை ஒரு குழந்தையை போல் வளர்ப்பார்.
(தொடர்ச்சி நாளை வெளிவரும்...)