பெரும்பாலானோருக்கு ஓட்டல் சாப்பாடு ஒத்துக்கொள்வதில்லை. அதனால் நோயாளிகளின் நலன் கருதி பல தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தாங்களே உணவு சமைத்து வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் செயல்படும் அமைப்பு ஒன்றுடன் அங்குள்ள பள்ளி மாணவ-மாணவிகளும் இணைந்திருக்கிறார்கள்.
அங்குள்ள மூன்று ஆஸ்பத்திரிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருப்பவர்களுக்கு தங்கள் வீடுகளில் சமைக்கும் உணவுகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அவர்களின் உணவு சேவை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தாங்கள் பள்ளிக்கூடத்திற்கு எடுத்துவரும் மதிய சாப்பாட்டுடன் நோயாளிகளுக்கு தனியாக பார்சல் போட்டு எடுத்து வருகிறார்கள். அந்த சாப்பாட்டு பொட்டலங்களை பள்ளிக்கூடத்தில் ஒன்றாக சேகரிக்கிறார்கள். பின்னர் உணவு இடைவெளியின்போது ஆஸ்பத்திரிகளுக்கு எடுத்து சென்று நோயாளிகளுக்கு வழங்குகிறார்கள்.
இந்த சேவையில் மாணவர்களை ஒன்றிணைத்தவர், மனிந்தர் பால் சிங். தொண்டு நிறுவனத்தை சேர்ந்த இவர் முதலில் வீட்டில் சமைத்து எடுத்து வந்து நோயாளிகளுக்கு வழங்கி வந்திருக்கிறார். தனிமையில் இந்த சேவையை தொடர்ந்து செய்வதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதை உணர்ந்திருக்கிறார். பள்ளிக்கூடங்களுக்கு மாணவ-மாணவிகள் மதிய உணவு எடுத்து செல்வதை கவனத்தில் கொண்டவர் அவர்களையும் சேவைப்பணியில் இறக்கிவிட்டார்.
உணவை பகிர்ந்து உண்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியை வேறு எதிலும் பெற முடியாது. முதல்கட்டமாக வாரம் இரு தினங்கள் நோயாளிகளுக்கு உணவு வழங்கிக்கொண்டிருக்கிறோம். இதற்காக 4100 மாணவர்கள், 160 ஆசிரியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து உணவு எடுத்து வருகிறார்கள். அதனால் இந்த சேவையை சிரமமின்றி தொடர முடிகிறது என்கிறார்.